சனி, 18 ஆகஸ்ட், 2012

ரிலையன்ஸ்க்கு சலுகை 29 ஆயிரத்து 33 கோடி,GMRக்கு 3,415 கோடி....

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த மெகா ஊழலை மிஞ்சும் வகையில், தற்போது மேலும் பல ஊழல்கள் நடந்திருப்பது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில், 1.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும்,  அளவுக்கும், டில்லி விமான நிலைய பணிகளில், தனியார் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 3,415 கோடி ரூபாய் அளவுக்கும், ஊழல் நடந்து உள்ளது தெரியவந்துள்ளது. மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலை மிஞ்சும் அளவுக்கு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சுரங்க ஒதுக்கீடு: கடந்த 2005லிருந்து, 2009 வரையிலான காலத்தில், 150 நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், சரியான ஏல நடைமுறை பின்பற்றப்படவில்லை. ஏல முறையை பின்பற்றாமல், சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதால், எஸ்ஸார் பவர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் உள்ளிட்ட, 25 நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. இதன் மூலம், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முறையான ஏல நடைமுறையின் கீழ், சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அரசுக்கு இந்த இழப்பீடு ஏற்பட்டிருக்காது. கடந்த 2010 - 11ம் ஆண்டு காலத்தில், சராசரி தயாரிப்பு செலவு மற்றும் சராசரி விற்பனை விலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, கணக்கிட்டதில், 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக, மதிப்பிட்டுள்ளோம்.
ரிலையன்ஸ்: மத்திய பிரதேசத்தில் உள்ள சாசன் மின் நிலையத்தில், 4,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பணியை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த மின் நிலையத்துக்காக, விதிமுறைகளை மீறி, உபரியாக உள்ள நிலக்கரிகளை எடுத்துக் கொள்ள, அந்த நிறுவனத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனம், 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கு, முறைகேடாக லாபம் அடைந்துள்ளது. இந்த தொகையும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடாகவே கருத வேண்டும்.
விமான நிலையம்: டில்லி விமான நிலைய நிலத்தை குத்தகைக்கு விட்டதிலும், அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. டில்லி விமான நிலையம், தற்போது அரசு - தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. டில்லி விமான நிலைய ஆணையம் லிட்.,டும் (டி.ஐ.ஏ. எல்.,), ஜி.எம்.ஆர்., என்ற தனியார் நிறுவனமும் இணைந்து, விமான நிலைய பொறுப்புகளை கவனித்து வருகின்றன. விமான நிலைய திட்டப் பணிகளுக்காக, இந்த நிறுவனங்களுக்கு, 4,800 ஏக்கர் நிலம் குத்தகைக்கு ஒதுக்கப்பட்டது. இதற்காக, ஆண்டு குத்தகையாக, அந்த நிறுவனங்களுக்கு 100 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத்திலிருந்து, 60 ஆண்டுகளுக்கு, இந்த நிலத்தின் மூலம், டி.ஐ.ஏ.எல்.,லும், ஜி.எம். ஆர்., நிறுவனமும், 1,63,557 கோடி ரூபாய் லாபம் ஈட்ட முடியும். நிலைமை இவ்வாறு இருக்க, ஆண்டுக்கு, வெறும் 100 ரூபாய் மட்டுமே, குத்தகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய மேம்பாட்டு திட்டப் பணிகளுக்காக நிதி திரட்டுவதற்காக, இந்த இரண்டு நிறுவனங்களும், விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம், கட்டணம் வசூலித்துள்ளன. இந்த நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், மேம்பாட்டுப் பணிகளுக்காக, பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, எந்த விஷயமும் இடம் பெறாத நிலையில், ஒப்பந்த விதிமுறைகளை மீறி, இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த நிறுவனங்கள், 3,415 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு நெருக்கடி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் காலத்தில், அந்த துறையை, பிரதமர் மன்மோகன் சிங், கவனித்து வந்ததால், அவர் பதவி விலக வேண்டும் என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால், பிரதமருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக