புதன், 1 ஆகஸ்ட், 2012

மின் தொகுப்பில் கோளாறு: 22 மாநிலங்களில் Power Shortage

புதுடில்லி: நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் உள்ள மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும், மின் தொகுப்புகளில், நேற்று ஒரே நேரத்தில் கோளாறு ஏற்பட்டதால், டில்லி, மேற்கு வங்கம் உட்பட, 22 மாநிலங்கள் இருளில் மூழ்கின. நாட்டில் உள்ள, 60 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அந்தந்த பிராந்தியங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் தொகுப்புகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும், குறிப்பிட்ட அளவுகளில் பிரித்து வினியோகிக்கப்படுகிறது.
அனுமதிக்கப்பட்டுள்ள அளவை விட, அதிக அளவில் மின்சாரம் எடுக்கப்பட்டால், மின் தொகுப்பில் மிகப் பெரிய அளவில் கோளாறு ஏற்பட்டு, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும். மின்சாரத்தை பிரித்து அனுப்பும் பணியை செய்வதற்காக, நாட்டில், வடக்கு, கிழக்கு, வட கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆகிய மின் தொகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தெற்கு மின் தொகுப்பைத் தவிர, மற்ற மின் தொகுப்புகள், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், வட மாநிலங்களுக்கு மின்சாரம் அளிக்கும், வடக்கு மின் தொகுப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், டில்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் இருளில் மூழ்கின. டில்லியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின், கோளாறு சரி செய்யப்பட்டு, நிலைமை சீரடைந்தது.

மீண்டும் கோளாறு: இந்நிலையில், நேற்று பகல், 1.30 மணிக்கு, வடக்கு மின் தொகுப்பில் திடீரென மீண்டும் கோளாறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, கிழக்கு மற்றும் வட கிழக்கு மின் தொகுப்புகளிலும், அடுத்தடுத்து கோளாறு ஏற்பட்டது. இதனால், டில்லி, உ.பி., அரியானா, மேற்கு வங்கம், பஞ்சாப், காஷ்மீர், ஒடிசா, பீகார், ராஜஸ்தான் மற்றும் அசாம் உள்ளிட்ட, 22 மாநிலங்களில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. டில்லியில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மக்கள், தங்கள் அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகினர். 300க்கும் மேற்பட்ட ரயில்கள் நேற்று இயங்கவில்லை. நாட்டில் உள்ள, 60 கோடி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் மின் துறை ஊழியர்களின் கடும் முயற்சியின் காரணமாக, மாலை 5 மணிக்கு பின், டில்லியில் ஓரளவு மின்சாரம் கிடைத்தது. இரவு 8 மணிக்கு மேல், பெரும்பாலான மாநிலங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நிலைமை சீரானது.

நடவடிக்கை: மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில், ""மின் தொகுப்பிலிருந்து, மாநில அரசுகள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமான மின்சாரத்தை எடுத்தால், மின் தொகுப்பில் கோளாறு ஏற்பட்டு, மின் வினியோகம் பாதிக்கப்படும். இன்றைய (நேற்று) பிரச்னையை பொறுத்தவரை, குறிப்பிட்ட சில மாநிலங்கள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமான மின்சாரத்தை எடுத்ததால், கோளாறு ஏற்பட்டு விட்டதாக, அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இதுபோன்ற நடவடிக்கைகளை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

காரணம் என்ன? ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட மாநிலங்கள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக அளவு மின்சாரத்தை, மின் தொகுப்புகளில் இருந்து எடுத்துக் கொண்டதே, நேற்றைய பிரச்னைக்கு காரணம் என, தெரியவந்துள்ளது. குறிப்பாக, கிழக்கு மின் தொகுப்பிலிருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், அடுத்தடுத்த மின் தொகுப்புகளில் ஏற்பட்ட கோளாறு, 22 மாநிலங்கள் இருளில் மூழ்க காரணமாக ஆகி விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டில்லியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், சிறப்பு கோர்ட்டில் நடந்த "2ஜி' வழக்கு விசாரணையில், மதியத்துக்கு பின் பாதிப்பு ஏற்பட்டது.

* இணையம் மூலம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவதற்கான கடைசி நாளும், நீட்டிக்கப்பட்டுள்ளது.

* நேற்று ஏற்பட்ட மின்சார துண்டிப்பு, உலகில் இதுவரை நடந்த மின் துண்டிப்புகளில், மிகப் பெரிய அளவிலானது என, மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* இந்தியாவை பொறுத்தவரை, ஒரே நேரத்தில், மூன்று மின் தொகுப்புகளில், அடுத்தடுத்து கோளாறு ஏற்படுவது, இதுவே முதல் முறை.

* வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மின் தொகுப்புகள், 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொண்டு செல்லும் திறன் கொண்டவை.

* உ.பி., பீகார், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள், தங்களுக்கு அனுமதிக்கபட்ட அளவை விட, அதிகமான மின்சாரத்தை, மின் தொகுப்பில் இருந்து எடுக்கவில்லை என, மறுத்துள்ளன.

டில்லியில் மெட்ரோ ரயில் பாதிப்பு: தலைநகர் டில்லியில் இரண்டாவது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சுரங்கப் பாதைகளில் சென்று கொண்டிருந்த ரயில்களும் நிறுத்தப்பட்டதால், அங்கிருந்து வெளியேற முடியாமல், பொதுமக்கள் அவதிப்பட்டனர். முக்கிய சாலைகளில், போக்குவரத்து சிக்னல்கள் இயங்காததால், டில்லி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் விடுமுறை: மேற்கு வங்கத்திலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அங்கும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புர்த்வான் மாவட்டத்தில் சுரங்கப் பணிகளில் ஈடுபட்டிருந்த 200 தொழிலாளர்கள், அங்கிருந்து வெளியேற முடியாமல், அவதிப்பட்டனர். அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. சில மணி நேர கடும் போராட்டத்துக்கு பின், அவசர ஏணிகள் மூலம், அனைவரும் வெளியேற்றப்பட்டனர். முதல்வர் மம்தா கூறுகையில், "நிலைமை முற்றிலும் சீரடைவதற்கு, பத்து மணி நேரங்களுக்கு மேல் ஆகும்' என்றார். மதியத்துக்கு பின், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

உ.பி.,க்கு "நோட்டீஸ்': மின் தொகுப்பிலிருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக மின்சாரம் எடுத்தாக, உ.பி., அரசு மீது, மத்திய மின் துறை அமைச்சகம் சார்பில் பிரதமருக்கு புகார் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், "மின்சார வினியோகம் தொடர்பான விதிமுறைகளை, உ.பி., மாநில அரசு, முறையாக பின்பற்றவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதுகுறித்து, வரும் 16ம் தேதி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, உ.பி., மாநில மின் துறை அதிகாரிகளுக்கு, மத்திய மின் ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் "நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக