வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

189 ஆண்டு வயதான மரம் விழுந்தது: "குளோனிங்' முறையில் மீண்டும்

 ஊட்டியில், 1823ம் ஆண்டில் நடப்பட்ட பழமையான ஓக் மரம் விழுந்தது; இதன் கிளைகளில் இருந்து "குளோனிங்' முறையில் நாற்றுகளை உருவாக்கி, மீண்டும் அதே பகுதியில் நடவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கன்னேரிமுக்கு என்ற பகுதிக்கு வந்த ஆங்கிலேயரான ஜான் சலிவன், அங்கு தனது முதல் குடியிருப்பை கட்டினார். அதன் பின் 1823ல், ஊட்டியில் "ஸ்டோன் ஹவுஸ்' என்ற கட்டடத்தை கட்டினார். அதன் வளாகத்தில், "ஓக்' மரம் ஒன்றையும் நட்டார். பின்பு, அந்த கட்டடம் 1847ல் இருந்து கிராம பள்ளியாக செயல்பட்டு வந்தது. 1870ம் ஆண்டு முதல் 1937ம் ஆண்டு வரை, சென்னை ராஜதானி ஆளுநரின் கோடைக்கால செயலகமாக செயல்பட்டு வந்தது. அப்போது, ஓக் மரத்தின் நூற்றாண்டை குறிக்கும் வகையில், 1923ம் ஆண்டு சென்னை ராஜதானியின் ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபுவின் மனைவி, இதே பகுதியில் வேறு இரண்டு ஓக் மரங்களை நட்டார். கடந்த 1955ம் ஆண்டு முதல் இன்று வரை, அந்த கட்டடம் ஊட்டி அரசு கலை கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 189 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த மரம், தற்போது விழுந்துவிட்டது. இது, ஊட்டிவாசிகளை கவலையடைய செய்துள்ளது. இந்த மரத்தை மீண்டும் இதே பகுதியில் உயிர்பிக்கும் வகையில், விழுந்த மர கிளையின் துண்டுகளை எடுத்து, நாற்றுக்கள் உருவாக்கி, நடவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாவரவியல் ஆராய்ச்சியாளர் ராஜன் கூறுகையில், "விழுந்த மரத்தின் கிளை துண்டுகளை எடுத்து "குளோனிங்' முறையில் மரக்கன்றை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக