புதன், 22 ஆகஸ்ட், 2012

1 ஜுலை 1938 அன்று இந்தி எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்பட்டது

மொழிப்போர் / அத்தியாயம் 5
இந்தித் திணிப்புக்கு எதிரான எங்களுடைய போராட்டம் அறவழியில் நடக்கும். இந்தித் திணிப்பின் ஆபத்து குறித்து மக்களைச் சந்தித்துப் பிரசாரம் செய்வோம். உண்ணாவிரதம் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்துவோம். ஊர்வலங்கள் செல்வோம். பேரணிகள் நடத்துவோம். தேவைப்பட்டால் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம். இதுதான் போராட்டக்காரர்கள் விடுத்த அறிவிப்பு. ஆனால் அதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து விமரிசனங்கள் எழுந்தன.
சத்தியாக்கிரகம் என்பது புனிதமான, தூய்மையான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவேண்டிய கடைசி ஆயுதம். அதனை இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தலாமா? என்று கேள்வி எழுப்பினார் முதலமைச்சர் ராஜாஜி. சத்தியாக்கிரகம்கூட காங்கிரஸ்காரர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பது ராஜாஜி எழுப்பிய கேள்வியின் உள்ளர்த்தம். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அறவழியிலான போராட்டங்கள் தொடங்கின.

போராட்டத்தில் ஈடுபடுவதற்கு வசதியாக குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும்
பத்துக்கும் மேற்பட்டோர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுக்குத் தலைமையேற்க ஒரு சர்வாதிகாரி. செ.தெ. நாயகம் உள்ளிட்ட பதிமூன்று பேர் சர்வாதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஈழத்து சண்முகானந்த அடிகள், கே.எம். பாலசுப்ரமணியம், ஜி.என். ராஜூ, குடந்தை எஸ்.கே. சாமி, எம்.எஸ். மொய்தீன் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
3 ஜூன் 1938 அன்று முதலமைச்சர் ராஜாஜியின் வீட்டுக்கு முன்னால் மறியல் போராட்டம் நடந்தது. அதற்குத் தலைமையேற்றவர் செ.தெ. நாயகம். மறியலில் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைதாகினர். அதன்பிறகு ஈழத்தடிகள் தலைமையில் அடுத்த குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் கைது செய்தது காவல்துறை. பின்னர் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் செ.தெ. நாயகத்துக்கு ஒரு மாத வெறுங்காவல் தண்டனை – இருநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சண்முகானந்த அடிகளுக்கு நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது.
ஸ்டாலின் ஜெகதீசன் என்பவர் இந்தித் திணிப்பு உத்தரவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றைத் தொடங்கியிருந்தார். ஆனால் அவருடைய உண்ணாவிரதம் பாதியிலேயே முடிந்தது.
அதன்பிறகு பல்லடம் பொன்னுச்சாமி என்பவர் முதலமைச்சர் ராஜாஜியின் வீட்டுக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டு தினங்களில் அவரைக் கைதுசெய்த காவலர்கள் அவர்மீது வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் அவருக்கு ஆறு வாரக் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கைதுகளும், சிறைத்தண்டனைகளும் தொடர்ந்தபோதும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நிற்கவில்லை. தமிழ் ஆதரவாளர்களையும் இந்தித்திணிப்பு எதிர்ப்பாளர்களையும் உள்ளடக்கிய குழுவினர் இந்தித் திணிப்புக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்திப் பாடத்தைக் கட்டாயமாக வலியுறுத்தும் பள்ளிகளைப் புறக்கணித்து, வேறு பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புங்கள் என்று பெற்றோரிடம் கேட்டுக் கொண்டனர். முக்கியமாக, இந்தியைக் கட்டாயப் பாடமாக நடத்தவேண்டாம் என்று பள்ளி முதல்வர்களுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் கட்டாய இந்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை அடையாளம் கண்டு, அந்தப் பள்ளிகளுக்கு முன்னால் மறியல் போராட்டங்கள் நடந்தன. அந்த வகையில் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள இந்து தியாலஜிகல் பள்ளிக்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் குறுக்கே நின்று கொண்டு மறியல் செய்தனர். இந்தித் திணிப்பு ஒழிக! தமிழ் வாழ்க! உடனடியாகக் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
தொண்டர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு பிரிவு மறியலில் ஈடுபட்டுக் கைதானதும், அடுத்த பிரிவு களத்தில் இறங்கியது. முதலமைச்சர் ராஜாஜியின் வீட்டுக்கு முன்னால் தினமும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது தமிழன் தன்னுடைய தாய்மொழிக்காகப் போராடினால் கைது செய்வதா என்ற கண்டனக்குரல் எழுந்தது. ஆனால், முதலமைச்சர் ராஜாஜி வீட்டுக்கு முன்னால் மறியல் செய்தவர்களைத்தான் நாங்கள் கைது செய்கிறோம் என்றார்கள் காவல்துறை அதிகாரிகள். உடனடியாக முதலமைச்சர் வீட்டுக்கு முன்னால் மறியல் செய்ய வேண்டாம், அவர்கள் அனைவரும் பொது இடங்களில் மறியல் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார் பெரியார்.
10 ஜூன் 1938. சென்னை கதீட்ரல் சாலையில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சி.என். அண்ணாதுரை கலந்துகொண்டு பேசினார். அவர் பேசி மூன்று மாதங்கள் கழித்து அந்தப் பேச்சுக்காக அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டு, நான்கு மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் போராட்டத்தைத் தொடரும் பொறுப்பை மாணவர்கள் ஏற்றனர். அவர்கள் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, சிறை செல்லாமல் எஞ்சியிருக்கும் தலைவர்களைக் கொண்டு பேசச் செய்தனர்.
கும்பகோணத்தில் நடந்த இந்தி எதிர்ப்புக்கூட்டத்தில் பேசிய பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ‘கட்டாய இந்தியை அறிமுகப்படுத்துவதே தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காகத்தான். ஆங்கிலக் கல்வி பார்ப்பனர் அல்லாதாரைப் பகுத்தறிவு வழியில் சுதந்தரமாகச் சிந்திக்கச் செய்வதைத் தடுப்பதற்காக பார்ப்பனர்கள் ஆங்கிலத்தைப் பாடத்திட்டத்தில் இருந்து அகற்றப் பார்க்கிறார்கள். அந்த இடத்தில் இந்தியை நுழைக்கப் பார்க்கிறார்கள்’ என்று பேசினார்.
கட்டாய இந்தியைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துவது இந்தியாவைச் சமஸ்கிருத மயமாக மாற்றுவதற்கு பார்ப்பனர்கள் செய்த சதி என்று பேசினார் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பி. கலிபுல்லா சாகிப். ‘திராவிடர்களே, உங்கள் குரல் வளைக்குள் திணிக்கப்படும் இந்தியைத் தோளோடு தோள் நின்று தடுத்து நிறுத்துங்கள்’ என்றார் பெரியார். கட்டாய இந்தியை அறிமுகப்படுத்திய ராஜாஜியின் முக்கிய நோக்கம் திராவிடர்களை வடவர்களிடமும் ஆரியர்களிடமும் ஒப்படைக்கவேண்டும் என்பதுதான் என்று பேசினார் நீதிக்கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஏ.டி. பன்னீர்செல்வம்.
1 ஜுலை 1938 அன்று இந்தி எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக தமிழர் பெரும்படை ஒன்றை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி நடைப்பயணமாக வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சற்றேறக்குறைய நூறு பேர் கொண்ட இந்தி எதிர்ப்புப் படைக்கு யுத்த மந்திரியாக சுயமரியாதை இயக்கப் பிரசார இதழான நகரதூதன் பத்திரிகையின் ஆசிரியர் மணப்பாறை திருமலைசாமியும் படைத் தலைவராக பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தப் படையில் பாவலர் பாலசுந்தரம், திருப்பூர் மொய்தீன், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
1 ஆகஸ்டு 1938 அன்று திருச்சிக்கு அருகே உள்ள உறையூரில் இருந்து இந்தி எதிர்ப்புப் படை புறப்பட்டது. வழிநெடுக பாடல் ஒன்றைப் பாடியபடியே நடந்துவந்தனர். அந்தப் பாடலை எழுதிக் கொடுத்தவர் கவிஞர் பாரதிதாசன். அந்தப் பாடல் இங்கே:
இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் – நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!
செந்தமிழுக்குத் தீமைவந்த பின்னும் இந்தத் தேகம் இருந்தொரு லாபமுண்டோ?
(இந்தி)
விந்தைத் தமிழ்மொழி எங்கள் மொழி! – அது வீரத் தமிழ் மக்கள் ஆவி என்போம்!
இந்திக்குச் சலுகை தந்திடுவார் – அந்த ஈனரைக் காறி உமிழ்ந்திடுவோம்!
(இந்தி)
இப்புவி தோன்றிய நாள் முதலாய் – எங்கள் இன்பத் தமிழ்மொழி உண்டு கண்டீர்!
தப்பிழைத் தாரிங்கு வாழ்ந்த தில்லை – இந்தத் தான்தோன்றி கட்கென்ன ஆணவமோ?
(இந்தி)
எப்பக்கம் வந்து புகுந்துவிடும்? – இந்தி எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும்?
அற்பமென்போம் அந்த இந்திதனை – அதன் ஆதிக்கந் தன்னைப் புதைத்திடுவோம்!
(இந்தி)
எங்கள் உடல் பொருள் ஆவியெலாம் – எங்கள் இன்பத் தமிழ் மொழிக்கே தருவோம்!
மங்கை ஒருத்தி தரும் சுகமும் – எங்கள் மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம்!
(இந்தி)
சிங்கமென்றே இளங் காளைகளே – மிகத் தீவிரங் கொள்ளுவீர் நாட்டினிலே!
பங்கம் விளைத்திடல் தாய்மொழிக்கே – உடற் பச்சை ரத்தம் பரிமாறிடுவோம்!
(இந்தி)
தூங்குதல் போன்றது சாக்காடு! – பின்னர் தூங்கி விழிப்பது நம் பிறப்பு!
தீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம் – உயிர் தித்திப்பை எண்ணிடப் போவதில்லை!
(இந்தி)
மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை!
ஏங்கவிடோம் தமிழ்த் தாய்தனையே – உயிர் இவ்வுடலை விட்டு நீங்கும் வரை!
(இந்தி)
மொத்தம் 42 நாள்களுக்கு நீடித்தது அந்தப் பயணம். 11 செப்டெம்பர் 1938 அன்று அந்தப் பெரும்படை சென்னை நகருக்கு வந்தடைந்தது. 234 ஊர்களைக் கடந்து, 87 பொதுக்கூட்டங்களை நடத்தி வந்திருந்தது அந்தப் படை. அப்போது அவர்களை வரவேற்க சென்னைக் கடற்கரையில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். அவர்களுக்காக திருவல்லிக்கேணி கடற்கரையில் நடத்தப்பட்ட பாராட்டு விழாக் கூட்டத்தில் மறைமலையடிகள், பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், நீதிக்கட்சித் தலைவர் பி.டி. ராஜன், சௌந்தர பாண்டிய நாடார், அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
போராட்டம் மெல்ல மெல்ல வலுப்பெற்று வந்த சூழ்நிலையில் போராட்டக்காரர்களை மனவருத்தம் அடையச்செய்யும் வகையில் ஒரு மரணம் நிகழ்ந்தது!
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக