சனி, 21 ஜூலை, 2012

ஒரு ஆறு காணாமல் போய்விட்டது Real Estate திருடர்கள் கைவரிசை

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே நல்லாறு ஆக்கிரமிக்கப்பட்டு, வீட்டுமனை வியாபாரம் கனஜோராக நடக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்தும் வருவாய்த்துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே, அன்னூரில் இருந்து நொய்யல் ஆற்றின் கிளை நதியான "நல்லாறு' துவங்கி, ராமநாதபுரம், கருவலூர், நம்பியாம்பாளையம், செம்பியநல்லூர் ஆகிய ஊராட்சி வழியே சென்று அவிநாசி, பூண்டியில் நொய்யலில் கலக்கிறது. நல்லாற்றின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. ராமநாதபுரம் ஊராட்சி, நரியம்பள்ளியில் சிலர், நல்லாற்றை மண் போட்டு மூடி, "சைட்' அமைத்து விற்கின்றனர். அப்பகுதியில் ஒரு கி.மீ., நீளம், 40 முதல் 60 அடி அகலத்துக்கு ஆறு ஆக்கிரமிக்கப்பட்டு மூடப்பட்டுவிட்டது. இவ்விஷயம் வருவாய்த்துறைக்கு தெரிந்தும் கூட, எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதே பகுதியில் குட்டை, கல்லுக்குழி, பள்ளவாரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு "சைட்' போட்டுள்ளனர். இதுகுறித்த பிரச்னை இன்னும் தீராத நிலையில், அதே பகுதியில் ஆறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் மோகனசுந்தரம் கூறுகையில், ""கடந்த சில ஆண்டாகவே நல்லாற்றில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறைக்கு உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவித்து வருகிறேன். சிலர் "சைட்' அமைத்து ஆற்றையே மூடி விட்டனர். மேற்கே தெரியும் நல்லாறு, கிழக்கே தெரியாது. மழைக்காலங்களில் மழை நீர் நல்லாற்றின் வழியே பாய்ந்தோடும். வழியிலுள்ள குட்டைகளை நிரப்பி விட்டு, நொய்யலில் கலக்கிறது. தற்போது ஆற்றையே காணவில்லை,'' என்றார்.

அவிநாசி தாசில்தார் பூங்காவனிடம் கேட்ட போது, ""நரியம்பள்ளியில் நல்லாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது பற்றி புகார் வந்ததும், ஆய்வு நடத்தினேன். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆறு என்பதால், விரிவாக சர்வே செய்து, அறிக்கை அனுப்பப்படும். ஆறு ஆண்டுகளுக்கு முன்பே, "சைட்' அமைத்து விட்டனர். விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, உடனே சர்வே செய்து ஆறு ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தால் உடனே மீட்கப்படும்,'' என்றார்.

விவசாயிகள் கூறுகையில், "45 ஆண்டுக்குபின், அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. அத்திட்டத்தின் கீழ் அமையும் கால்வாய் நல்லாறு வழியே செல்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், நரியம்பள்ளியில் ஆறு இருந்த இடத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்கின்றனர். இது தொடர்ந்தால் பல இடங்களிலும் ஆறு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். இவ்விஷயத்தில் தமிழக முதல்வரின் நேரடி நடவடிக்கை அவசியமாகிறது,' என்றனர்.

சென்னை அருகே சமீபத்தில் ஏரி ஒன்றை கூறு போட்டு வீட்டு மனைகளாக விற்பனை செய்ய துணிகர முறைகேடு அரங்கேறியது. அதற்கு அடுத்ததாக, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் ஆற்றையே கூறு போட்டு விற்பனை செய்யும் மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது. தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே, "ரியல் எஸ்டேட் மாபியா'க்களிடம் இருந்து நீர் நிலைகளை பாதுகாக்க முடியும் என்ற கருத்து எழுந்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -ஒ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக