வியாழன், 12 ஜூலை, 2012

Pinky: கை, கால் கட்டி சோதனை போலீசார் சித்திரவதை

போலீசார் எனது கை, கால்களை கட்டி வலுக்கட்டாயமாக சோதனை செய்தனர். நான் கதறி அழுத போதும், யாரும் கண்டுகொள்ளவில்லை,''என, பாலின சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய தடகள வீராங்கனை பிங்கி பிரமானிக் சோகத்துடன் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிங்கி பிரமானிக். ஆசிய தடகளம் உட்பட பல்வேறு போட்டிகளில் தங்கம் வென்றவர். இவர் ஒரு ஆண் என்றும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பெண் ஒருவர் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். 
இவரை போலீசார் மிக மோசமாக நடத்துவதாக கூறி மனித உரிமை அமைப்புகள் சார்பில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.
இதனிடையே, பாராசட் கோர்ட், பிங்கிக்கு ஜாமின் அளித்தது. 26 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் நேற்று விடுதலையான இவர், போலீசார் தன்னை பல்வேறு விதத்திலும் கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டினார். 
இது குறித்து நிருபர்களுக்கு பிங்கி அளித்த பேட்டி:
 பாலின சோதனைக்காக போலீசார் எனது கை, கால்களை கட்டி, தனியார் ஆஸ்பத்திரியில் வலுக்கட்டாயமாக பரிசோதனை செய்தனர். நான் தொடர்ந்து அழுது, எதிர்ப்பை தெரிவித்தேன். ஆனால், நான் சொல்வதை கேட்கவில்லை. என் மீது புகார் கொடுத்தவர் எனக்காக சிறிய வேலைகள் செய்தவர். நீண்ட நாட்களாக என்னிடம் இருந்து பணம் பெற முயன்றார். ஆனால் நான் தரவில்லை. எனவே வேறுவழியில் பழிதீர்த்துக் கொண்டுள்ளார். 
அலைக்கழிப்பு:
அந்த பெண்ணையும் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள் என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டேன். அதை ஏற்கவில்லை. என்னை மட்டும் ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறார்கள் என தெரியவில்லை. விடுதலையான நிலையில், என் வீட்டின் சாவியை கூட 4 மணி நேரத்துக்கு பின் தான் போலீசார் தந்தனர்.
மேற்குவங்க விளையாட்டுத்துறை அமைச்சரை, என் தந்தை ஏற்கனவே சந்தித்தார். நானும் விரைவில் சந்திக்கவுள்ளேன். இந்தப் பிரச்னையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். எனக்காக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இந்த அக்னிப்பரீட்சையில் இருந்து விரைவில் மீள்வேன்.
இவ்வாறு பிங்கி கூறினார்.
பிங்கியின் வக்கீல் துகின் ராய் கூறுகையில்,""ஒருவர் தனது சொந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்வது விதிமுறை மீறிய செயல் அல்ல. ஆனாலும், சட்டப்பிரச்னை எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான்கு மணி நேரம் காத்திருந்து வீட்டின் சாவியை போலீசாரிடம் இருந்து பிங்கி பெற்றார். இவரை ரயில்வே துறையில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளோம். இவரது "குரோமசோம்' பரிசோதனை அறிக்கை, கோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது,'' என்றார்.
 ரயில்வேத் துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,""கோர்ட் உத்தரவை படித்து பார்த்த பின், பிங்கியின் "சஸ்பெண்ட்' குறித்து உரிய முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.
ஆதரவு பேரணி
பிங்கிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி நேற்று கோல்கட்டாவில் பேரணி நடந்தது. இதில் பெங்கால் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாம்பரன் பானர்ஜி உள்ளிட்ட பல விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
பானர்ஜி கூறுகையில்,""பிங்கி விஷயத்தில் மனிதி உரிமைகள் மீறப்பட்டுள்ளன. 17 மருத்துவர்கள் அடங்கிய குழு சுமார் 25 நாட்கள் பல்வேறு பாலின பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும், பெண் இல்லை என்பதை நிரூபிக்க முடியவில்லையே,'' என்றார்.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா கூறுகையில்,"" பிங்கி பல்வேறு பிரச்னைகளை தாண்டி இந்தியாவுக்காக, தங்கம் வென்றுள்ளார். பல நேரங்களில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படுகின்றனர். பிங்கியும் கடந்த சில நாட்களாக தண்டிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை கவனமாக கையாள வேண்டும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக