இந்தப் புதிய திட்டத்துடன்தான் அவர் அடிக்கடி கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டு வருவதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவரான நித்தியானந்தா, தனது தியான பீடம் எனப்படும் ஆசிரமத்தை கர்நாடக மாநிலம் பிடதியில் அமைத்து செயல்பட்டு வந்தார்.
அவர் தொடர்பான ஒரு அந்தரங்க வீடியோ மீடியாக்களில் வெளியாகி மானம் போனதால் அவர் தலைமறைவாகி விட்டார். பின்னர் ஒரு மாத தலைமறைவுக்குப் பின்னர் கர்நாடக போலீஸார் அவரை இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பிடித்துக் கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் நித்தியானந்தா. தற்போது அவர் மீது கர்நாடக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரை மதுரை ஆதீன மடத்தின் அடுத்த வாரிசாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அறிவித்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தப் பின்னணியில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நித்தியானந்தா சீடரான ஆர்த்தி ராவ், நித்தியானந்தா தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரபரப்புப் புகார்களைத் தெரிவித்தார். இதுதொடர்பாக பிடதி ஆசிரமத்தில் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, நித்தியானந்தா கோபமடைந்து அவரை வெளியேற்றக் கூறினார். அப்போது நித்தியானந்தா ஆதரவாளர்கள் அந்த கன்னட டிவி சேனலின் நிருபரை அடித்து வெளியேற்றினர். இது கன்னட அமைப்புகளின் கோபத்தை தூண்டி விட்டு விட்டது. இதையடுத்து அங்கு கலவர சூழல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் உத்தரவுப்படி பிடதி ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து நித்தியானந்தா வெளியேறி விட்டார். அவரது ஆதரவாளர்களும் வெளியேறி விட்டனர்.
மறுபடியும் பிடதி ஆசிரமத்திற்குள் போவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல என்று நித்தியானந்தா தரப்பு நம்புகிறது. இதனால் தமிழகத்திற்குள் புகுந்து விட அவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தங்களது புதிய ஆசிரமத்தை கொடைக்கானலில் அமைக்க நித்தியானந்தா தரப்பு தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீப காலமாக அவர் அடிக்கடி கொடைக்கானலுக்கு வந்து போய்க் கொண்டிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு அவர் தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் கொடைக்கானல் வந்தார். அங்குள்ள வில்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தனது ஆதரவாளர்களோடு தங்கினார். அங்கு வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வாசலிலேயே செக்யூரிட்டி போல நித்தியானந்தா ஆதரவாளர்கள் நின்று கொண்டுள்ளனர்.
பகல் முழுவதும் ரிசார்ட்டுக்குள்ளேய இருந்த நித்தியானந்தா, ராத்திரியானதும் வெளியே போய் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வில்பட்டி கிராம மக்கள் குழப்பமடைந்தனர். என்ன நடக்கிறது என்று அவர்கள் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்கள் நடத்திய விசாரணையில், வில்பட்டி கிராமத்தில் புதிய ஆசிரமம் அமைத்து அங்கேயே நிரந்தரமாக தங்க நித்தியானந்தா தீர்மானித்திருப்பதாக தெரிய வந்துள்ளதாம்.
முன்பு புட்டபர்த்தி சாய்பாபா இதே ரிசார்ட்டுக்குத்தான் அடிக்கடி வந்து தங்குவாராம். அதே பாணியில் நித்தியானந்தாவும் இந்த ரிசார்ட்டில் தங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் நிரந்தரமாக இங்கு தனது தியான பீடத்தை அமைத்து கொடைக்கானலில் இருந்தபடி கோலோச்ச முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
ஆனால் வில்பட்டி மக்கள் இதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளனர். நித்தியானந்தாவை இங்கு ஒருபோதும் ஆசிரமம் அமைக்க விட மாட்டோம். அவர் இங்கு ஆசிரமம் அமைத்தால் அதை கடுமையாக எதிர்ப்போம் என்றார்.
தற்போது வில்பட்டி ரிசார்ட்டில் முகாமிட்டுள்ள நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் ஆங்காங்கு சுற்றிக் கொண்டுள்ளனர். கையில் செல்போன் சகிதம் அவர்கள் சுற்றி வருவதை எச்சரிக்கைக் கண்களுடன் பார்த்தபடி உள்ளனர் வில்பட்டி மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக