புதன், 11 ஜூலை, 2012

Junior Vikatan மீது ஜெயலலிதா வழக்கு! “எனது மகள் இல்லையென்று தெரியாதா

Viruvirupu
விகடன் மீது கோபப் பார்வையைத் திருப்பியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. சமீப காலமாக, ‘ஜெயலலிதாவின் மகள்’ என்று செய்திகளில் அடிபடும் பெண் பற்றி விலாவாரியாக செய்தி வெளியிட்டதே கோபத்துக்கு காரணம்.
நம்ம அமைச்சர்கள் மீது கோபம் ஏற்பட்டால், ‘வேறு விதமாக’ காட்டிலாம். இது மீடியா மீது ஏற்பட்ட கோபம், எனவே முதல்வர் சார்பில் கோர்ட்டுக்கு போயிருக்கிறார்கள். 2 கிரிமினல் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில், மாநகர குற்றவியல் அரசு வக்கீல் ஜெகன் தாக்கல் செய்துள்ள செய்துள்ள 2 மனுக்களில், ஜுனியர் விகடனில் வெளியான இரு கட்டுரைகள், மெட்டீரியல் எவிடென்ஸ்களாக காட்டப்பட்டுள்ளன.
‘துப்பட்டாவுக்குள் மறையும் ஜெயில் மகள்’ என்பது ஒரு கட்டுரை. ‘என் கைதுக்கு காரணம் சசிகலா’ என்பது அடுத்த கட்டுரையின் தலைப்பு! இந்த இரு தலைப்புகளே கதைச் சுருக்கத்தை கூறிவிடுகின்றன.
விகடன் குரூப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “குறிப்பிட்ட முதலாவது கட்டுரையில், ‘முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக் கொள்ளும் பிரியா மகாலட்சுமியை மோசடி வழக்கில் கைது செய்திருந்த போதிலும், மீடியாக்களில் பார்வையில் இருந்து போலீசார் அவரை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இரண்டாவது கட்டுரை, ‘என் கைதுக்கு காரணம் சசிகலா’ என்று ‘முதல்வர் மகள்’ கூறுவதாக வெளியாகியுள்ளது.
இந்த இரு செய்திகளும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கிரிமினல் அவதூறு குற்றமாகும். பிரியா மகாலட்சுமி என்பவர் முதல்வர் மகள் இல்லை என்பது நன்கு தெரிந்திருந்தும், உள்நோக்கத்துடன், உண்மை சிறிதும் இல்லாத இந்த செய்தியை வெளியிடப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் முதல்வருக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே அந்த பத்திரிகையின் ஆசிரியர் ரா.கண்ணன், வெளியீட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ். மாதவன், நிருபர்கள் ராஜா திருவேங்கடம், ராமேஷ் ஆகியோருடன், முதல்வர் மகள் என்று கூறிக்கொள்ளும் பிரியா மகாலட்சுமி மீதும் கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்கவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜுனியர் விகடன் மீது கடந்த மாதம் ஒரு அவதூறு வழக்கை முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதோ வந்துவிட்டன, 2-வது, 3-வது வழக்குகள்.
தமாஷ் என்னவென்றால், ‘முதல்வர் மகளை’யும், விகடன் குரூப்பையும் ஒரே அணியில் சேர்த்து, ஒன்றாக வழக்கு போட்டிருக்கிறது முதல்வர் தரப்பு! சூப்பர் பப்ளிசிட்டி! (யாருக்கு என்பதுதான் கேள்வி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக