வெள்ளி, 13 ஜூலை, 2012

Ex DMK MLA கைது, சிறுமி கற்பழித்து கொலை



வீட்டு வேலை செய்து வந்த கேரள சிறுமி கற்பழித்துகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.  கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ராஜ்குமார் வீடு பெரம்பலூர்- அரியலூர் சாலையில் வெங்கடாசலபதி நகரில்
உள்ளது. இவர் தனது வீட்டுக்கு வேலை செய்ய பெண் தேவை என்று கூறி இருந்தார். கேரள மாநிலம் பீர்மேடு பகுதியை சேர்ந்த வேலைக்கு ஆள் அனுப்பும் தரகர்கள் பன்னீர்செல்வம், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் இதுபற்றி அறிந்தனர். அவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரை தொடர்பு கொண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்த சந்திரன்- சுசீலா தம்பதியின் மகள் சத்யா (வயது 15) வீட்டு வேலைக்கு வர தயாராக இருப்பதாக கூறினார்கள். சத்யா கேரளாவில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
வறுமை காரணமாக பள்ளியில் படித்து கொண்டிருந்த சத்யாவை, அவரது பெற்றோர் வீட்டு வேலைக்கு அனுப்ப சம்மதித்தனர். இதற்காக சந்திரன்-சுசீலா தம்பதி யினர் கடந்த 23-ந் தேதி பெரம்பலூர் வந்து ரூ.5 ஆயிரம் மட்டும் பெற்றுக் கொண்டு ஊருக்கு திரும்பினர்.



கடந்த 28-ந்தேதி சத்யா தனது தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியபோது,   என்னால் இங்கு இருக்க முடியவில்லை, ஊருக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறி கதறி அழுதார். மறுநாள் (29-ந்தேதி) சத்யா உடல்நிலை சரியில்லாமல் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிர்ச்சி அடைந்த சந்திரன் கடந்த 30-ந்தேதி பெரம்பலூர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்ற சத்யாவை பார்த்தார். அதன் பின்னர் சத்யாவை திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

தனியார் ஆஸ்பத்திரியில் மகளுக்கு சிகிச்சை செய்ய பணம் இல்லை என்று கூறிய சந்திரன் பிறகு சத்யாவை கடந்த 4-ந்தேதி தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி 6-ந்தேதி சத்யா இறந்தார்.

அதனைத் தொடர்ந்து சத்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சத்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

சத்யாவின் உடல் கேரள மாநிலம் பீர்மேடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் சத்யாவின் உடலில் காயங்கள் இருந் ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர். இதுபற்றி பீர்மேடு போலீசார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பிஜூமோள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

சத்யாவின் உடல் கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் சத்யாவின் உடலில் விஷம் இருந்ததும், பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதும், அதனால்தான் உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து பீர்மேடு போலீசில் சந்திரன் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மகள் சத்யா கற்பழித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே இதில் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதுகுறித்து கேரள போலீசார், பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

இதை அறிந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜ் குமார், நேற்றிரவு பெரம்பலூர் போலீசில் சரண் அடைந்தார். உடனே அவர் கைது செய்யப்பட்டார். அவரது கார் டிரைவர் மகேந்திரன், புரோக்கர் அன்பரசன் ஆகியோரை போலீசார் இன்று அதிகாலை 5 மணிக்கு கைது செய்தனர்.

இவர்கள் 3 பேர் மீது கற்பழிப்பு (376), ஆள் கடத்தல் (367 ஏ), கொலை வழக்கு (302) ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

புரோக்கர் பன்னீர்செல்வம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், பாபு ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். கைதான 3 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக