ஞாயிறு, 29 ஜூலை, 2012

யதார்த்த சினிமாவை தமிழர்கள் ஆதரித்தது இல்லை

தமிழ் மொழியில் வெளிவரும் சினிமாக்கள் எவ்விதமான நோக்கத்தில் எடுக்கப்படுகின்றன என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. தமிழகத்தைப் பொருத்தவரைக்கும் சினிமா என்பது ஆதியிலிருந்தே வெறும் பொழுதுபோக்கு வியாபாரமாகவே இருந்து வருவது யாவரும் அறிந்ததே. 
எப்போதாவது ஒருசிலர் ஏதாவது செய்ய விரும்பியபோதும் அதையெல்லாம் நிர்தாட்சண்யமாய் புறக்கணித்த பெரும் கைங்கர்யத்தையே தமிழ்ச் சமூகம் செய்து வந்திருக்கிறது. இந்தச் சூழலில் தமிழில் மாற்று சினிமா என்பது சாத்தியமா என்பதேகூட அனாவசியமான சந்தேகம்தான் என்பதாகவே நான் நினைக்கிறேன்.
பொதுவாகவே தமிழில் மாற்று சினிமா வேண்டும் என்று பெரும் முழக்கங்களோடு புறப்படும் இளைஞர்கள் பலரும் சென்னைக்கு வந்து திரையுலகத்தின் நிதர்சனத்தைப் பார்த்ததும் தெளிந்து, விட்டால் போதும் என்று ஊரைப் பார்க்கப் போய்விடுவதோ, அல்லது இங்கே ஒளிர்ந்துகொண்டிருக்கும் மாயவெளிச்சத்தோடு ஐக்கியமாகிவிடுவதோதானே நடந்து வருகிறது. இப்படி ஓடிப்போனவர்களின் பட்டியலிலும் எனக்கு இடமுண்டு, வெளிச்சத்தில் கலக்கத் தயாராக இருக்கிற வகையில் இரண்டாவது பட்டியலிலும் என்னை சேர்க்காமல் தவிர்க்க இயலாது என்பதனால் நிதர்சனத்தை எழுதுவதே சரியானது என்பதாகவே நான் நினைக்கிறேன்.

எல்லோருக்கும்தான் ஆசை இருக்கிறது, உலக சினிமாக்களைப்போல அசல் தமிழ் சினிமா ஒன்று தயாரிக்கப்படாதா என்று. ஒருசில ஆசைகள் நிராசைகள் என்று தெரிந்தும் நெஞ்சக்கூட்டை விட்டு அகலுவதேயில்லையே அதற்கென்ன செய்வது! கடந்த பத்தாண்டுகளின் துவக்கத்தில் சிற்றிதழாளனாக மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த சுதேசமித்திரனிடமிருந்து இந்த மாதிரியான ஒரு கட்டுரையை நீங்கள் பெற்றிருக்க முடியாது. அந்த சந்தர்ப்பத்தில் ஆனந்த விகடனில் எழுதுவதுகூட பாவம் என்கிற மனப்பாட்டில் நான் இருந்தேன். தீவிர இலக்கியவாதிகள் என்றால் வணிக சமரசம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு வாழ்ந்த காலம் அது. ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கும்போது அந்தக் காலகட்டத்தில் வணிகப் பத்திரிகைகளின் வாயிலாக பிரபலமடைந்த தீவிர இலக்கியவாதிகள்தான் இன்றைக்கு முன்னணியில் வந்து நிற்கிறார்கள் என்கிற நிதர்சனம் தெளிவாகிறது. தமிழில் ஒரு இலக்கியவாதியின் சூழலே இப்படியென்றால் சினிமாக்காரனின் சூழல் எத்தனை துர்பாக்கியமானது என்பதை யோசித்துப் பாருங்கள்.
சினிமா என்பது தாய்ப்பால் போல என் குடும்பத்தால் எனக்கு ஊட்டப்பட்டது. கிட்டத்தட்ட தினந்தோறும் குடும்பத்தோடு சினிமாவுக்குப் போகிற குடும்பம் எங்களுடையது என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் நாங்கள் வசித்த சூழலில் அதற்கான வாய்ப்பு பலமாக இருந்தது. பெரும்பாலும் எவ்விதமான சம்பந்தமும் இல்லாத ஊர்களில் வசிக்க நேர்ந்த வகையில் சினிமாக் கொட்டகைகள்தான் உறவுக்காரர்களின் வீடுகள்போல எங்களுக்கு வாய்த்தன. எங்கள் கொண்டாட்டம் குதூகலம் எல்லாம் சினிமாக்கள் என்கிற உறவுக்காரர்களோடுதான். அதில் வரும் பாத்திரங்கள்தான் அத்தை மாமா சித்தப்பா பெரியம்மா தாத்தா பாட்டி என்பதைப்போல எங்களுக்கு அமைந்த சூழல் பெரும்பாலானவர்களுக்கு வாய்த்திருக்காது. என் தகப்பனாரே ஆதியில் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்தவர் என்பதனால் அவர் கொண்டிருந்த ஆர்வம் எங்களுக்கும் எளிதில் கைவந்து சேர்ந்தது.
இதுவே சினிமாவை நோக்கி என்னை நெட்டித் தள்ளியது. என்னுடைய இருபத்தெட்டாம் வயதில் நான் சினிமா உலகத்திற்குள் நுழைந்தேன். தொலைக்காட்சி சீரியல்களில் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் பணியாற்றினேன். அதற்குள் மூச்சுத் திணறி வெளியேறி என் முந்தைய தொழிலுக்குத் திரும்பிவிட்டேன். நான் ஏற்கனவே சொன்னதுபோல என்னுடைய அப்போதைய மனநிலையில் நான் கொண்டிருந்த கலைத் தீவிரம் என்னை எந்த காம்ப்ரமைசுக்கும் தயாராக விடவில்லை. இப்போது யோசிக்கையில் பத்துப் பதினைந்து வருடங்களை இழந்துவிட்டோமே என்கிற வருத்தமே மிஞ்சுகிறது. எந்தவொரு வெற்றிக்கும் பின்னால் கடினமான காம்ப்ரமைஸ்கள் இருக்கும் என்பதை இளம் மனம் அறிவதில்லை. அதற்கு கொஞ்சம் பக்குவம் தேவைப்படத்தானே செய்கிறது!
ஆரண்யம் பத்திரிகை நடத்தியபோது அவள் அப்படித்தான் இயக்குனர் ருத்ரையாவை அவரது சொந்த ஊரில் போய் சந்தித்தேன். அவர் அப்போதும் தீவிர ஆர்வத்தோடு சினிமாவுக்குத்தான் கதை எழுதிக்கொண்டிருப்பதையே காண முடிந்தது. அதே சமயத்தில்தான் இயக்குனர் மகேந்திரனையும் இரண்டொருமுறை சந்தித்தேன். அவர் அப்போது அரவிந்த்சாமி, ரஞ்சிதா நடித்த சாசனத்தை என்னெஃப்டிசிக்காக இயக்கிக்கொண்டிருந்தார். முதல் படத்தை இயக்கப்போகிற இளைஞனைப்போல அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக தேர்ந்தெடுத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் கடைசி நேரத்தில் கொடுத்த டார்ச்சரையும் அவர்கள் அனுமதித்த எல்லைக்குள் தன் ஸ்கிரிப்ட்டை சுருக்க பட்ட சிரமங்களையும் சொல்லிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட நாலுமணிநேரம் பேசிக்கொண்டேயிருந்தோம். அவருக்குள்ளிருந்த இளைஞன் கடைசிவரை சோர்வடையவேயில்லை. சாசனம் வெளிவரவேயில்லை என்பது உங்களுக்கு நினைவிருக்கும். இந்த உதாரணங்கள் உங்களுக்கு எதை விளக்குகின்றன என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.
ஒரு முழுத் திரைக்கதையை ஆரண்யத்தின் ஒவ்வொரு இதழிலும் வெளியிடவேண்டும் என்பதற்காகவே ஆரண்யத்தை நூறு பக்கங்களுக்கும் அதிகமான அளவில் கொண்டுவந்தோம். ஆனால் அதுவே அதன் நீட்சிக்கான எமனாகிவிட்டது. ஒரு வணிகப் பத்திரிகையாக இருந்தால் இந்த விஷயத்தை வேறு விதமாகக் கையாண்டிருக்கும். திரைக்கதையை தொடராக அது வெளியிட்டிருக்கும். இதழ் தொடர்ந்து வாங்கப்படவும் அது மறைமுகமான உதவியைச் செய்திருக்கும். இப்படிச் செய்யாததால் பத்திரிகையே நின்றுபோய்விடும் என்றால் இதைச் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எப்போதுமே காம்ப்ரமைஸ் என்கிற சொல்லை நேரடியாக எடுத்துக்கொள்வது சரியாகாது. எதற்கும் ஒரு லிமிட் உண்டு. நம் நடிகைகள் போல எதையெல்லாம் அவிழ்க்கலாம், எதையெல்லாம் அவிழ்க்கக்கூடாது என்பதில் அவர்கள் மனத்தில் உள்ள வரையறையைப் போல ஒவ்வொருவரும் ஒரு எக்ஸ்ட்ரீம் லிமிட்டை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும் என்றே சொல்லத் தோன்றுகிறது. அதற்குமேலே போய்விட்டால் அடிப்படையை இழந்துவிடவேண்டியிருக்கும். நல்ல படைப்புதான் தருவேன் என்று கங்கணம் கட்டிக்கொள்ளும் யாராக இருந்தாலும் குதிரைக்கு லகான் பூட்டியமாதிரி செயல்பட்டுக்கொண்டிருந்தால் உயரங்களை எட்டவே முடிவதில்லை என்பதுதானே இன்றைய கண்கூடு!

இந்தியாவில் பிற மொழிகளில் உண்மையிலேயே ஆச்சர்யமான படங்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒரு உதாரணத்துக்கு இரண்டு ஹிந்திப் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு சப்போர்ட்டிங் ஆக்டரான பரேஸ் ரவால் ஹீரோவாக நடித்த ரோடு டு சங்கம் என்று ஒரு படம் சமீபத்தில் பார்த்தேன். அவரும் ஓம் பூரியும் மட்டும்தான் எனக்குத் தெரிந்த முகங்கள். அப்புறம் இன்னொரு தெரிந்த முகம் என்றால் துஷார் காந்தி (யிpநயசநன யள hiஅளநடக)! அந்தப் படத்தின் கதைபோல ஒரு கதையை யோசிக்கூட இங்கே வாய்ப்பில்லை. அதே நேரத்தில் ஷாரூக் கான் என்கிற சூப்பர் ஸ்டார் நடித்த மை நேம் ஈஸ் கான் படத்தை உங்களில் பலர் பார்த்திருக்கலாம், அது டிபிகல் இந்திப்பட க்ளிஷேக்கள் நிறைந்த கமர்ஷியல் படம் என்பதை ரோடு டு சங்கம் படத்தைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். இரண்டிலும் அடிநாதமாக ஒலிக்கும் குரல் கிட்டத்தட்ட ஒன்றுதான், 'நான் ஒரு முஸ்லிம்! ஆனால் தீவிரவாதியல்ல!' இது மை நேம் ஈஸ் கானில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு பார்வையாளனின் மனத்தில் ஏற்றப்பட்டது. உண்மையான கலைப்படைப்பு எதையும் திணிக்காமலே உணர வைத்துவிடும் என்பதை நிரூபித்தது ரோடு டு சங்கம். 'இந்தியாவை நேசிப்பவன் என்பதனால் ஒரு முஸ்லிம் இனத்துரோகி அல்ல! என்பது அது முன்வைக்கும் கருத்து.
அமெரிக்காவில் வசிக்கும் ஒரு முஸ்லிம் இளைஞன், கணவனை இழந்த ஒரு இந்துப்பெண்ணை மணக்கிறான். அவள் ஏற்கனவே ஒரு குழந்தைக்கும் தாய். கல்யாணத்தைத் தொடர்ந்து இந்துச் சிறுவனின் பெயரின் பின்னால் கான் என்கிற பெயர் இணைகிறது. இதனால் அவன் முஸ்லிம் என்பதாக நினைத்து கொல்லப்படுகிறான். இதனால் மனைவியும் முஸ்லிம் இளைஞனை விட்டுப் பிரிந்துவிடுகிறாள். இதைத் தொடர்ந்து தான் ஒரு முஸ்லிம்தான் ஆனால் தீவிரவாதியல்ல என்பதை அமெரிக்க அதிபர் பாரேக் ஒபாமாவிடம் தெரிவிக்கும்பொருட்டு பயணம் மேற்கொள்கிறான் கான் எனும் அந்த முஸ்லிம் இளைஞன். இது மை நேம் இஸ் கான் படத்தின் கதை.அலகாபாதில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள ஒரு மார்க்கெட் பகுதி. அங்கே மிகப் பழமையான என்ஜின்களைப் பழுதுபார்க்கும் திறனுடைய ஹஸ்மந்த் உல்லாவின் மெக்கானிக் ஷாப் இருக்கிறது. ஹஸ்மந்த் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் அன்பான நண்பர். அவரிடம் அலகாபாத் மியூசியத்திலிருக்கும் எழுபது ஆண்டுகள் பழமையான ஃபோர்டு லாரியின் என்ஜின் பழுது பார்க்க தரப்படுகிறது. அதைச் சீராக்கக்கூடியவர்கள் அந்த மாநிலத்திலேயே வேறு யாரும் இல்லை. அவர் அதைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கும்போது மாநிலத்தில் ஒரு பாம் ப்ளாஸ்ட் நிகழவே, அந்தப் பகுதியைச் சேர்ந்த பல முஸ்லிம் இளைஞர்கள் போலீசால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களை விடுவிக்குமாறு முஸ்லிம்கள் நீதிமன்றத்தின் முன்பு கோஷமிடுகிறார்கள். அப்போது நிகழும் லத்திசார்ஜில் ஹஸ்மந்த்தும் அடிபடுகிறார்.
இதைத் தொடர்ந்து அவர்களின் அசோசியேஷன் ஒரு முடிவை எடுக்கிறது. இளைஞர்கள் விடுவிக்கப்படும்வரை காலவரையின்றி கடைகளை மூடச்சொல்லி அது எல்லா முஸ்லிம்களுக்கும் கட்டளையிடுகிறது. பரபரப்பான மார்க்கெட் இதனால் முடங்குகிது. கடையைத் திறக்க முடியாத நிலையில், ஹஸ்மந்த்துக்கு தான் சீராக்கிக்கொண்டிருக்கும் என்ஜினின் முக்கியத்துவம் தெரியவருகிறது. அந்த ஃபோர்டு லாரியில்தான் மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலம் நிகழ்ந்தது. காந்தியின் அஸ்தி தேசமெங்கும் கொண்டுசெல்லப்பட்டபோது ஒரிசா ஸ்டேட் வங்கியில் தவறுதலாக ஒரு அஸ்திக்குடம் லாக்கரில் வைக்கப்பட்டு பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டது. இப்போது அதை அறிந்து காந்தியின் பேரன் துஷார் காந்தி அதைப் பெற்றுக்கொண்டு வந்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருக்கிறார். அது சகல மரியாதைகளோடும் காந்தியின் சவ ஊர்வலம் சென்ற லாரியில் எடுத்துச் சென்று சங்கமத்தில் கரைக்கப்பட உள்ளது. அதற்காகத்தான் அந்த லாரியின் என்ஜின் பழுதுபார்க்கப்படுகிறது.
இந்த விஷயத்தை அறிந்ததும் அசோஷியேஷனின் தடையையும் மீறி கடையைத் திறந்து வேலையை ஆரம்பிக்கிறார் ஹஸ்மந்த். இன விரோதி என்று இதனால் தூற்றப்படும் அவரை நண்பர்கள் எல்லோரும் விலக்க ஆரம்பிக்கிறார்கள். நான் ஒரு முஸ்லிம் என்பதற்கும் தேசப்பிதாவின் அஸ்தியைக் கரைக்க நான் உதவுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்கிற கேள்வியை முன்வைக்கிறார் ஹஸ்மந்த். இறுதியில் தன் முயற்சியிலும் வென்று, நண்பர்களின் ஆதரவையும் வெல்கிறார். இது ரோடு டு சங்கம் படத்தின் கதை.
இந்த இரண்டு கதைகளில் தமிழில் எந்த மாதிரியான கதையை எடுக்கக்கூடிய சூழல் இருக்கிறது என்பதை யோசியுங்கள். ரோடு டு சங்கம் கதையில் கதாநாயகியோ, நடனக் காட்சிகளோ, சண்டைக் காட்சிகளோ, உள்ளிட்ட எந்தக் கவர்ச்சி அம்சமும் கிடையாது. ஹீரோ என்பதாகக்கூட ஒரு பூதாகரம் கிடையாது. இப்படியொரு கதையை நானோ நீங்களோ திரைக்கதையாக்கினால் தயாரிக்க முன்வரக்கூடிய ஒருத்தரை நீங்கள் விரல் நீட்டிக் காட்டுங்கள். அப்புறம் பேசலாம் மாற்று சினிமா குறித்து.
தமிழ்நாட்டில் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகியவை இருக்கிற இடம் தௌ;ளத் தெளிவாகத் தெரிவதைப் போல உலக சினிமாவுக்கான மார்க்கெட் என்பதாக ஒன்று எங்கே இருக்கிறது என்று தெரிவதேயில்லை. எவ்வித கவர்ச்சி அம்சங்களும் இல்லாத யதார்த்த சினிமாக்களை ஒருபோதும் தமிழர்கள் ஆதரித்ததாக வரலாறு இல்லை. அப்படியிருக்கும்போது ஒரு கலைஞன் எப்படி கலைப்படம் என்று துணிந்து இறங்க முடியும்? முப்பது நாளில் ஒரு தனி ஆள் உட்கார்ந்து நாவல் எழுதி முடித்துவிடலாம். மாத பட்ஜெட்டில்கூட ஒரு ரூபாய் அதிகமாக செலவாகியிருக்காது. ஆனால் அதே முப்பதுநாளில் ஒரு சினிமா தயாரிக்கப்பட்டால் அதற்கு ஆகிற செலவை ஒருத்தர் கொடுத்துதானே தீரவேண்டியிருக்கிறது! அவருக்கு அது திருப்பித் தரப்பட வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா? இந்த அடிப்படைப் பிரச்சனையிலிருந்து சினிமா மீண்டு வருவதற்கு பார்வையாளர்களின் பக்கமிருந்து கிடைக்கும் சிக்னல் மட்டுமே ஆரம்ப ஸ்ருதியாக இருக்க முடியும். ஆனால் அது நிகழ்வது ஒட்டுமொத்தமான தமிழ்ச் சமூகத்தின் தலையில் அல்லவா இருக்கிறது.
--
நிஜங்கள்தான் நல்ல கதைகளாய் இருக்கின்றன.
- சுதேசமித்திரன்
(பேசும் படம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக