செவ்வாய், 17 ஜூலை, 2012

கால்வாயில் உடல் தோண்டி எடுப்பு: உறவினர்கள் கதறல் : பேராசிரியருக்கு பல பெண்களுடன் தொடர்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
பூந்தமல்லி :சென்னை பேராசிரியரால் கொன்று புதைக்கப்பட்ட இளம் மனைவியின் உடல் கிருஷ்ணா கால்வாய் அருகே இன்று தோண்டி எடுக்கப்பட்டது. 
உடலை பார்த்ததும் உறவினர்கள் கதறி அழுதனர். பேராசிரியர் நடராஜனுடன் தொடர்பு வைத்திருந்த பேராசிரியைகள், மாணவிகள் உள்பட பலரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதால், மாணவிகள் பீதியடைந்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த காளிபாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (32). சென்னை அடுத்த படப்பையில் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (23). மனைவியை சொந்த ஊரான காளிபாளையத்திலேயே விட்டுவிட்டு, பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கி, கல்லூரிக்கு நடராஜன் சென்று வந்துள்ளார். கடந்த மாதம் 6,ம் தேதி சேலத்தில் தோழி வீட்டு திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற விஜயலட்சுமி வீடு திரும்பவில்லை. Ôமனைவியை காணவில்லை என பரமத்திவேலூர் போலீசில் நடராஜன் புகார் கொடுத்தார். அதேநேரம், வரதட்சணை கேட்டு நடராஜன் மற்றும் குடும்பத்தினர் விஜயலட்சுமியை கடத்தியதாக அவரது தந்தை சுப்பிரமணியனும் புகார் அளித்தார். 3 தனிப்படை அமைத்து விஜயலட்சுமியை போலீசார் தேடி வந்தனர். நடராஜனிடமும் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11,ம் தேதி நாமக்கல் கோர்ட்டில் நடராஜன் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, மனைவியை கொன்று புதைத்துவிட்டதாக திடுக்கிடும் தகவலை நடராஜன் தெரிவித்தார்.
பரமத்திவேலூர் போலீசார் நடராஜனை சென்னைக்கு அழைத்து வந்து விஜயலட்சுமி புதைக்கப்பட்ட இடத்தை காட்டும்படி கூறினர். முதலில் தயங்கியவர் கடுமையான விசாரணைக்கு பிறகு, பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் செல்லியம்மன் நகரில் கிருஷ்ணா கால்வாய் அருகே உடலை புதைத்த இடத்தை காட்டினார். புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து 50 முதல் 60 அடி தூரத்தில்தான் நடராஜன் வீடு உள்ளது.

வீட்டை சோதனை நடத்த போலீசார் நடராஜனிடம் சாவி கேட்டனர். சாவி தொலைந்து விட்டது என்று அவர் கூறியதால், பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் சில மணி நேரம் சோதனை செய்தனர். இதில் முக்கிய தடயம் கிடைத்திருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு பேராசிரியர் நடராஜனை இன்று மதியம் 12.30 மணியளவில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். பூந்தமல்லி தாசில்தார் வளர்மதி, பரமத்திவேலூர் டிஎஸ்பி உதயகுமார், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், கீழ்பாக்கம் மருத்துவமனை டாக்டர்கள் குழு முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. உடலை புதைத்துவிட்டு, மேலே ஒரு கல்லை நடராஜன் வைத்திருந்தார். அந்த கல்லை அகற்றிய பிறகு, உடல் தோண்டி எடுக்கப்பட்டது. விஜயலட்சுமியின் உடலை பார்த்ததும் உறவினர்கள் கதறி அழுதனர். கொலை நடக்கும் முன்பு, சென்னைக்கு வந்த விஜயலட்சுமி 7 பவுன் தாலி மற்றும் 15 பவுன் நகை அணிந்திருந்தார். தாலியுடன் மனைவியை புதைத்து விட்டதாக கூறிய நடராஜன் மற்ற நகைகள் குறித்து கூற மறுத்து வருகிறார். கல்லூரியில் உடன் வேலைபார்த்த பேராசிரியைகள், பெண்கள், கல்லூரி மாணவிகள் என பலரை புரபசர் நடராஜன் தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பல்கலைக்கழகத்தில் தெரிந்த நபர்கள் உள்ளனர். அதிக மார்க் பெற்று தருகிறேன் என்று கூறியும், பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறியும் மாணவிகளை அவர் ஏமாற்றி நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடராஜன் வேலை பார்த்தார். பெண்களிடம் அவர் அத்துமீறுவதை அறிந்து, அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளார். படப்பை, பூந்தமல்லி கல்லூரிகளில் நடராஜனுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள், மதுரவாயல் தனியார் கல்லூரியில் நடராஜன் எம்டெக் படிக்கும் போது உடன் படித்த மாணவிகள் என பலரை அவர் தன் வலையில் வீழ்த்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக அனைவரையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால், அப்பாவி மாணவிகளும் பீதியில் உள்ளனர்.

கள்ளக்காதலி சிக்கினார்

கொலை சம்பவம் நடந்தபோது நடராஜனின் கள்ளக்காதலி சித்ரா என்பவரும் வீட்டில் இருந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர். விஜயலட்சுமி கொலை பற்றிய முழு விவரமும் இவருக்கு தெரியும் என்பதால் இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடராஜன் சரணடைவதற்கு முன்பே இவரை போலீசார் பிடித்துவிட்டனர். இவர் மூலமாகத்தான் கொலையில் துப்பு துலங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக