ஞாயிறு, 29 ஜூலை, 2012

வடமாநில மாணவர்களை கல்லூரியில் சேர்த்து கமிஷன் பெறுவதில் மோதல்

சென்னையில் கல்லூரியில் மாணவர்களை சேர்த்து விடுவதற்காக கிடைக்கும் கமிஷன் தொகையை பங்கு போடுவதில் கல்லூரி மாணவர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ்குமார் என்பவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்து வருகிறார். அத்துடன் வட மாநில மாணவர்களை கல்லூரியில் சேர்த்துவிட்டு அதற்காக கமிஷன் தொகையையும் பெற்று வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு ஒடிஷாவைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் என்ற மாணவர் ராமாபுரம் கல்லூரியில் சேருவதற்காக சூரஜ்குமாரிடம் ரூ1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களைக் கொடுத்து வைத்திருந்தார். இதைப் பார்த்த சூரஜ்குமாருடன் தங்கியிருந்த சக மாணவரான பப்பு, தமக்கும் கமிஷன் தொகையில் பாதி தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால் சூரஜ்குமார் கொடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து பப்பு, காசோலை மற்றும் சான்றிதழ்களுடன் தலைமறைவாகிவிட்டார். இதில் ஆத்திரமடைந்த சூரஜ்குமார், பப்புவை தொடர்பு கொண்டு தாம் பணம் தருவதாகவும் காசோலை மற்றும் சான்றிதழை ஒப்படைத்துவிடுமாறும் கூறியிருக்கிறார். இதை நம்பி பப்புவும் சான்றிதழ் மற்றும் காசோலையுடன் சூரஜ்குமாரை சந்திக்க ராமாபுரம் சென்று கொண்டிருந்தார். பப்பு ஆட்டோவில் வருவதை தெரிந்த சூரஜ்குமாரும் அவனது நண்பர்களும் ஆட்டோ வழிமறித்து பப்புவை கடத்திச் சென்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் பப்புவை அடைத்து வைத்து காசோலை மற்றும் சான்றிதழ்களைப் பறித்துக் கொண்டது சூரஜ்குமார் கோஷ்டி.
பப்பு கடத்தப்பட்ட தகவலை அவர் சென்ற ஆட்டோ டிரைவர் போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சூரஜ்குமார் கோஷ்டிக்கும் பப்புவுக்கும் இடையே நடந்த கமிஷன் தகராறு விவகாரம் தெரிய வந்தது.
இதையடுத்து பப்புவை சூரஜ்குமார் கோஷ்டியிடமிருந்து மீட்டு அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சூரஜ்குமார் மற்றும் அவனது நண்பர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக