2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பலியான விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில்தான் பல தவறுகள் இருப்பதாக பெற்றோர்கள் கூறுகிறார்கள்.
ஸ்ருதியைப் பலி வாங்கிய பேருந்து ஓட்டை உடைசலாக இருப்பது குறித்து ஏற்கனவே பலமுறை பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் இது தனியார் பேருந்து, எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், சில நாட்களுக்கு முன்பு இதே பேருந்தின் ஓட்டையில் ஸ்ருதி விழப் பார்த்தாளாம். அப்போது அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளாள். ஆனால் நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தில் அவளது உயிர் அநியாயமாக பறி போய் விட்டது.
மேலும் பள்ளிப் பேருந்தில் பயணித்து வந்த ஸ்ருதி, விபத்தை சந்திக்கும் முன்பு தன்னை அழைத்துப் போக வந்திருந்த தனது தாயாரைப் பார்த்து கை காட்டியபடி பேருந்தில் தனது சீட்டிலிருந்து எழுந்திருக்கிறாள். அடுத்த சில விநாடிகளில்தான் அவள் ஓட்டையில் விழுந்து உயிரிழந்த சோகச் செய்தியும் கிடைத்துள்ளது.
ஸ்ருதியின் தாயார் பிரியா இன்னும் தனது அழகு மகளை இழந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அழுதபடி காணப்படுகிறார். அவரது மூத்த மகன் பிரணவ், தனது தங்கை மறைந்த விவரம் கூட தெரியாமல் சைக்கிள் ஓட்டியபடி விளையாடிக் கொண்டிருக்கிறான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக