திங்கள், 2 ஜூலை, 2012

பிரணாப் வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல்- மனு பரிசீலனை திடீரென நாளைக்கு ஒத்திவைப்பு

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய திருப்பமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் மனுவை ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பு மனு பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் முடிந்து இன்று வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக, பிஜூ ஜனதாதளம் மற்றும் பாஜக ஆதரவு வேட்பாளரான சங்மா திடீரென ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
அதாவது மத்திய அரசின் இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு (Indian Statistical Institute) தலைவராக இன்னமும் பிரணாப் முகர்ஜிதான் பதவி வகித்து வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் விதிமுறைகளின்படிப் பார்த்தால் பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு செல்லாது என்று ஒரு போடு போட்டார். இதைக் கேட்ட தேர்தல் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் ஒரு கணம் ஷாக்கிப் போனார். வேறுவழியின்றி பிரணாப்பிடம் விளக்கம் கேட்கிறோம் என்று கூறி வேட்பு மனு பரிசீலனையை நாளைக்கு ஒத்திவைத்துவிட்டனர்.
சுப்பிரமணியசாமி அதிரடி
இதனிடையே டிவிட்டரில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, "பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்படும்? வேட்புமனு பரிசீலனை திடீரென நாளைக்கு ஒத்திவைப்பு...ரகசியமாக பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து வருகிறார்" என்று தட்டிவிட்டிருக்கிறார்.

ஒருவேளை சங்மாவுக்கு போட்டுக் கொடுத்ததே சுப்பிரமணியசாமியாகவும் இருக்கலாம். அதே நேரத்தில் எப்படியும் தேர்தலில் அதிசயம் நிகழ்ந்து வெற்றி பெறுவேன் என்று சங்மா கூறிவந்தார். பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்படும் நிலையில் சங்மாவின் ஆருடம் பலித்துவிடும்! நாட்டின் அரசியலில் பெரும்பரபரப்பும் ஏற்பட்டுவிடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக