தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் திமுகவினர் மீது பொய் வழக்குகளைப் போடுவதாகவும், குண்டர் சட்டத்தைப் பிரயோகிப்பதாகவும் திமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. இதைக் கண்டிக்கும் வகையில் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த அது அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் சிறைகளை நிரப்பும் வகையில் மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதற்காக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை ஆங்காங்கே வழிமறித்தும், போராட்டக் களத்தில் வைத்தும் போலீஸார் கைது செய்தனர்.
ஒவ்வொரு ஊரிலும் பல ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாக திமுக தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக அருகாமையில் உள்ள கல்யாண மண்டபங்களுக்குக் கொண்டு சென்று தங்க வைக்கப்பட்டனர்.
முக்கியத் தலைவர்கள் பலர் கைது
சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தாமோ அன்பரசன், நடிகை குஷ்பு, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் 22 இடங்கள்
சென்னையில் 22 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், சைதாப்பேட்டையில் கனிமொழி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.
இதுவரை 1 லட்சம் பேருக்கு மேல் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக திமுக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்கள் கல்யாண மண்டபங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மாலையில் விடுதலை
கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதானதால் அவர்களை அடைக்க சிறையில் இடமில்லை என்று காவல்துறை தரப்பில் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், கொடநாட்டில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டனர். அதன் இறுதியில், முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி அத்தனை பேரையும் மாலை 6 மணியளவில் போலீஸார் விடுவித்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து காலையில் கைதான மு.க.ஸ்டாலின், கனிமொழி, குஷ்பு, தயாநிதி மாறன் உள்ளிட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் விடுவிக்கப்பட்டு விட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக