சனி, 21 ஜூலை, 2012

பார்ப்பனர் அல்லாத யாரும் சட்டை அணியக் கூடாது

பூணூல் Vs துண்டு – பார்ப்பனியம் Vs திராவிட இயக்கம்



எவ்வளவோ நாகரீகம் வந்துவிட்டது. ஆனால் இன்னும் அரசியல்கட்சி மேடைகளில் துண்டு போர்த்துவதும், அரசியல்வாதிகள் தோளில் துண்டுபோட்டுக்கொள்வதுமாக இருக்கிறார்களே, இந்த அநாகரீகமான துண்டுக்கலாச்சாரம் ஒழியவே ஒழியாதா?
எஸ்.என்.சிவசைலம், சேலம்.
 பெரியாருடன்  அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
தோளில் துண்டு போடுகிற கலாச்சாரம், இடுப்பில் துண்டு கட்டுகிற கலாச்சாரத்திற்கு எதிராக வந்தது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதிக்காரர்களைத் தவிர, வேறு யாரும் சட்டை அணியக் கூடாது. தோளில் துண்டுப் போடக்கூடாது, அப்படியே போட்டாலும் ‘உயர் ஜாதி’க்காரர்களை கண்டால் அந்தத் துண்டை எடுத்து இடுப்பில் கட்ட வேண்டும் என்று இருந்த அநீதியை எதிர்த்து பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் கடுமையாக போராடியது.
ஒடுக்கப்பட்ட இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த – நாதஸ்வரம், தவில் வாசிக்கிற கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது, என்று இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, பெரியாரின் போர்வாளான பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்தார்.
இன்று கூட தோளில் துண்டு போடுகிற பழக்கம் அரசியல் கட்சிகளில் அதிகம் இருப்பது திமுகவிடம்தான். அதற்குக் காரணம் பெரியார் மூலம் ஏற்பட்ட பழக்கமே.

தோளில் துண்டு போடுகிற இந்தப் பழக்கம், திராவிட இயக்கங்களின் பழக்கம் என்பதினால்தான் பார்ப்பன பத்திரிகைகள் – அரசியல்வாதிகள் பற்றியான நகைச்சுவைகளில், கார்ட்டூன்களில் தோளில் துண்டுப் போட்ட உருவங்களையே வெளியிடுவார்கள்.
அரசியல்வாதிகள் தோளில் துண்டுப் போட்டுக் கொள்வது உங்களுக்கு எந்த வகையில் இடைஞ்சலாக இருக்கிறது? நீங்கள் ஏன் எரிச்சல் அடைகிறீர்கள்?
தோளில் துண்டுப் போடுவது அநாகரிகமல்ல, சுயமரியாதை. தோளில் பூணூல் போடுவதுதான் அநாகரீகம்.
www.mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக