புதன், 4 ஜூலை, 2012

வாரிசுகள் அடிபட்டுக் கொண்டிருக்க, குஷ்பு தலைவியாகி விடுவாரோ!?

Viruvirupu



தி.மு.க.-வின் சிறை நிரப்பும் போராட்டத்தில், ஸ்டாலின் கலந்து கொண்டு கைதான கொளத்தூர், கனிமொழி கலந்து கொண்டு கைதான சைதாப்பேட்டை ஆகிய லெகேஷன்களுக்கு அடுத்தபடியாக, நட்சத்திர அந்தஸ்துடன் இருந்தது, சேப்பாக்கம். இங்கு என்ன விசேஷம்? குஷ்புதான் விசேஷம்.
தி.மு.க. துவங்கிய காலத்தில் பொதுக்கூட்டம் என்றால், அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், ஆசைத்தம்பி, மதியழகன், கருணாநிதி, அன்பழகன் என்று நட்சத்திரப் பேச்சாளர்கள் பேசுகிறார்கள் என்றால் கூட்டம் அலைமோதும். இப்போது, கருணாநிதி குடும்பத்தினருக்கும், சினிமா நட்சத்திரத்துக்கும் கூட்டம் வருகிறது.
ஸ்டாலின், கனிமொழிக்கு வந்த அளவில், குஷ்புவுக்கும் கூட்டம் திரண்டது.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் எழிலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் லேசான ஒரு குழப்பம். எந்தவொரு அரசியல் கட்சியிலும் வரக்கூடாத குழப்பம். “யாருடைய தலைமையில் போராட்டம் நடக்கிறது?”
ஏரியாவில் எட்டிப் பார்த்தால் குஷ்புதான் ஜொலித்துக் கொண்டிருந்தார். மீடியா கேமராக்களும், குஷ்புவை சுற்றிச் சுற்றித்தான் வந்தன.
தொண்டர்களும் குஷ்புவை திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். தவிர குஷ்புவுக்கு பாதுகாப்பாக தி.மு.க.-வின் ‘அதிரடிப் படை’ ஒன்றும் அவரைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தது.
அதிரடிப் படைக்கான காரணம் என்ன?
கடந்த தி.மு.க. பொதுக்கூட்டம் ஒன்றில் குஷ்பு கலந்து கொண்டபோது நடந்த அசம்பாவிதமே காரணம்.
ஆரம்பகாலத்தில் தி.மு.க. தொண்டர்கள், அவ்வப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம், மாநில சுயாட்சிக்காக இடையிடையே ஆர்ப்பாட்டம் என்று பிசியாக இருந்தார்கள். கடந்த பொதுக்கூட்டத்தில், இந்தியும், மராத்தியும் பேசும் குஷ்புவின் இடையில் கிள்ளி விட்டார்களாம்.
இம்முறை சிறை நிரப்பு போராட்டத்திலும் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு, இடையில் மாநில சுயாட்சி காண முயற்சிக்கலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாகவே, குஷ்புவைச் சுற்றி பறக்கும் படை ஒன்றை நிறுத்தியிருந்தது தலைமைக் கழகம்.
சேப்பாக்கத்தில் சிக்கல் என்னவென்றால், சிறை நிரப்ப தயாநிதி மாறனும் வந்திருந்தார். குஷ்புவும் வந்ததிருந்தார். யாருடைய தலைமையில் போராட்டம் என்பதே கேள்வி!
“குஷ்பு அக்கா (!) தலைமையில் போராட வந்திருக்கோம்” என்றார்கள் தொண்டர்கள் கண்களில் 1000 வாட்ஸ் பல்ப் தெரிய! அங்கிருந்த மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகனிடம் கேட்டபோது, “தயாநிதி மாறன் தலைமையில்…” என லேசாக முனகினார்.
எப்படியோ, கோஷம் போட்டபோதும் குஷ்புவைச் சுற்றித்தான் தொண்டர் கூட்டம்; கைது செய்யப்பட்டபோதும் குஷ்புவைச் சுற்றித்தான் போலீஸ்காரர் கூட்டம். கைதானவர்களை அழைத்துச் செல்லும்போது, போனால் போகிறதென்று தயாநிதி மாறனையும் ஏற்றிச் சென்றார்கள்.
எமக்கு ஏற்பட்ட விபரீத சந்தேகம்: கட்சித் தலைமைக்கு வாரிசுகள் அடிபட்டுக் கொண்டிருக்க, குஷ்பு தலைவியாகி விடுவாரோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக