வியாழன், 5 ஜூலை, 2012

கர்நாடக சட்டசபையை கலைக்க அத்வானி அறிவுறுத்தல்!

 Lk Advani Tells Karnataka Bjp Again பெங்களூர்: கர்நாடகத்தில் எதியூரப்பாவும் எதிர் கோஷ்டிகளும் நடத்தி வரும் அரசியல் சர்க்கஸால் மக்களை விட அதிகமாக நொந்து போயிருக்கிறார் பாஜக மூத்த தலைவரான அத்வானி.
கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை கர்நாடகத்தில் இல்லாத அளவுக்கு கோஷ்டிப் பூசலை பாஜக சந்தித்துவிட்டது. கூடவே ஊழல் புகார்கள், நில அபகரிப்புகள், அமைச்சர்கள் மீதான பெண் வில்லங்க விவகாரங்கள் என நாறிக் கிடக்கிறது நிலைமை.

இந் நிலையில் எதியூரப்பா மீதான ஊழல் வழக்குகளால் அவருக்குப் பதிலாக அவராலேயே முதல்வராக நியமிக்கப்பட்டார் சதானந்த கெளடா. ஆனால், அமைச்சரவையில் உள்ள எதியூரப்பா ஆதரவு ஊழல் பெருச்சாளி அமைச்சர்களை கெளடா அடக்க ஆரம்பித்ததால் பிரச்சனௌ உருவானது.
இதையடுத்து அவரை நீக்கிவிட்டு தனது சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டாரை முதல்வராக்க வேண்டும் என்று தலைமையை நிர்பந்தித்து வருகிறார் எதியூரப்பா. தனது ஆதரவு அமைச்சர்கள் 10 பேரை ராஜினாமா செய்ய வைத்து தலைமையை வளைத்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வரை மாற்றுவதாக கட்காரி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் ஒப்புக் கொண்டுவிட்டனர். தான் முதல்வராகப் போவதாக நினைத்திருக்கும் ஷெட்டார், அத்வானியை சந்தித்து ஆசி பெற நேற்று காலை முதல் இரவு வரை டெல்லியில் காத்திருந்தார்.
ஆனால், அவரை அத்வானி சந்தித்த மறுத்துவிட்டார். மேலும் இதற்கு மேலும் எதியூரப்பாவுக்கு நாம் பணிய வேண்டியதில்லை என்ற நிலைக்கு வந்துவிட்ட அத்வானி, கர்நாடகத்தில் முதல்வரை மாற்றுவதற்குப் பதிலாக பேசாமல் சட்டசபையைக் கலைத்துவிட்டு இடைத்தேர்தல் நடத்த பரிந்துரை செய்யலாம் என்று கூறியுள்ளார்.
இதை கர்நாடக பாஜக பிரமுகர்களிடம் அத்வானியே நேரடியாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் சதானந்த கெளடாவே முதல்வராக நீடிப்பாரா அல்லது அத்வானியை மீறி ஷெட்டார் முதல்வராகி விடுவாரா என்ற புதிய பரபரப்பு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக