புதுடில்லி:சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க
எதிர்ப்பு தெரிவித்து, சமாஜ்வாதி, மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் இடதுசாரி
கட்சிகள் சார்பில், பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கான
நடவடிக்கைகளை, கடந்த சில மாதங்களுக்கு முன், மத்திய அரசு மேற்கொண்டது.
இதற்கு, சில மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.ஐ.மு., கூட்டணியில் உள்ள திரிணமுல் காங்., கட்சியும், எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை, மத்திய அரசு ஒத்தி வைத்தது. அனைத்து அரசியல் கட்சிகளுடனும், விரிவான ஆலோசனை நடத்தி, அதற்கு பின், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பது என, மத்திய அரசு முடிவு செய்தது.
மீண்டும்...:இந்நிலையில், மத்திய அரசு சார்பில், மீண்டும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத், இந்திய கம்யூ., பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி, பார்வர்டு பிளாக் கட்சியின் தேவ பிரதா பிஸ்வாஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த தனிஷ், ஆர்.எஸ்.பி.,யின் அபானி ராய் ஆகியோர், இது தொடர்பாக, பிரதமருக்கு கூட்டாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை கைவிட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளுடனும், விரிவான ஆலோசனை நடத்தி, அனைவரின் கருத்துகளையும் கேட்ட பின்பே, இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது, ஆலோசனை எதுவும் நடத்தாமலேயே, அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக வெளியாகும் தகவல், கவலை அளிக்கிறது.
பாதிப்பு: அரசியல் வேறுபாடுகளை கடந்து, பெரும்பாலான அரசியல் கட்சிகள், இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை, நினைவுபடுத்த விரும்புகிறோம்.நாட்டில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக, சில்லரை வர்த்தகத்தில் தான், அதிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அன்னிய முதலீட்டை அனுமதித்தால், இத்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
வேலை வாய்ப்பு குறைந்து வருவதாக, ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், சில்லரை வர்த்தகத் துறையில், அன்னிய முதலீட்டை அனுமதித்தால், வேலை வாய்ப்பில் மேலும் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு, அந்தக் கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக