செவ்வாய், 17 ஜூலை, 2012

கேரளாவில் இளம் பெண்கள் விற்பனை. திருமணம்? விற்கப்படுவது?

மூணாறு:கேரளாவில் தோட்டத் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, இளம் பெண்கள் கொத்தடிமையாக வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்படுவதும், திருமணம் என்ற பெயரில் விற்கப்படுவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

கேரளா, பீர்மேடு தாலுகாவில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. பல தோட்டங்கள் நஷ்டத்தால் முடங்கியுள்ளன. இதை நம்பி இருந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வறுமையால், குழந்தைகள் படிப்பை தொடர முடியவில்லை. வண்டிபெரியார் பகுதியில் சீருடை வாங்க வசதியில்லாததால், பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இதற்கு உதாரணம். வேலை தேடி, ஏராளமானோர் வெளி மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

கொத்தடிமை:தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, பாம்பனார், ஏலப்பாறை, வண்டிபெரியார் பகுதிகளில் இளம் பெண்களை குறிவைத்து ஏஜன்ட்கள் செயல்படுகின்றனர். குடும்பத்தினருக்கு பண ஆசை காட்டி, பெண்களை, "வீட்டு வேலைக்கு' என, வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். பீர்மேடு தாலுகாவில் கடந்த ஆறு மாதங்களில் 12 க்கும் மேற்பட்ட பெண்கள் இதுபோல அனுப்பப்பட்டுள்ளனர். "மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம்; மாணவிகளாக இருந்தால் தொடர்ந்து படிக்கலாம்' எனக்கூறி அழைத்துச் செல்கின்றனர். இதற்காக பெண்களின் பெற்றோருக்கு, 5000 ரூபாய் வரை கொடுக்கின்றனர். இதுபோல பல பெண்கள், தமிழக வீடுகளில் வேலைக்கு உள்ளனர். இதற்காக, ஏஜன்ட்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் வழங்கப்படுகிறது.
வேலை செய்யும் இடத்தில் நடக்கும் கொடுமைகள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. தற்போது, பெரம்பலூர் தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., ராஜ்குமார் வீட்டில் சிறுமி மேகலா,15, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கற்பழித்து கொல்லப்பட்டதன் மூலம் "பெண் கொத்தடிமை' முறை அம்பலமாகியுள்ளது.

பெண்கள் விற்பனை: மேகலாவின் சகோதரியும், ஈரோடு அருகே புதுக்குளம் பகுதியில் வயதானவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். "திருமணத்திற்கு பின் மகளை பார்க்கக் கூடாது' என, "ஒப்பந்தம்' செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெற்றோருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர்.பீர்மேடு பகுதியில் ஏராளமான இளம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாக, பிஜூமோள் எம்.எல்.ஏ., கேரள சட்டசபையில் பேசினார். இதன்படி, விரிவான விசாரணை நடத்த இடுக்கி எஸ்.பி., ஜார்ஜ்வர்க்கீஸ்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக