வெள்ளி, 13 ஜூலை, 2012

பழங்குடியின மக்களுக்காக மத்திய அரசு புதிய திட்டம்: தேன், புளி, மூங்கிலுக்கு குறைந்தபட்ச விலை

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மற்றும் கோதுமையை குறைந்தபட்ச கொள்முதல் விலை கொடுத்து வாங்குவது போல, பழங்குடியின மக்களால் தயாரிக்கப்படும் தேன், மூங்கில், பீடி இலை போன்றவற்றையும் குறைந்தபட்ச கொள்முதல் விலை கொடுத்து வாங்கிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பழங்குடியின மக்கள் பெரிதும் பயன் பெறுவர்.
நெல் மற்றும் கோதுமையை விவசாயிகளிடம் இருந்து அரசே கொள்முதல் செய்கிறது. இதற்காக விவசாயிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்து அவற்றை வாங்கி வருகிறது.
உரிய விலை: இதனால், விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலையை பெறுவதோடு மட்டுமின்றி, இடைத்தரகர்களின் ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது.
இதே பாணியை பழங்குடியின மக்களும் பயன் பெறும் வகையில் கையாள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், நிறைய பொருட்களை சமூகத்துக்கு வழங்கி வருகின்றனர். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்தும், மக்களுக்கு மிகவும் அவசியமானதாகவும், அரியதாகவும் இருக்கின்றன. ஆனால், அந்தப் பொருட்களுக்குரிய நியாயமான விலை அளிக்கப்படுவதில்லை. உற்பத்தி செலவுக்குரிய தொகை கூட, அவர்களுக்கு செல்லாத நிலை காணப்படுகிறது. இதை மாற்றுவதற்காக, அரசாங்கமே அவர்களிடம் இருந்து நேரடியாக இந்தப் பொருட்களை வாங்கிடவும், அவற்றுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனி கமிஷன்: தேன், மூங்கில், பீடி இலை, புளி, பிசின் உள்ள 13 முக்கிய பொருட்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்தப் பொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இந்த திட்டம், 2013ம் ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த விலை நிர்ணயங்களை ஆராய்ந்து முடிவு செய்வதற்கென்றே தனியாக ஒரு கமிஷனும் அமைக்கப்பட உள்ளது. காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நியாயமான விலை கிடைப்பதோடு மட்டுமல்லாது, அவர்களின் வாழ்வாதாரமும் இதன் மூலம் மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பழங்குடியின மக்களின் நலனுக்கு என்றே, "டிரிபெட்' என்ற மத்திய அரசு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனமே பழங்குடியின மக்களிடம் இருந்து, 13 பொருட்களையும் கொள்முதல் செய்து கொள்ளும். மத்திய அரசு இந்நிறுவனம் மூலம் செய்வதாக இருந்தாலும், மாநில அரசுகளும் அவர்களுக்கு ஏற்ற வகையில் ஒரு நிறுவனம் அமைத்து, அதன் மூலம் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களை நேற்று டில்லியில் நிருபர்களை சந்தித்த, பழங்குடியினர் நலனுக்கான மத்திய அமைச்சர் கிஷோர் சந்திர தேவ் அறிவித்தார். பஞ்சாயத்து ராஜ் இலாகாவுக்கும் பொறுப்பு வகிக்கும் அவர் மேலும் கூறியதாவது:

வலுப்படுத்த திட்டம்: பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை மேன்மேலும் வலுப்படுத்துவது என, மத்திய அரசு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதும் 1.40 லட்சம் ஊராட்சிகள் உள்ளன. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், இந்த ஊராட்சி அமைப்புகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள், சாலை வசதி என, ஊராட்சி அமைப்புகளின் தேவைகள் என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். இவை அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து, அந்தந்த மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

கிராம சபைகள் அனுமதி: எந்தவொரு நிலங்களையும் கையகப்படுத்த வேண்டுமெனில், கிராம சபைகளின் அனுமதி வேண்டும். கிராம சபைகளின் அனுமதியில்லாமல், வனங்களில் உள்ள நிலங்களை யாரும் வாங்க முடியாது. இதற்கேற்ற வகையில் வனத்துறை சட்டம் மேலும் வலுப்படுத்தப்படும். கிராம ஊராட்சிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் வீடியோ ஒளிப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யப்படுவதன் மூலம் நம்பகத்தன்மையும், வெளிப்படையான அணுகுமுறையும் உறுதிப்படுத்தப்படும். கர்நாடகாவில் இதுபோன்ற கிராம ஊராட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற முன்வர வேண்டும். இவ்வாறு கிஷோர் சந்திரதேவ் கூறினார்.

சத்தீஸ்கர் சம்பவம்: பதிலளிக்க மறுப்பு: அமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, நிருபர்களை கிஷோர் சந்திரதேவ் டில்லியில் சந்தித்தார். பழங்குடியினர் நலம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகிய தனது இலாகாக்களில் என்னென்ன செய்யப்பட்டுள்ளது என்பதை விளக்குவதற்காக வந்திருந்த அவரிடம், சத்தீஸ்கர் என்கவுன்டர் சம்பவம் குறித்தே கேள்விகளைக் கேட்பதில் நிருபர்கள் தீவிரமாக இருந்தனர். இதையறிந்த கிஷோர், அது பற்றி தான் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு, "அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று நான் கூறியதிலிருந்து பின்வாங்கவில்லை. அதில், மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. எனக்கு கிடைத்த தகவல்களை வைத்தே நான் கூறினேன். உள்துறை அமைச்சருக்கு கிடைத்த தகவல்களை வைத்து, அவர் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநில அரசு, நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் அறிக்கை வரட்டும். அதுவரை புதிதாக எதுவும் சொல்லப் போவதில்லை' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக