செவ்வாய், 10 ஜூலை, 2012

கூடங்குளம் அணு மின் பணிகளில் சுணக்கம், யார் காரணம்?

சென்னை:"ஒவ்வொரு துறையிலும் ஊழல். நிர்வாகமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது கேள்வி-பதில் அறிக்கை:
கடந்த தி.மு.க., ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, மின் வாரியம் நெருக்கடியில் சிக்கித் தவித்தது என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மின்சாரம் எப்போது வரும், போகும் என, யாருக்கும் தெரியாது. இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கட்டணம். மின்சார மீட்டர் கிடைக்காமல், பொதுமக்கள் திண்டாடுகின்றனர். இதிலே, தி.மு.க., ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை என்று அறிக்கை விடுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. ஒவ்வொரு துறையிலும் ஊழல். நிர்வாகமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது.


ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் அனல் மின் திட்டம், 1,200 மெகாவாட் மின் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் திட்டம், 600 மெகாவாட் மின் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டம் ஆகியவற்றின் பணிகளை, முழுவீச்சில் முடுக்கிவிட்டதை அடுத்து, விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளன என கூறியுள்ளார். இந்தத் திட்டங்கள் எல்லாம், கடந்த ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்டது அல்லவா?

ஜவ்வாக இழுத்ததற்கு...:கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளில் ஏற்பட்ட பிரச்னையை, விவேகத்துடன் தன் தலைமையிலான அரசு கையாண்டதன் காணமாக, விரைவில், அது உற்பத்தியைத் துவங்கவுள்ளது என கூறியுள்ளார். மிக வேகமாகச் செயல்பட்டு வந்த கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளில், சுணக்கம் ஏற்பட யார் காரணம்? எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டு, அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, அந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென, மத்திய அரசை ஜெயலலிதா கேட்டுக் கொண்டாரா இல்லையா?

மக்கள், அதற்குள் இதையெல்லாம் மறந்திருப்பர் என எண்ணிக் கொண்டு, கூடங்குளம் பிரச்னையை, விவேகத்துடன் அவர் தலைமையிலான அரசு கையாண்டதாக, கதை அளந்திருக்கிறார். தற்போது, 4 ஆயிரம் உதவியாளர்களை, மின் வாரியத்தில் நேரடியாக நியமிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். நல்ல வேட்டை தான். வேடிக்கை பார்க்கலாம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக