புதுடில்லி: சமூக சேவகரும், முதுபெரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே,
முதன்முறையாக தனது அரசியல் விருப்பம் தொடர்பான விவரங்களை பகிரங்கமாக
வெளியிட்டார். 2014 பொதுத் தேர்தலின் போது, நாடு முழுவதும் பயணம் செய்து,
வேட்பாளர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்காக பிரசாரம் செய்யப் போவதாகவும்
கூறியுள்ளார்.
செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:கட்சி உதயமாகும்: வரும் 2014 பொதுத் தேர்தலின் போது, நான், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன். நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்து தரும்படி மக்களை கேட்டுக் கொள்வேன். அவர்களில் சிறந்தவரை வேட்பாளராக அறிவிப்பேன். பின்னர் அவர்களை வெற்றி பெறச் செய்ய, பிரசாரம் செய்வேன். மக்களிடம், வேட்பாளர்களின் பெயர்களை இணையதளத்தில் தெரிவிக்கும்படி கேட்டு, அவர்களில் சிறந்தவரை தேர்வு செய்வேன். இந்த வேட்பாளர்கள் மூலம், மக்கள் கட்சி என்ற புதிய கட்சி கூட, உதயமாக வாய்ப்பு உண்டு.
தப்பில்லை: நாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளர்களிடம், சுயேச்சையாக போட்டியிட விரும்புகிறீர்களா அல்லது ஒரு கட்சி சார்பில் போட்டியிட விரும்புகிறீர்களா எனக் கேட்போம். அது குறித்து அவர்களே முடிவு செய்யும்படி கேட்டுக் கொள்வோம். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, புதிய கட்சி உதயமாவதில் தப்பு ஒன்றும் இல்லை. அந்த வேட்பாளர்களில் இருந்தே, கட்சிக்கான புதிய தலைவர் ஒருவர் உருவாகுவார். ஜன் லோக்பால் மசோதா விவகாரத்தில், மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோல்வியடைந்து விட்டது. அதனால் தான், பொதுமக்களிடம் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் இந்த முறையை, நாங்கள் பின்பற்றத் தீர்மானித்துள்ளோம். காங்கிரஸ் கட்சியோ அல்லது பாரதிய ஜனதா கட்சியோ மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எதிர்காலம் இருண்ட காலமாகி விடும்.
மக்கள் அறிவர்: லோக்பால் மசோதாவை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கின்றன என்பதை மக்கள் அறிவர். 2014 பொதுத் தேர்தலின் போது, அந்தக் கட்சிகளுக்கு எல்லாம் மக்கள் பாடம் புகட்டுவர். அனைத்துக் கட்சிகளையும் மக்கள் நிராகரிப்பர். இப்போதைக்கு மக்களால் எதுவும் செய்ய முடியாது. அடுத்த தேர்தல் வரும் வரை காத்திருக்க வேண்டும். ஜன் லோக்பால் மசோதாவை, தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு போதும் கொண்டு வராது. அப்படி கொண்டு வரப்பட்டால், எங்கள் குழுவினரால், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் எல்லாம் சிறையில் இருக்க நேரிடும். அந்த அமைச்சர்கள் எல்லாம் அப்பாவிகள் எனில், அவர்களுக்கு எதிராக, விசாரணை நடத்த மத்திய அரசு தயங்குவது ஏன்? ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வராவிட்டால், இந்த அரசு நிச்சயம், தேர்தலில் தோல்வி கண்டு விடும். இவ்வாறு அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக