திங்கள், 9 ஜூலை, 2012

Air India விமானத்தில் கோளாறு.. பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்!

இஸ்லாமாபாத்: டெல்லியில் இருந்து அபுதாபி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென எந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் அவசரமாக பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
130 பயணிகளுடன் அபுதாபி சென்று கொண்டிருந்த அந்த விமானம் (AI 940) பாகிஸ்தானின் மீது பறந்தபோது விமானத்தில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. அதன் சக்கரங்களை கீழே இறக்கும் ஹைட்ராலிக் சிஸ்டத்திலும் பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து விமானத்தை விமானிகள் உடனடியாக தரையிறக்க பாகிஸ்தானிடம் அனுமதி கோரினர். உடனடியாக அனுமதி தரப்பட்டதையடுத்து தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
விமான நிலையம் எமர்ஜென்சி நிலைக்குக் கொண்டு வரப்பட்டு தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. ஆனால், எந்த பிரச்சனையும் இன்றி விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.
Airbus 319 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தின் 3 ஹைட்ராலிக் சிஸ்டங்களும் சரிவர செயல்படதாததால் உடனடியாக அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகள் முடிவு செய்ததாகத் தெரிகிறது.
நவாப்ஷா விமான நிலையம் மிகச் சிறிய ஒன்றாகும். அங்கு விமானக் கோளாறுகளை சரி செய்ய வசதிகள் இல்லை. இதையடுத்து டெல்லியிலிருந்து ஏர் இந்தியா என்ஜினியர்களுடன் ஒரு விமானம் நவாப்ஷா விமான நிலையத்துக்கு அனுப்பப்படவுள்ளது.
அந்த விமானமே பயணிகளை அபுதாபி அல்லது மீண்டும் டெல்லிக்கு அழைத்து வரும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக