சனி, 28 ஜூலை, 2012

Air Cells Maxis மாறன் சகோதரர்கள் ரூ. 549 கோடி லஞ்சம் பெற்றனர்-

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் ரூ.549 கோடி லஞ்சம் வாங்கியுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. 
 இது தொடர்பாக இருவர் மீதும் விரைவிலேயே சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளது. மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை கட்டாயப்படுத்தி விற்கச் செய்ததன் மூலம் 547 கோடி ரூபாய் அளவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும், சன் டிவி உரிமையாளருமான கலாநிதி மாறன் ஆகியோர் பலனடைந்ததாக சிபிஐ கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே மாறன் சகோதரர்கள், மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணன், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் மற்றும் மேக்ஸிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ரால்ஃப் மார்ஷல், சன் டைரடக்ட் டிவி, ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் மற்றும் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. அதில், ஏர்செல் பங்குகள் விற்பனையின் மூலம் சட்டவிரோதமாக ரூ. 549 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றது. அதில் மாறன் சகோதரர்கள் ஆதாயம் அடைந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ மாறன் சகோதரர்களிடம் ஆரம்பத்தில் விசாரணை நடத்தியதோடு அமைதியாகிவிட்டது.

இந் நிலையில் கடந்த 24ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் குழு முன் சிபிஐ இயக்குனர் அமர் பிரதாப் மற்றும் அதிகாரிகள் ஆஜராகினர். இதற்கு சில நாட்களுக்கு முன்னதாக (ஜூலை 21ம் தேதி) தயாநிதி, கலாநிதி இருவரிடமும் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்திய விவரம் இப்போது தான் வெளியில் வந்துள்ளது. அப்போது, சிவசங்கரன் அளித்த புகார் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளித்த மாறன் சகோதரர்கள், அதிகாரிகள் கேட்ட சில ஆவணங்களையும் ஒப்படைத்ததாகத் தெரிகிறது.

மேலும் அப்போது தயாநிதி அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர் தனது நினைவில் இருந்த தகவல்களைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன் ஆஜரான சிபிஐ அதிகாரிகளிடம் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா சில முக்கிய கேள்விகளை எழுப்பினார். 2ஜி விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக நடத்திய விசாரணையில் மேல் நடவடிக்கை எடுக்க சிபிஐ தயக்கம் காட்டுகிறதா? என்றும் குருதாஸ் தாஸ்குப்தா கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சிபிஐ இயக்குனர், ஏர்செல்-மேக்ஸிஸ் பங்குகள் விற்பனை விவகாரத்தில் 2004-07ம் ஆண்டு முதல் தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். அப்போது, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஏர்செல் பங்குகளை விற்பனை செய்ய நெருக்கடி கொடுத்தார் என அந்நிறுவனத்தின் அதிபராக இருந்த சிவசங்கரன் 2011ம் ஆண்டில் சிபிஐயிடம் புகார் அளித்தார். அதன் மீது சிபிஐ விசாரணை நடத்தி வருக்கிறது. இந்த வழக்கில் விரைவில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதே நேரத்தில் இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் கைது செய்யப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவையும் சிபிஐ எடுக்கவில்லை என்றும் தெரிகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிபிஐ தயாநிதி மாறனின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவசங்கரன் கேட்டபோது ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸை தராத தயாநிதி, மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் பங்குகளை விற்க வைத்து, பின்னர் ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸை தந்தார்.

இதையடுத்து சன் டிவியின் சன் டைரக்ட் பிரிவுக்கு மேக்ஸிஸ் துணை நிறுவமான Astro All Asia Networks நிறுவனத்தின் இன்னொரு பிரிவான South Asia Entertainment Holdings Ltd நிறுவனத்திடம் இருந்து ரூ. 5,49,96,01,793 வந்து சேர்ந்தது என்கிறது சிபிஐ.

முன்னதாக இந்த விசாரணைகளுக்காக சிபிஐ டீம் மலேசியா, சிங்கப்பூருக்கு சென்று வந்தது. பின்னர் மலேசிய அரசுக்கு இந்த பணப் பரிவர்த்தனை தொடர்பான சில ஆவணங்களைக் கேட்டு சிபிஐ கடிதமும் எழுதியது.

இதையடுத்து சிபிஐயிடம் சில விளக்கங்கள் கேட்டு மலேசிய அரசு ஒரு பெரிய கேள்விப் பட்டியலையே அனுப்பி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக