புதன், 4 ஜூலை, 2012

கட்டட பணியா... கதறி ஓடும் ஒப்பந்ததாரர்கள் admk கட்டிங்' தொகை உயர்வு

சென்னை: ஒன்பது முறைக்கும் மேலாக, ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) விடுத்தும், வேலை செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வராததால், பல்வேறு பள்ளி கட்டடப் பணிகள், கிடப்பில் உள்ளன 
கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், பள்ளி, கல்லூரியில் புதிய கட்டடங்கள் அமைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு, 7.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. கிடப்பில் கட்டட பணி: இதற்காக, பத்து இடங்களில் வேலைகள் துவக்க, பொதுப்பணித் துறையால் ஒப்பந்தப் புள்ளி விடப்பட்டது. முதல் இரண்டு முறை விடுத்த ஒப்பந்தப் புள்ளிக்கு, ஒப்பந்ததாரர் எவரும் முன்வராததால், அடுத்த முறையும் முயற்சி எடுக்கப்பட்டது. ஒரு சில வேலைகளுக்கு, 10 முறைக்கும் அதிகமாக, ஒப்பந்தப் புள்ளி விடுத்தும், இன்று வரை, பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் முன்வரவில்லை. இதனால், பள்ளி கட்டடப் பணிகளுக்கு நிதி ஒதுக்கியும், வேலை துவக்கப்படாமல் உள்ளது; மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


காரணம் என்ன? இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத ஒப்பந்ததாரர் ஒருவர் கூறியதாவது: நிர்வாகத் தரப்பில், மூத்த அதிகாரியில் இருந்து, கடைநிலை ஊழியர் வரையும்; அரசியல் தரப்பில், மாவட்ட செயலரில் இருந்து, வட்ட செயலர் வரையும்; பிறகு, "மேலிடத்திற்கு' கணிசமான தொகை என, கால் பங்கு தொகை சென்று விடுவதால், முக்கால்வாசி பணத்தை வைத்து, கட்டடப் பணிகளை துவக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதில், குறிப்பிட்ட தரப்பினருக்கு, "சதவீதம்' சென்று சேரவில்லை என்றால், மீண்டும் மறு ஆய்வு என்ற பெயரில், ஆரம்பத்தில் இருந்து, "கறக்கும்' வேலை துவங்கும். எனவே, தரமற்ற கட்டடங்கள் உருவாக, நாங்கள் மட்டுமே காரணம் அல்ல. சில இடங்களில், வேலைகளுக்கான அடிப்படை செலவை விட, "சதவீதம்' அதிகமாக உள்ள பகுதிகளில், ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தப் புள்ளியை எடுக்க, கலந்து கொள்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர் பிரச்னையே...: ஒப்பந்தப் புள்ளி எடுக்க, ஒப்பந்ததாரர்கள் முன்வராதது குறித்து, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் (கட்டடம்) கோபால கிருஷ்ணனிடம் கேட்ட போது, ""திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில், கட்டட வேலைக்கு, தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. மேலும், அங்குள்ள மண்ணின் தன்மை, இறுக்கமாக காணப்படுவதால், தொழிலாளர் பிரச்னை, அங்கு அதிகமாக உள்ளது. இந்த காரணத்தாலேயே, ஒப்பந்தப் புள்ளி எடுப்பதில், ஒப்பந்ததாரர்களுக்கு தயக்கம் ஏற்பட்டிருக்கலாம். பணிகள் நடக்காததற்கு, "சதவீதத்தை' காரணமாக சொல்வது தவறானது'' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக