திங்கள், 2 ஜூலை, 2012

புதிதாக 3,595 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கியுள்ளது மருத்துவக் கல்வித் துறை

புதுடில்லி:மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது. இந்த ஆண்டு மருத்துவக் கல்வித் துறை புதிதாக 3,595 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கியுள்ளது.
இதில், புதிதாக துவக்கப்படும் 20 மருத்துவக் கல்லூரிகளில் 2,400 மாணவர்களைச் சேர்க்க, இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர, ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 1,195 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், எம்.பி.பி.எஸ்., படிப்பில் இந்த ஆண்டு, நாடு முழுவதும் கூடுதலாக 3,595 மாணவர்கள் சேரலாம்.
எய்ம்ஸ் நிறுவனங்கள்:புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எம்.பி.பி.எஸ்., இடங்களில், 300 இடங்கள், பல மாநிலங்களில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் துவங்கும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் போன்ற, ஆறு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இது தவிர, புதிதாக 1,442 முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களையும், இந்திய மருத்துவக் கவுன்சில் உருவாக்கியுள்ளது. இவற்றில், எம்.டி., - எம்.எஸ்., என, தற்போதுள்ள மருத்துவக் கல்லூரிகளில் 1,326 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மற்ற 116 இடங்கள், டி.எம்., - எம்.சி.எச்., ஆகும்.

அரசு துறையில் ஒன்பது:இந்திய மருத்துவக் கவுன்சிலால் புதிதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 20 மருத்துவக் கல்லூரிகளில், ஒன்பது கல்லூரிகள் அரசுத் துறை சார்ந்தவை; 11 கல்லூரிகள் தனியார் துறை சார்ந்தவை. புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் செயல்பாட்டிற்கு வந்தால், நாட்டில் மொத்தம் 355 மருத்துவக் கல்லூரிகள் இயங்கும். அவற்றில், 45 ஆயிரத்து 569 எம்.பி.பி.எஸ்., இடங்கள் இருக்கும்.கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கியுள்ளதன் மூலம், நாட்டில் டாக்டர்கள், நோயாளிகள் வீதம் தற்போதுள்ள 1:2000 என்ற அளவிலிருந்து வரும் 2021ம் ஆண்டில், 1:1000 என்ற அளவில் குறையும். அத்துடன் வரும் 2021ம் ஆண்டிற்குள், எம்.பி.பி.எஸ்., இடங்கள், தற்போதுள்ள 41 ஆயிரத்து 569லிருந்து, 80 ஆயிரமாக உயரும். முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள், 22 ஆயிரத்து 194லிருந்து, 45 ஆயிரமாக அதிகரிக்கும். தற்போது டாக்டர்களின் பற்றாக்குறை எட்டு லட்சம் என்ற அளவில் உள்ளது. அதைப் போக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

66 சதவீதம் :அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, நாட்டில் உள்ள தற்போதுள்ள 355 மருத்துவக் கல்லூரிகளில், 66 சதவீத கல்லூரிகளும், மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்களில் 69 சதவீத இடங்களும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் கோவா மாநிலங்களில் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக