புதன், 18 ஜூலை, 2012

2G Spectrum பிரமோத் மகாஜனுக்கும்(BJP) தொடர்பு

 2g Pramod Mahajan Be Named Cbi Chargesheet
டெல்லி: மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் பாஜக ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த மறைந்த பிரமோத் மகாஜனுக்கும் தொடர்பிருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து பிரமோத் மகாஜன் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் விசாரித்து வருகிறது. இதில் பாஜக ஆட்சியில் மறைந்த பிரமோத் மகாஜன் மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறனின் பதவிக்காலங்களிலும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரிய வந்தது.
மேலும் 2003 ஜனவரி முதல் 2004 மே மாதம் வரை பாஜக ஆட்சியில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக அருண் சௌரி இருந்தபோது நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் சி.பி.ஐ. விசாரித்தது.
அப்போது, முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை, தொலைத்தொடர்புச் சேவையை மேம்படுத்துவதற்காகவே பின்பற்றப்பட்டது
தெரிய வந்தது. அதாவது, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொழில் செய்யத் தயங்கிய வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா, ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளிலையே இந்த முறையில் பெரும்பாலான உரிமங்கள் வழங்கப்பட்டன. ஆக, அருண் சௌரியின் பதவிக்காலத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்பது விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து அவருக்கு எதிரான வழக்கை சிபிஐ கைவிட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாஜக ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது சிபிஐ விசாரணையில் உறுதியாகிவிட்டது.
2001ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன், பாரதி ஏர்டெல், ஹட்சின்சன் எஸ்ஸார் (தற்போதைய வோடாபோன்), ஸ்டெர்லிங் செல்லுலார் ஆகிய நிறுவனங்களுக்கு விதிகளை மீறி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கியுள்ளார்.
இந்த நிறுவனங்களும் முறைகேடாக அதை வாங்கியுள்ளன. இதையடுத்து இந்த 3 நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
அதே போல இந்த நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரத்தை முறைகேடாக ஒதுக்கிய மறைந்த பிரமோத் மகாஜன் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் அப்போது தொலைத் தொடர்புத்துறை செயலாளராக இருந்த ஷியாமல் கோஷ், பிஎஸ்என்எல் முன்னாள் இயக்குனர் ஜே.ஆர்.குப்தா ஆகியோர் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக