ஞாயிறு, 8 ஜூலை, 2012

100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்

சென்னை :தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக இந்த ஆண்டு தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாணவ, மாணவிகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே மேல்நிலை கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த ஆண்டு 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. மொத்தம் 875 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இந்த ஆண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு என 9 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 பணியிடங்கள் உருவாக்கப்படும். 100 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40 கோடியே 26 லட்சம் செலவு ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக