இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் பிரதமராக இருந்த கிலானியின் பதவி,
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்தூம்
சகாபுதீனை புதிய பிரதமராக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக அந்நாட்டின் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. பாகிஸ்தான் அதிபர் ஆசிப்
அலி சர்தாரி மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பிரதமர்
கிலானிக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதிபருக்கு
விசாரணையில் இருந்து விலக்கு இருப்பதாக கூறிய கிலானி, கோர்ட் உத்தரவை
செயல்படுத்தவில்லை. கோர்ட் பலமுறை உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காததால்
கிலானி மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சுப்ரீம்
கோர்ட் விசாரித்தது. கிலானி, கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
நீதிபதி முல்க் தலைமையிலான 3 நீதிபதிகளை கொண்ட பெஞ்ச், கடந்த ஏப்ரல் 26,ம்
தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. கிலானியை குற்றவாளி என கூறிய
நீதிபதிகள், அவருக்கு அடையாள தண்டனையாக கோர்ட் கலையும் வரை சிறை தண்டனை
விதித்தனர். அரசியல் சட்டப்பிரிவுகள் 63 (1), 113 ஆகியவற்றின் கீழ் கோர்ட்
தண்டனை பெற்றவர், எம்.பி.யாக 5 ஆண்டுகள் பதவி வகிக்க முடியாது. எனவே, கோர்ட் தண்டனையால் தகுதி இழந்த கிலானியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், கிலானியை பதவி நீக்கம் செய்ய முடியாது. தேர்தல் கமிஷனுக்கு நான் எந்த பரிந்துரையும் செய்ய மாட்டேன் என நாடாளுமன்ற சபாநாயகர் பெஹ்மிடா மிர்சா கூறிவிட்டார். சபாநாயகரின் முடிவை எதிர்த்து நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெரிக்,இ,இன்சாப் ஆகிய கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் நேற்று பரபரப்பான தீர்ப்பு அளித்தது.
‘கோர்ட் அவமதிப்பு வழக்கில் கிலானி குற்றவாளி என்று ஏப்ரல் 26,ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது முதல் பாகிஸ்தானில் பிரதமர் பதவி காலியாக இருக்கிறது. ஜனநாயக மாண்புகளை காக்க அதிபர் சர்தாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் கூறினர். இந்த தீர்ப்பால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிலானி ராஜினாமா செய்வாரா அல்லது தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், கோர்ட் தீர்ப்பை ஏற்பதாக ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவித்தது. இதையடுத்து கிலானிக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணிகளும் நேற்றிரவே தொடங்கின. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் தனித்தனியாக அதிபர் சர்தாரி ஆலோசனை நடத்தினார். இன்று காலையும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சர்தாரி தீவிர ஆலோசனை நடத்தினார். அதில் பிரதமர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் கட்சியின் மூத்த தலைவரான மக்தூம் சகாபுதீன், புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று மதியம் நடக்கும் பாக். மக்கள் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்துக்கு பிறகு வெளியாகும் என தெரிகிறது. புதிய பிரதமரை முறைப்படி தேர்வு செய்ய, நாடாளுமன்றத்தை நாளை கூட்டவும் சர்தாரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய பிரதமராக தேர்வான மக்தூம் சகாபுதீன், கிலானியை போன்று மத நம்பிக்கை நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். இருவருமே தெற்கு பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்கள். 2008,ம் ஆண்டில் இருந்து கிலானி அமைச்சரவையில் பல்வேறு துறைகளை வகித்துள்ளார் சகாபுதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக