நித்தியின் ‘ஸ்பெஷல் டச்’சில் திணறுகிறது மதுரை ஆதீனம்!
Viruvirupu
சமீப காலமாக, “என்னடா இது மதுரை(ஆதீனத்து)க்கு வந்த சோதனை” என்று
தலையில் அடித்துக் கொண்டிருந்த பக்தர்கள் பலர், நித்தியானந்தாவின்
கைதுக்குப் பின்னராவது, மதுரை ஆதீனம் பழைய நிலைக்கு திரும்புமா என்று
எதிர்பார்க்க துவங்கியுள்ளனர்.காரணம், நித்தியானந்தா அங்கே புகுந்தபின் அவரது ‘ஸ்பெஷல் டச்’சில் மதுரை ஆதீன மடம், ஷங்கர் படத்துக்கு ஆர்ட் டைரக்டர் போட்ட சினிமா செட் போல மாறி, அவர்களை திகைக்க வைத்திருந்தது.
முன்பெல்லாம் மதுரை ஆதீனத்துக்குள் சென்றால், எந்த ஆடம்பரத்தையும் காண முடியாது. எளிமையாக காணப்பட்ட மடத்தின் உட்புறத்தில் எப்போதும் அமைதி நிலவும். அங்கு வரும் பக்தர்களை தரையில் அமரவைத்து, ஆசி வழங்கி அனுப்புவார், மூத்த ஆதீனம் அருணகிரிநாதர்.
1,500 ஆண்டுகளுக்குமுன் திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது மதுரை ஆதீன மடம் என்று சொல்லப்படுகிறது. திருஞான சம்பந்தர் ஆடம்பரப் பிரியராக இருந்ததாக தகவல் ஏதுமில்லை (சுந்தரர் ஞானம் பெறுமுன் சற்று ஆடம்பரப் பிரியராக இருந்தார் என்கிறது புராணம்) திருஞான சம்மந்தரால் தோற்றுவிக்கப்பட்டபின் 292 ஆதீனங்கள் மடத்தை நிர்வாகித்திருக்கின்றனர். அவர்கள் யாருமே, மடத்தை ஆடம்பரமாக அலங்கரித்ததில்லை.
292-வது ஆதீனமான அருணகிரிநாதர், 293-வது ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்த பின்னரே மடம் தலைகீழாக மாறியது.
ஒட்டகத்தை கூடாரத்துக்குள் விட்டதுபோல, நித்தி சுவாமிகள் உள்ளே வந்தவுடன் செய்த முதலாவது காரியம், மடத்தில் இருந்த 291 ஆதீனங்களின் படங்களையும் அப்புறப்படுத்தி விட்டு, தனது திருவுருவப் படத்தை பெரிய சைஸில் மாட்டியதுதான்.
மதுரை ஆதீனத்தின் ரெகுலர் பக்தர்கள் வேண்டுமானால் தரையில் அமர்ந்து ஆசி பெறுவதற்கு தயாராக இருக்கலாம். ஆனால், நித்தியின் ஆட்களை தரையில் அமர வைக்க முடியுமா? இதனால், ஸ்டார் ஹோட்டல்களின் லாபிகளில் இருப்பதுபோல சோபா செட்கள் போடப்பட்டன. தரைக்கு பெரிஷியன் கார்ப்பெட் விரிக்கப்பட்டது. குளோஸ் சர்க்கிட் செக்யூரிட்டி கேமராக்களும் பொருத்தப்பட்டன.
சேதுபதி மன்னர் பெயரில் மடத்தின் மாடியில் ஒரு அறை உண்டு. அந்த அறைதான் ரஞ்சிதாவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அறையின் இன்டீரியர் சுகமாக இல்லை, சுண்ணாம்பு சுவருடன் டல்லாக இருக்கிறது என்று பீல் பண்ணிய நித்தி, அறைக்கு ஏசி வசதி செய்து, இன்டீரியர் டெக்கரேஷனும் செய்தார்.
அடுத்த மாற்றம், படுக்கை வசதி.
மூத்த ஆதீனம் போகும் இடங்களில் தரையில் துண்டை விரித்து படுக்கவும் தயங்கியதில்லை. ஆனால் நம்ம நித்தி, கேமராவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே, தரையில் அமரும் ஆள். இந்த காம்பினேஷன் எப்படி ஒர்க்-அவுட் ஆகும்?
இதனால் நித்தியின் ஆர்டரில், பிரபல பர்னிச்சர் நிறுவனம் ஒன்று ‘எக்ஸ்டென்டட் கிங் சைஸ்’ (நீளம் சராசரி மனிய உயரத்தின் 1.5 மடங்காகவும், அகலம் 2.25 மடங்காகவும் இருக்கும்) கட்டில் ஒன்றை கொண்டுவந்து இறக்கியது. டச் கன்ட்ரோலில் இசை கசியும் மெத்தையும் போடப்பட்டது.
மடத்தின் மாடியில், ஜிம் ஒன்று உருவாகியது. ட்ரெட்-மில் கருவிகள் உள்ளிட்ட நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் வந்து சேர்ந்தன. தியானத்துக்கு முன்னும் பின்னும் நித்தியின் சிஷ்யர்களும், சிஷ்யைகளும் இங்கே ஒன்றாக உடற்பயிற்சி செய்யும் காட்சி, விஜயகாந்த சினிமா கனவு டூயட் சீன்போல கலர்ஃபுல்லாக இருக்கும்.
இப்போது நித்தி சிக்கலில் சிக்கி, கைது செய்யப்பட்டு உள்ளே இருப்பதாலும், மதுரை ஆதீன மடம் பழைய ஷேப்புக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அங்கு வரும் ரெகுலர் பக்தர்களுக்கு இருக்கிறது. அருணகிரிநாதர், என்ன முடிவு செய்வார் என்று தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக