திங்கள், 4 ஜூன், 2012

கடலோர பகுதிகள் மூழ்கும் ஆபத்து

பருவ நிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்து, இந்தியாவில் கடலோர பகுதிகள் மூழ்கும் ஆபத்து உள்ளதாக ஒரு ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய பருவநிலை மாற்றம் குறித்து 120 அமைப்புகளை சேர்ந்த 220 விஞ்ஞானிகள் ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற அமைப்புக்கு அறிக்கை அளித்துள்ளனர்.இந்த விஞ்ஞானிகள் அழிவு உண்டாக்கத்தக்கதும், சுனாமி தாக்கியதுமான தமிழ்நாட்டின் நாகப்பட் டினம், `பேக் வாட்டர்' என்று அழைக்கப்படுகிற உப்பங்கழிகளால் சூழ்ந்த கேரளாவின் கொச்சி, ஒடிசாவின் பாரதிப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆராய்ந்தனர்.அந்த ஆய்வின் அடிப்படையில் அவர்கள் அறிக்கை தயாரித்து அளித்துள்ளனர். அந்த அறிக்கையில், ஆண்டுகளுக்கு இடையே கடல் நீர் மட்டம் 3.5 அங்குலத்திலிருந்து 34.6 அங்குலம் அளவிற்கு உயர்கிற வாய்ப்பு உள்ளது.
இதனால் கடலோர நிலத்தடி நீர் உப்பு நீராகும். சாகுபடி நிலங்கள் அழியும். மதிப்பு மிகுந்த சாகுபடி நிலமும் மூழ்கி விடும். அந்த வகையில் மேற்கு கடலோரப்பகுதியான குஜராத் மாநிலத்தின் கம்பட், கட்ச், மும்பை, கொங்கன் கடலோரப்பகுதி, தென் கேரளா ஆகியவை மூழ்கும் ஆபத்துள்ள பகுதிகள் ஆகும்.மேலும், பொருளாதாரம், கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளின் இழப்பால், பிற மாநிலங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்புக்கு ஆளாகும்.நாகப்பட்டினம் பகுதியில் கடல் நீர் மட்டம் 1 மீட்டரிலிருந்து 2 மீட்டர் வரை உயரும். இதனால் இந்த வட்டாரத்தில் 4.2 சதுர கிலோ மீட்டரிலிருந்து 42.5 சதுர கிலோ மீட்டர் வரையிலான பகுதி மூழ்கும் ஆபத்து உள்ளது.அதே நேரத்தில் கொச்சியை பொறுத்தமட்டில், கடல் நீர் மட்டம் நாகப்பட்டினம் பகுதியை போன்றே உயர்ந்தாலும், 169 சதுர கிலோ மீட்டரிலிருந்து 599 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு மூழ்கலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக