வியாழன், 14 ஜூன், 2012

நித்தியானந்தா:மதமா? சாதியா? சொத்தா? CD யா?

நித்தியானந்தா விவகாரம்: அசிங்கத்தில் விஞ்சி நிற்பது  மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?

ஆதினமாக முடி சூட்டப்படும் நித்தியானந்தா
இலஞ்சம் கொடுத்து அரசுப் பதவிகளைப் பெறுவதைப் போல, ஆன்மீகப் பதவிகளையும் பெற முடியும் என எடுத்துக் காட்டியிருக்கிறார், நித்தியானந்தா.  மதுரை ஆதீனத்தின் 292வது குரு மகாசந்நிதானமான அருணகிரிக்குக் கோடி ரூபாய் பணம் கொடுத்து, தங்கக் கிரீடம் கொடுத்து, வெள்ளி செங்கோல் கொடுத்து இன்னும் என்னவோவெல்லாம் கொடுத்து, நித்தியானந்தா அடைந்துள்ள இந்தப் ‘பெரும் பேற்றை’ வேறெப்படிச் சொல்ல முடியும்?  மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ள இந்த ‘ஆன்மீகப் புரட்சி’யைக் கண்டு சாதாரண பக்தர்களைவிட, மற்ற பிற ஆதீனங்களும், மடங்களும், இந்து மதத்தின் காவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் வானரப் படைகளும்தான் அதிர்ந்து நிற்கின்றன.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சீரழிவை,  தனிப்பட்ட ஓட்டுக்கட்சிகள், அரசியல்வாதிகளின் ஒழுக்கக்கேடாகக் குறுக்கிக்காட்டி, ‘ஆயினும் ஜனநாயகம் புனிதமானதே’ என்று முதலாளித்துவக் கும்பல் மக்களை ஏய்த்து வருவதைப் போலவே, ஆன்மீகச் சீரழிவான நித்தியானந்தா விவகாரத்தை, மதுரை ஆதீனத்தின் புத்தி சுவாதீனமற்ற செயலாகக் காட்டுவதன் மூலம் இந்து மதத்தின் புனிதத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள் இந்து மதக் காவலர்கள்.  ஆனால், தற்போதைய மதுரை ஆதீனமான அருணகிரி, “தான் நித்தியானந்தாவைத் தேர்ந்தெடுத்தது சிவபெருமானின் ஆணை” எனக் கூறி, சிவபெருமானையும்சாட்சிக் கையெழுத்துப் போட வைக்கிறார்.
பெங்களூருக்கு அருகேயுள்ள பிடதி கிராமத்தில் தனி மடம் நடத்திவரும் நித்தியானந்தா சித்தர் மரபைப் பின்பற்றுபவர்; அவருக்குச் சைவ மரபுகள் ஒத்து வராது என மென்மையான கண்டனம் தொடங்கி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை மதுரை ஆதீனமாகப் பட்டம் சூட்டக் கூடாது என்பதுவரை நித்தியானந்தாவின் தேர்வுக்கு எதிராகப் பல்வேறுவிதமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.  இவற்றுக்கு நடுவே, ‘இந்து’க்களின் நலனைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரமெடுத்திருப்பதாகக் கூறிக் கொண்டு திரியும் இந்து முன்னணியும், அவர்களின் சித்தாந்த குருவான சோ ராமஸ்வாமி அய்யரும் மதுரை ஆதீனம் நித்தியானந்தாவை இளைய ஆதீனமாகத் தேர்ந்தெடுத்திருப்பதை எதிர்க்கக்கூடாதென அருளுரை வழங்கியிருக்கிறார்கள்.
‘‘இந்த நியமனம் தவறு என்று நாம் ஆரம்பித்தோமானால், ஒரு மடத்தின் ஒரு நியமனம் பற்றிப் பேசுவதோடு நாம் நின்றுவிடுவோமா?  அல்லது ஒவ்வொரு மடத்திலும் எப்படிபட்ட ஆதீனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அவர்களுக்குள்ள தகுதிகள் என்ன என்றெல்லாம் ஆராயத் தொடங்குவோமா? அதன் பிறகு மடங்கள், முனிசிபாலிட்டிகள் மாதிரி விமர்சனத்துக்கு உள்ளாகுமே தவிர, மத ரீதியான அமைப்புகளாக மதிக்கப்படாது” எனக் கூறி, நித்தியானந்தா விவகாரத்தை ஜீரணித்துக் கொள்ள வேண்டுமென பக்தர்களுக்கும், பிற ஆதீனங்களுக்கும் அறிவுரை வழங்குகிறார், துக்ளக் சோ.
தன்னையும் நித்தியானந்தாவையும் இணைத்துப் பேசிய காஞ்சி மட சங்கரனை ஏற்கெனவே கோர்ட்டுக்கு இழுத்துவிட்டார், நடிகை ரஞ்சிதா.  தண்டத்தை மடத்திலேயே போட்டுவிட்டு, ஒரு பெண்ணுடன் தலைக்காவிரிக்கு ஓடிப்போன ஓடுகாலி சங்கராச்சாரிக்கு ஒரு நீதி, நித்தியானந்தாவுக்கு ஒரு நீதியா என்றெல்லாம் எதிர்க்கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.  நித்தியானந்தாவை வம்புக்கு இழுத்தால், பார்ப்பன மடங்களின் யோக்கியதையும் சந்திக்கு வந்து விடும்; அதற்கும் மேலாக இந்து மதத்தின் ஆன்மீக ஒழுக்கமே கேள்விக்குள்ளாகிவிடும் என்பதால்தான் இவ்விவாகாரத்தில் இந்து முன்னணிக் கும்பல் அடக்கி வாசிக்கிறது.
அதேசமயம், திருவாடுதுறை, தருமபுரம், குன்னக்குடி உள்ளிட்ட பிற ஆதீனங்கள், காங்கிரசு பெருச்சாளியான நெல்லை கண்ணன், இந்து மக்கள் கட்சி, தேவர் தேசியப் பேரவை உள்ளிட்ட கும்பல் அமைத்துள்ள மதுரை ஆதீன மீட்புக் குழு நித்தியானந்தாவின் தேர்வை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது.  மதுரை ஆதீன மடத்தில் ஏற்பட்டுவிட்ட ஒழுக்கக்கேட்டை எதிர்ப்பது போல இவர்கள் காட்டிக் கொண்டாலும், இக்கும்பலின் எதிர்ப்பின் பின்னே சைவ வேளாள சாதி வெறியும், சொத்து கைநழுவிப் போகிறதே என்ற ஆத்திரமும்தான் உண்மையில் அடங்கியுள்ளது.
மதுரை ஆதீன மடம் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது; 1,500 ஆண்டு கால பழமை வாய்ந்தது என்று கூறப்படுவதற்கெல்லாம் வரலாற்று ஆதாரம் இருக்கிறதோ, இல்லையோ, அம்மடத்தின் வசம் ஏறத்தாழ 1,500 ஏக்கர் அளவிற்கு வளமான விளைநிலங்கள் உள்ளன; மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் மடத்திற்குச் சொந்தமான 80 கடைகள் மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன.  கடை வாடகை, நிலம், மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில் வருமானம் என ஆதீனத்தின் சொத்துக் கணக்கு 1,000 கோடி ரூபாயைத் தாண்டும் என்பதற்கு மறுக்கமுடியாத ஆதாரங்கள் உள்ளன.
ஆதீனத்தின் சொத்துக்களைக் கட்டுப்படுத்தி அனுபவித்து வரும் ஒரு ஏழு பேரிடமிருந்து அச்சொத்துக்களை மீட்கப் போவதாக நித்தியானந்தா சவால் விட்டிருப்பது; அவரது பட்டமேற்புக்குப் பிறகு மடத்திற்குள் எழுந்துள்ள பூசல்கள்; மடத்திற்குள் நடந்த வருமான வரிச் சோதனை; ஆதீனத்திற்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துக்களைக் கையாளவோ, அவைகளில் தலையிடவோ நித்தியானந்தாவிற்குத் தடை விதித்து அளிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு  என இவை அனைத்தும் ஆதீனம் அருணகிரிக்கு நெருக்கமாக இருந்த பழைய கும்பலுக்கும் புதிதாக மடத்திற்குள் புகுந்துள்ள நித்தியானந்தா கும்பலுக்கும் இடையே சொத்துத் தகராறு தொடங்கிவிட்டதையே காட்டுகின்றன.
ஆலயத்திற்குள் சாதி  தீண்டாமை பாராட்டக் கூடாது; அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்துவரும் 21ஆம் நூற்றாண்டில், தருமபுரம், திருவாடுதுறை உள்ளிட்ட ஆதீனங்களும், சைவப் பிள்ளைமார் சாதி வெறியர்களும், குறிப்பாக அச்சாதியைச் சேர்ந்த பிற்போக்கு நில உடைமைக் கும்பலும், “சைவ வேளாளர் பிரிவில் உள்ள 13 சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான் ஆதீனமாக வரமுடியும்; நித்தியானந்தா முதலியார் சாதியைச் சேர்ந்தவர். அதனால் அவரை ஆதீனமாக ஏற்க முடியாது” என வெளிப்படையாகவே சாதிவெறியைக் கக்குகிறார்கள்.  இச்சாதிவெறியை மரபு என்று கூறி நியாயப்படுத்துகிறார்கள்.  சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டு செய்வதற்காகவே இந்த ஆதீன மடங்கள் தோற்றுவிக்கப்பட்டதாகப் பீற்றி, இச்சாதி ஆதிக்கத்திற்கு அங்கீகாரம் தேடிக் கொள்ள முயலுகிறார்கள்.
பீற்றிக் கொள்ளப்படும் சைவ மரபு என்பது பார்ப்பனியத்துக்கு வால்பிடிப்பது தவிர வேறென்ன?  தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் நுழையக் கூடாது; பார்ப்பானைத் தவிர, வேறு சாதியைச் சேர்ந்த எவனும் மணியாட்ட மட்டுமல்ல, மடப்பள்ளிக்குள்ளும் வரக்கூடாது; கருவறைக்குள் தமிழ் நுழையக் கூடாது என்ற ஆகம விதிகள் அனைத்தும் நித்தியானந்தாவின் லீலைகளுக்கு இணையாக அருவெறுக்கத்தக்கவை.
சிதம்பரத்தின் சிற்றம்பல மேடையில் தேவாரம் ஒலிக்க வேண்டும் எனக் கோரி சிவனடியார் ஆறுமுகசாமி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆதரவோடு போராடிக் கொண்டிருந்தபொழுது, இந்த ஆதீனங்களுள் ஒருவர்கூடத் தமிழுக்காகக் குரல் கொடுக்கவில்லை. சிதம்பரம் கோயில் சொத்துக்களைத் தீட்சிதர் கும்பல் சுரண்டிக் கொள்ளையடித்து வந்ததைத் தட்டிக் கேட்க இந்த ஆதீனங்களோ, சைவப் பிள்ளைமார் சாதியைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளோ துணிந்ததில்லை.  மாறாக,  இவர்கள் சைவத்தின் பெயராலும் தமிழின் பெயராலும் பிழைப்பு நடத்தி வந்தார்கள்;  திருட்டு தீட்சிதர் கும்பலுடன் இரகசியமாக உறவு வைத்துக் கொண்டு, தமிழ் மக்களை ஏமாற்றினார்கள்.
சைவ மடங்களின் பெயரில் இருந்து வரும் பொதுச்சொத்துக்களைத் காலம்காலமாகத் தின்று கொழுத்து வரும் இந்தக் கூட்டத்துக்கும் நித்தியானந்தாவுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றுதான். நித்தியானந்தா மக்கள் முன் அம்பலப்பட்டுப் போன கயவன், அவரது நியமனத்தை எதிர்க்கும் மற்ற ஆதீனங்களும், ஆதீனங்களுக்கு நெருக்கமான சைவப் பிள்ளைமார் சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளும் அம்பலமாகாத கயவர்கள்!  ஆதீன மடங்களுக்குள் நுழைய முடியாமல் வீடியோ காமெராக்களை தடுத்து நிறுத்தியிருப்பதனால்தான், இந்த உருத்திராட்சப் பூனைகளின் புனிதம் இதுவரை பாதுகாப்பாக இருந்து வருகிறது.
காஞ்சி சங்கர மடம், மதுரை ஆதீனம் போன்ற பழைய மடங்களோ, நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ் போன்ற நவீன குருமார்கள் உருவாக்கியுள்ள புதிய கார்ப்பரேட் மடங்களோ எதுவும் அவர்களே கூறிக்கொள்ளும் ஆன்மீக நெறியை வளர்ப்பதற்காக நடத்தப்படவில்லை.  இவர்கள் பக்தி, ஆன்மீகம் போன்றவற்றை மூலதனமாக்கி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல வியாபாரங்களை நடத்தும் கார்ப்பரேட் முதலாளிகள்.  சாய்பாபா மடத்தில் நடந்த கொலைகள், சங்கராச்சாரிகள் மீதான பாலியல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டு, நித்தியானந்தா மீதான பாலியல் குற்றச்சாட்டு, திருவாடுதுறை ஆதீனத்தில் நடந்த கொலை முயற்சி என ஆன்மீக மடங்கள் இந்தியாவெங்கும் கிரிமினல் கூடாரங்களாகச் சந்தி சிரிக்கின்றன.
கொலைக் குற்றவாளியான சங்கராச்சாரி இன்றும் லோக குருவாக வலம் வருகிறார்; நித்தியானந்தா மதுரை ஆதீனமாக முடி சூட்டப்படுகிறார்.  ஊடகங்களுக்கு இது ஒரு விற்பனைச் சரக்கு. மதுரை ஆதீன மட விவகாரத்தில் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி, கஸ்தூரி ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதை வைத்து, இந்த விவகாரத்தை ஒரு கிளுகிளுப்பான செய்தியாகத்தான் பத்திரிகைகள் தந்துள்ளன.
மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்
மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்
தாங்கள் போற்றிக் கொண்டாடும் மரபு, புனிதம் ஆகியவை புழுத்து நாறியபோதும், இந்நிகழ்வுகளை எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் ஜடங்களாகவே பக்தர்கள் நடந்து கொள்கின்றனர்.  பக்தி என்பதே ஆண்டவனுடன் நடத்தும் பேரமாகவும், மதம் என்பது அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு உடனுக்குடன் தீர்வு சொல்லும் ஆன்மீக கன்சல்டன்சியாகவும் மாறியுள்ள சூழ்நிலையில், இப்படிப்பட்ட அசிங்கங்களோடு சமாதான சகவாழ்வு நடத்துவதை பக்தர்கள் அறம் சார்ந்த பிரச்சினையாகவே  கருதுவதில்லை போலும்.
அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்தக் கூத்துகளைப் பற்றித் தமிழக அரசோ அறநிலையத்துறை அமைச்சரோ வாய்திறக்கவில்லை. தனக்கு அம்மாவின் ஆசி இருப்பதாக நித்தியானந்தா கூறியிருப்பதை வெறும் வாய்ச்சவடால் என்று ஒதுக்கவும் முடியவில்லை. மத உரிமை, மத நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை ஆகிய அரசியல் சட்ட உரிமைகளின் கீழ் தங்களுடைய சொத்துக்களின் மீது கேள்விக்கிடமற்ற அதிகாரத்தை மடங்களும் ஆதீனங்களும் பெற்றிருக்கின்றன.    இத்தகைய அதிகாரத்தின் காரணமாகத்தான் தில்லைச் சிற்றம்பலத்தில்  தமிழ் ஏறுவதற்கும், தீட்சிதர்களின் இடுப்பிலிருந்து கோவில் சாவியை இறக்குவதற்கும்  கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, இந்து மத உரிமையின் பெயரால்தான் அனைத்து சாதியினரும் அரச்சகராகும் உரிமை இதுவரையிலும் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.
நல்லொழுக்கத்தின் நாட்டாமைகளாக ஆளும் வர்க்கங்களால் சித்தரிக்கப்படும் இந்த மதபீடங்கள், தமது சொந்த நடவடிக்கைகள் மூலமாகத் தாமே அம்பலப்பட்டு நாறிய பின்னரும் ஆளும் வர்க்கங்கள் இவர்களைக் கைவிடுவதில்லை.  தங்கள் கைவசம் இருக்கும் பல்லாயிரம் கோடி சொத்துகள் மூலமும், ஆளும் வர்க்கங்கள் மற்றும் சாதி ஆதிக்க சக்திகளுடன் அவர்கள் வைத்திருக்கும் கூட்டணியின் மூலமும் தங்களுடைய இழந்த செல்வாக்கை இவர்கள் மீட்டுக் கொள்கின்றனர். சங்கராச்சாரி காலையில் கொலை கேஸ் வாய்தாவுக்குப் போய்விட்டு வந்து மாலையில் அருளாசி வழங்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதேபோல நித்தியானந்தாவைப் பொருத்தவரை நேற்று படுக்கையறைக் காட்சி! இன்று பட்டாபிஷேகம்!
இந்நிலை நீடிக்க அனுமதிக்கக் கூடாது. மத உரிமை என்ற பெயிரில் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்படவேண்டும். மன்னர்களால் இந்த மடாதிபதிகளுக்குப் பிடுங்கித் தரப்பட்ட மக்கள் சொத்துகளான நிலங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் மக்கள் உடைமையாக்கப்படவேண்டும். மடாதிபதிகள் நியமனத்தில் கடைப்பிடிக்கப்படும் சாதி சார்ந்த மரபுகள் கிரிமினல் குற்றமாக்கப்பட்டுத் தடை செய்யப்படவேண்டும். நித்தியானந்தா, சங்கராச்சாரி, ஆதீனங்கள் உள்ளிட்ட  கும்பல்கள் ஒழிக்கப்பட்டால்தான் சமூகத்தின் ஒழுக்கம் மேம்படும் என்பதை நாம் மக்களுக்குப் புரியவைக்கவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக