புதன், 6 ஜூன், 2012

கோட்டு சூட்டு கனவான்களின் எளிய வாழ்க்கை

    "திட்டக் கமிஷனைப் பொறுத்த வரை கிராமப் புறங்களில் வாழும் ஒருவர் நாளைக்கு ரூ 22.50க்கு மேல் செலவழித்தால் அவர் ஏழை என்று கருதப்படமாட்டார். ஆனால், அதன் துணைத் தலைவர் சென்ற ஆண்டு மே மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையே மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களில் அவரது ஒரு நாளைக்கான சராசரி செலவு ரூ 2.02 லட்சம்." - படம் www.thehindu.com
    கோட்டு-சூட்டு-கனவான்களின்-எளிய-வாழ்க்கைஎளிய வாழ்க்கையின் அவசியம் பற்றிய பிராணாப் முகர்ஜியின் வேண்டுகோளில் இருந்த உருக்கம் நாட்டில் கண்ணீரை பெருக்கியது. பிரதமர் மன்மோகன் சிங் கடந்த காலத்தில் எளிமைக்காக மன்றாடிய போது அவரது சகாக்கள் அதை படைப்பாக்க உணர்வுடன் தழுவி கொண்டார்கள்.
    நிதி அமைச்சகம் கூட 2009 ஆம் ஆண்டிலேயே டாக்டர் சிங்கின் வேண்டுகோளை செயல்படுத்த ஆரம்பித்து விட (எகானமி வகுப்பு விமான பயணம், செலவுக் குறைப்பு) அந்த புனிதத் தேடலின் நான்காவது ஆண்டை நாம் அடைந்திருக்கிறோம்.
    எளிய வாழ்க்கையில் பல வகைகள் இருக்கின்றன என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். என்னைக் கேட்டால் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பாணி எளிமையைத்தான் தேர்ந்தெடுப்பேன். எளிய வாழ்க்கையின் மீது டாக்டர் அலுவாலியாவுக்கு இருக்கும் பற்றை யாரும் கேள்வி கேட்டு விட முடியாது. ‘நடைமுறைக்கு ஏற்ற மட்டத்தில் வறுமைக் கோட்டை நிர்ணயிக்க வேண்டும்’ என்ற மக்களின் கோரிக்கையை அவர் எதிர் கொண்ட விதத்தை பாருங்கள். மக்களுக்கு சும்மா செல்லம் கொடுத்து கெடுப்பது என்பது அவரிடம் இல்லை. ‘நகர்ப்புறத்தில் ஒரு நாளைக்கு 29 ரூபாய் அல்லது கிராமப் புறத்தில் 23 ரூபாய் உங்களால் செலவழிக்க முடிந்தால், நீங்கள் ஏழை இல்லைதான்’. இத்தகைய கறாரை கோடிக்கணக்கான தனது சக குடிமக்கள் மீது சுமத்துவதை அங்கீகரிக்கும்படி உச்சநீதிமன்றத்திடமும் அவர் கோரினார். திட்ட கமிஷன் தாக்கல் செய்த ஆவணத்தில் நகர்ப்புறத்தில் ரூ 32, கிராமப் புறத்தில் ரூ 26 ஒரு நாளுக்கான நாள் செலவு என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்தே பத்ம விபூஷண் பெற்ற அவரும், அவரது சகாக்களில் சிலரும் அதை இன்னும் குறைப்பதற்கு தமது தலையையும் அடகு வைக்க தயாராக இருந்தனர்.

    தகவல் பெறும் உரிமை வினவல்கள்

    டாக்டர் அலுவாலியா எளிய வாழ்க்கையைத்தான் கடைப்பிடிக்கிறார் என்பது இரண்டு தகவல் பெறும் உரிமை வினவல்கள் மூலம் தெளிவாக தெரிய வருகிறது. தகவல் பெறும் உரிமையை பயன்படுத்தும் சிறந்த ஊடக செயல்பாடாக அவை இருந்தும் அவற்றுக்கு உரிய கவனம் கிடைக்கவில்லை. அந்த இரண்டும் அலுவாலியாவின் எளிய வாழ்க்கையை பகுத்து ஆராய்கின்றன. அவற்றில் ஒன்று ஜூன் 2004-க்கும் ஜனவரி 2011-க்கும் இடையே டாக்டர் அலுவாலியா வெளிநாடுகளுக்கு போன பயணங்களைப் பற்றி இந்தியா டுடேவில் ஷ்யாம்லால் யாதவ் எழுதிய கட்டுரை. இந்த பத்திரிகையாளர் (இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் பணிபுரிகிறார்) இதற்கு முன்பும் தகவல் பெறும் உரிமையைப் பயன்படுத்தி மிகச் சிறந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
    மற்றது, இந்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்டேட்ஸ்மேன் செய்தி சேவையில் நிருபர் பெயர் குறிப்பிடப்படாமல் வந்த அறிக்கை. 2011 மே மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடையில் டாக்டர் அலுவாலியாவின் உலகளாவிய பாய்ச்சல்களை பற்றிய விபரங்களை அது வெளிக் கொணர்ந்தது. அந்த கால கட்டத்தில், அவர் “18 இரவுகள் அடங்கிய நான்கு பயணங்களை மேற்கொண்டார். இதற்கு அரசு செலவழித்த தொகை ரூ 36,40,140, அதாவது ஒரு நாளுக்கு சராசரியாக ​​ரூ 2.02 லட்சம் செலவு” என்று சொல்கிறது ஸ்டேட்ஸ்மேன் செய்தி சேவை அறிக்கை.
    அந்த பயணங்கள் நிகழந்த கால கட்டத்தில், ஒரு நாளைக்கு ரூ 2.02 லட்சம் என்பது டாலர் மதிப்பில் $4,000 ஆகும். (ஹிஹி! மான்டேக் சிக்கன வாழ்க்கையை கடைப்பிடித்துக் கொண்டிருந்தார். இல்லையெனில் அவரது செலவு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்) அந்த தினசரி செலவினம், கிராமப்புற இந்தியர்கள் ஒரு நாளைக்கு செலவிட வேண்டியதாக அவர் கருதும் வரையறையான 45 சென்டை விட 9,000 மடங்கு அதிகமாகும். அல்லது டாக்டர் அலுவாலியா நடைமுறையில் போதுமானது என்று கருதும் நகர்ப்புற இந்தியர்களுக்கான வரையறையான 55 சென்ட்டுகளை விட 7,000 மடங்கு அதிகம்.
    இப்ப பாருங்க, அவர் 18 நாட்களில் செலவழித்த ரூ 36 லட்சத்தை (அல்லது $72,000) உலக சுற்றுலா துறைக்கு அவர் அளித்த தனிப்பட்ட ஊக்குவிப்பாக எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, ஐநாவின் சுற்றுலா நிறுவனம் சுட்டிக் காட்டுவது போல அந்த துறை 2008-09-ன் இழப்புகளிலிருந்து 2010-ல்தான் மீண்டு கொண்டிருந்தது. அதே நேரத்தில் 2011-ம் ஆண்டு உலகளாவிய சுற்றுலா வருமானம் $1 டிரில்லியனைத் தாண்டியது என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. மிக அதிக வருவாய் அதிகரிப்பு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்தது. இந்த 18 நாட்களில் பெரும்பாலானவை அந்த இடங்களில்தான் செலவழிக்கப்பட்டன. உள்நாட்டில் சிக்கன வாழ்க்கையின் சூட்டை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், இந்த பொருளாதார மீட்சியில் தமது பணமும் ஒரு சிறு பங்காற்றியிருப்பதை நினைத்து இந்திய மக்கள் மகிழ்ச்சி கொள்ளலாம்.

    ஷ்யாம்லால் யாதவின் தகவல் பெறும் உரிமை மனுவிலிருந்து கிடைக்கும் புள்ளிவிபரங்கள் இன்னும் கலக்கலாக இருக்கின்றன. டாக்டர் அலுவாலியா தனது ஏழு வருட பணிக்காலத்தில் 42 முறை உத்தியோகபூர்வமாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். மொத்தம் 274 நாட்களை வெளிநாடுகளில் கழித்திருக்கிறார் என்ற அவரது கண்டுபிடிப்பை முதலில் எடுத்துக் கொள்வோம். அதாவது “ஒன்பது நாட்களில் ஒரு நாள்” அவர் வெளிநாட்டில் கழித்திருக்கிறார். இந்தியாவிலிருந்து பயணம் செய்த நாட்களை இதில் சேர்க்கவில்லை. அவரது மகிழ்வுலாக்கள் இந்திய கஜானாவுக்கு ரூ 2.34 கோடி செலவு வைத்தாக இந்தியா டுடேயின் ஆய்வுகளில் தெரிய வந்தது. ஆனால், அவரது பயணங்களுக்கான செலவுகள் பற்றி மூன்று வெவ்வேறு மதிப்பீடுகளை பெற்றதாகவும், பாவம் பார்த்து உள்ளதில் குறைந்ததை எடுத்துக் கொண்டதாகவும் இந்தியா டுடே அறிக்கை குறிப்பிடுகிறது. “வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்தது போன்ற செலவுகள் சேர்க்கப்பட்டதா தெரியவில்லை” என்றும் இந்தியா டுடே அறிக்கை சொல்கிறது. “உண்மையான செலவுகள் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும்”.
    இந்த பயணங்கள் அனைத்தையும் “பிரதமரின் அனுமதியுடனே”யே மேற்கொண்டிருந்தாலும், அவர் வகிக்கும் பதவிக்கு வெளிநாட்டு பயணம் பெரிதளவு தேவைப்படுவதில்லை என்பதால், கொஞ்சம் புதிராகவே இருக்கிறது. அந்த 42 பயணங்களில் 23 பயணங்கள் திட்டமிடலில் மீது நம்பிக்கையே இல்லாத அமெரிக்காவுக்கு (டாக்டர் அலுவாலியாவுக்கும் திட்டமிடலில் நம்பிக்கை இல்லைதான்) மேற்கொள்ளப்பட்டது என்பது இன்னும் மர்மமாக இருக்கிறது. இந்தப் பயணங்களின் நோக்கம் என்ன?
    எளிய வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுவதும் பரப்புவதா? அப்படியானால், அவரது பயணங்களுக்காக நாம் இன்னும் அதிகம் செலவிட வேண்டும்: ஏதென்சின் தெருக்களில் சிக்கன பொருளாதாரக் கொள்கைகளை ஒழிப்பதற்காக போராடும் அசிங்கமான கிரேக்கர்களை பாருங்கள்! பணக்காரர்களின் எளிய வாழ்க்கை இன்னும் வெளிப்படையாக தெரியும் அமெரிக்காவுக்கு அதிகம் செலவானாலும் அவர் இன்னும் பல முறை பயணிக்க வேண்டும். வால் தெரு உலக பொருளாதாரத்தை குட்டிச் சுவராக்கிய 2008-ம் ஆண்டில் கூட அந்த நாட்டின் நிறுவன தலைமை அதிகாரிகள் பில்லியன் கணக்கில் போனஸ்களை எடுத்துக் கொண்டார்கள். இந்த ஆண்டு, அமெரிக்காவின் பெரும்பணக்காரர்களின் ஊடக பத்திரிகைகள் கூட, தலைமை நிர்வாகிகள் தமது நிறுவனங்களையும், வேலை வாய்ப்புகளையும், இன்னும் பலவற்றையும் அழிப்பதையும் அதன் மூலம் தனிப்பட்ட முறையில் ஆதாயம் பெறுவதையும் குறித்து எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். வீட்டுக் கடன்களை அடைக்க முடியாமல் போனவர்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் இன்னொரு வகையான எளிய வாழ்க்கையை பார்த்தார்கள். பிரெஞ்சு மக்கள் காலப் போக்கில் பயப்படுவதும், எதிர்த்து வாக்களித்ததுமான வகை.
    திட்டக் கமிசன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா - படம் www.thehindu.com
    டாக்டர் சிங் 2009-ல் எளிய வாழ்க்கைக்காக மன்றாடிய போது அவரது அமைச்சரவை பிரமாதமாக அந்த அழைப்புக்கு செவி சாய்த்தது. அடுத்த 27 மாதங்களில் ஒவ்வொரு அமைச்சரும் ஒரு மாதத்திற்கு சராசரியாக பத்து லட்சம் ரூபாய் மட்டும் தனது சொத்துக்களில் ஆரவாரமில்லாமல் சேர்த்துக் கொண்டார்கள். முழு நேரமும் அமைச்சர்களாக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அதை செய்தார்கள். ( “மத்திய அமைச்சரவை, இன்னும் செழிப்பாகிறது” தி இந்து, செப்டம்பர் 21, 2011). அவர்களில் தலை சிறந்தவர் பிரஃபுல் படேல். அந்தக் கால கட்டத்தில் ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் 5 லட்சம் ரூபாய் என்ற வீதத்தில் தனது சொத்துக்களை அதிகரித்துக் கொண்டிருந்தார். அவரது பொறுப்பில் இருந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கிய ஏர் இந்தியாவின் தொழிலாளர்கள் சம்பளம் பெறுவதற்கு பல வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது அதே காலகட்டத்தில்தான். இப்போது பிரணாப் சவுக்கை சுழற்றி விட, இன்னும் கடுமையான சிக்கனம் எல்லா இடங்களையும் ஊடுருவப் போகிறது.
    இந்த சிக்கன வாழ்க்கையின் இருதரப்பு உணர்வையும் கவனிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் பிரபுல் பட்டேலும் (ஐக்கிய ஜனநாயக முன்னணி – தேசியவாத காங்கிரஸ் கட்சி), நிதின் கட்காரியும் (தேசிய முற்போக்கு கூட்டணி-பாரதீய ஜனதா கட்சி) இதுவரையில் காணாத அளவுக்கு அதிக செலவிலான திருமணங்களை நடத்தினார்கள். எந்த ஒரு ஐபிஎல் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டதை விட அதிகமான விருந்தினர்கள் அவர்கள் நடத்திய திருமண விழாக்களில் கலந்து கொண்டார்கள். அத்தகைய எளிய வாழ்க்கையில் பாலின சமத்துவமும் இல்லாமல் போய் விடவில்லை, அந்த திருமண விழாக்கள் திரு படேலின் மகளுக்கும் மற்றும் திரு கட்காரியின் மகனுக்குமாக நடந்தன.
    அவர்களது கார்பொரேட் சகாக்கள் எளிய வாழ்க்கையை இன்னும் தீவிரமாக செயல்படுத்தினார்கள். 27 மாடியிலான (ஆனால் 50 மாடிகளை விட உயரமான) நமக்குத் நினைவு தெரிந்து அதிக செலவில் கட்டப்பட்ட அவரது வீட்டுடன் முகேஷ் அம்பானி. கிங்பிஷர் ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கும் போது – மே 5 அன்று டுவிட்டரில் “துபாயில் பூர்ஜ் காலிபாவின் 123வது மாடியில் அட்மாஸ்பியரில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் இவ்வளவு உயரத்தில் இதுவரை இருந்தது இல்லை. வியப்பளிக்கும் காட்சி” என்று ட்வீட் செய்த விஜய் மல்லையா. அது கிங்ஃபிஷர் இப்போது பறக்கும் உயரத்தை விட அதிகமாயிருக்கலாம். இரண்டு பேரும் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கிறார்கள். ஐபிஎல் கேளிக்கை வரி சலுகை முதலாக அரசு மானியங்களை பெற்றிருக்கிறது.  அதாவது, பம்பாய் உயர் நீதிமன்றத்துக்கு விஷயம் எடுத்துச் செல்லப்பட்டது வரை. பொதுமக்கள் பணத்தில் நடத்தப்படும் ஐபிஎல் போன்று இன்னும் பல சிக்கன நடவடிக்கைகள் இருக்கின்றன. காத்திருங்கள்.

    வால் தெரு மாதிரி

    இங்கு உள்ள கார்பொரேட் உலகம் வால் தெருவின் சிக்கன நடவடிக்கை மாதிரியை பின்பற்றுகின்றன.  சிட்டி குரூப் மற்றும் மெர்ரில் லிஞ்ச் உள்ளிட்ட ஒன்பது வங்கிகள் “2008-ம் ஆண்டு மக்கள் வரிப்பணத்தில் $175 பில்லியன் மானியமாக பெற்றுக் கொண்ட போது தமது ஊழியர்களுக்கு $32.6 பில்லியன் போனஸ்கள் வழங்கினார்கள்” என்று ப்ளூம்பர்க் 2009-ல் தெரிவித்தது. நியூயார்க் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூ கூமோவின் அறிக்கையை அது மேற்கோள் காட்டியது : “வங்கிகள் நன்றாக செயல்பட்ட போது, அவற்றின் ஊழியர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்பட்டது. வங்கிகள் மோசமாக செயல்பட்ட போது அவற்றின் ஊழியர்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்பட்டது. வங்கிகள் மிகவும் மோசமாக செயல்பட்ட போது, அவை மக்களின் வரிப்பணத்தால் காப்பாற்றப்பட அதே நேரத்தில் அவர்களது ஊழியர்களுக்கு அப்போதும் நிறைய பணம் கொடுக்கப்பட்டது. லாபம் பெருமளவு குறைந்துவிட்ட போதும் போனஸ்களும் மொத்த வருமானம் பெருமளவு மாறுபடவில்லை.”
    பிரணாபின் சிக்கன வேண்டுகோளைத் தொடர்ந்து நிதி நெருக்கடி “அடுத்தடுத்த இலவச திட்டங்களால்தான்” ஏற்படுகிறது என்று பெரும் பணக்காரர்கள் தொலைக்காட்சிகளில் கொதிப்பதை பார்க்க முடிந்தது. அதாவது மக்களுக்கு வேலை கொடுக்க முயற்சிப்பது, பட்டினியை குறைப்பது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது போன்ற முட்டாள்தனமான விஷயங்கள். பிரணாபின் அதே பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் கார்பொரேட் வரி, கலால் வரி, சுங்க வரி சலுகைகள் மூலம் வழங்கப்பட்ட ரூ 5 லட்சம் கோடி அளவிலான பணக்காரர்களுக்கான ஜனரஞ்சகம் பற்றி எந்த முனகலும் இல்லை. (“பிபிஎல்லை சரி செய்ய சி.பி. எல்லை ஒழியுங்கள்” தி இந்து, மார்ச் 26, 2012). அந்த தள்ளுபடிகள் அரசின் நிதிப் பற்றாக்குறையை விட 8,000 கோடி கூடுதல் என்று நாடாளுமன்றத்தில் சீதாராம் யெச்சூரி சுட்டிக் காட்டினார். ஆனால் ஏழைகளுக்கான ‘ஜனரஞ்சக நடவடிக்கைகள்’ தான் தாக்கப்பட்டன.
    அமர்த்தியா சென் ( தி இந்து, ஜனவரி 7, 2012) “தங்கத்துக்கும் வைரத்துக்கும் சுங்கவரி விலக்கு அளிப்பது போன்ற வருமானம் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி ஊடகங்களில் ஏன் வாதம் நடைபெறுவதே இல்லை. நிதி அமைச்சக மதிப்பீடுகளின்படி அது உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு தேவைப்படும் கூடுதல் பணத்தை (Rs.27, 000 கோடி) விட அதிகமான வருமான இழப்பை ஏற்படுத்துகிறது (வருடத்திற்கு ரூ .50, 000 கோடி)” என்று சோகமாக கேட்கிறார்.
    மெச்சத்தக்கவர்களின் ஒளிரும் வட்டத்துக்கு வெளியில் வாழும் இந்தியர்களுக்கு தெரிந்தது இன்னொரு வகையான எளிய வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் உணவுப் பொருட்கள் விலை ஏற்ற வீதம் இரண்டு இலக்கங்களில் பறக்கிறது. காய்கறி விலைகள் ஒரு ஆண்டில் 60 சதவீதம் உயர்கின்றன. குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவு வீதம் துணை சகாரா ஆப்பிரிக்காவை விட இரண்டு மடங்காக இருக்கிறது. குடும்பங்கள் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெருமளவு அதிகரித்து விட்ட மருத்துவச் செலவுகளால் திவலாகிப் போகின்றனர் பல லட்சம் பேர். விவசாயிகள் உள்ளீடுகளை வாங்க முடியாத, கடன் பெற முடியாத நிலைமை. உயிர் கொடுக்கும் பொருளான தண்ணீர் மேலும் மேலும் பிற தேவைகளுக்காக திருப்பப்படுவதால் குடிதண்ணீர் தட்டுப்பாடு நெரிக்கிறது.
    மேல் தட்டினரின் எளிய வாழ்க்கையை கடைபிடிப்பது எவ்வளவு சுகமான ஒன்று.
    _________________________________________________
    - பி.சாய்நாத், நன்றி தி இந்து

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக