திங்கள், 25 ஜூன், 2012

கனிமொழி தே.மு.தி.க.,விடம் விட்ட தூது ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்த தே.மு.தி.க.,விடம் ஆதரவு கேட்டு, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி தரப்பில் விடுத்த தூதும், தமிழக காங்கிரஸ் கட்சி விடுத்த அழைப்பும், தோல்வியை தழுவினாலும், அந்த இருக்கட்சிகளும் தே.மு.தி.க.,வை நெருங்கிச் செல்கின்றன என்ற தோற்றம் உருவாகியுள்ளது. அ.தி.மு.க., அறிவித்த வேட்பாளர் சங்மாவை பா.ஜ., ஆதரித்துள்ளதால், கட்சிகளின் மத்தியில், அணி மாற்றத்தை உருவாக்குமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
அழையா விருந்தாளி:ஜனாதிபதி தேர்தலில் ஐ.மு., கூட்டணியின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டதும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், தனது முழு ஆதரவை தி.மு.க., தெரிவித்தது. தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறிய இரண்டு ஜாதிக் கட்சிகளும்,பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளித்தன. இதன் மூலம், வரும் பார்லிமென்ட் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே தற்போது அக்கட்சிகள் துண்டு போட்டு வைத்துள்ளன.


செவி சாய்க்கவில்லை:இலங்கை தமிழர்கள் பிரச்னை, காவிரி, முல்லை பெரியாறு அணை விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை மையப்படுத்தி, ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க., அறிவித்தது. இந்த முடிவை பரிசீலனை செய்ய வேண்டும். பிரணாப் முகர்ஜிக்கு தே.மு.தி.க., ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எழுப்பினார்.ஆனால், அவரது கோரிக்கைக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் செவி சாய்க்கவில்லை. விஜயகாந்தை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தேடி வந்து ஆதரவு கேட்டிருந்தால், அவர் தனது முடிவை பரிசீலனை செய்திருக்கலாம் என்ற கருத்து காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் நிலவுகிறது.

கனிமொழி தரப்பு தூது:இந்நிலையில் தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி தரப்பிலிருந்து, விஜயகாந்திடம் ஆதரவு கேட்டு தூது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க., தரப்பிலிருந்து, நாங்கள் தே.ஜ., கூட்டணியின் வேட்பாளர் சங்மாவை ஆதரிக்கவில்லை. தேர்தல் புறக்கணிப்பு முடிவு எடுத்திருப்பதால் எங்கள் ஓட்டு பிரணாப் முர்ஜிக்கு எதிராக போகவில்லை. இதுவே பிரணாப் முகர்ஜிக்கு சாதகமான விஷயம் தான் என்று தே.மு.தி.க., விளக்கம் அளித்துள்ளது.

ம.தி.மு.க., குழப்பம்:தி.மு.க., காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு வந்ததை, தனது கட்சியின் பலமாக தே.மு.தி.க., கருதுகிறது. வரும் பார்லிமென்ட் தேர்தலுக்கு எங்களிடம் இரு கட்சிகளும் பேரம் பேசுவதற்கு தயாராகி வருகிறது என, தே.மு.தி.க.,வினர் கணக்கு போடத் துவங்கியுள்ளனர். ம.தி.மு.க.,வை பொருத்தவரையில் பிரணாப் முகர்ஜியை ஆதரித்தால், காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதற்கு சமமாகி விடும். சங்மாவை ஆதரித்தால், அ.தி.மு.க.,விடம் நெருக்கம் காட்டுவது போல ஆகிவிடும் என்பதால், என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பத்திற்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.

பொலிட் பீரோ :இந்திய கம்யூனிஸ் கட்சிக்கு, அடுத்த ஆண்டு, ராஜ்யசபா எம்.பி., சீட்டை அ.தி.மு.க., ஒதுக்க வேண்டும் என்பதால் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முன்வராமல், தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து விட்டது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், யாரை ஆதரிப்பது என்பதில் பொலிட் பீரோ உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் 15 பேர் கலந்து கொண்டனர். பொலிட் பீரோ உறுப்பினர்களில் மேற்கு வங்கம், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.மேற்கு வங்களத்தில், மம்தாவுக்கு எதிராக செயல்படும் வகையில், மண்ணின் மைந்தர் பிரணாப் முகர்ஜிக்கு, மேற்கு வங்கத்தை சேர்ந்த, 8 பொலிட் பீரோ உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். இதனால், பிரணாப் முகர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு தெரிவித்துள்ளது. அ.தி.மு.க., அறிவித்த வேட்பாளர் சங்மாவை பா.ஜ.,வும் ஆதரித்துள்ளதால், அ.தி.மு.க.,விடம் பா.ஜ., நெருங்கி வருவதாக கருதப்படுகிறது.

ம.ம.க., என்ன நிலை?அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகள், சங்மாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால், மனித நேய மக்கள் கட்சி என்ன நிலைப்பாடு? எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஆளுங்கட்சி கூட்டணி அ.தி.மு.க., கூட்டணியை விட 4 ஓட்டுக்கள் அதிகமாக எடுத்தன. அதேபோல் இந்த தேர்தலில், ஒரு ஜாதிக் கட்சி மற்றும் ஒரு தேசிய கட்சியின் எம்.எல்.ஏ.,க்களுக்கு வலை வீசி, மறைமுகமாக ஆளுங்கட்சி அணிக்கு, ஆதரவாக ஓட்டு அளிக்கும் முயற்சியில் அமைச்சர்கள் சிலர் ஈடுப்பட்டு வருகின்றனர் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக