வெள்ளி, 15 ஜூன், 2012

நித்தி எமது நண்பர்; ரஞ்சிதா எமது சொத்து மதுரை ஆதீனம் சிறப்பு பேட்டி

Viruvirupu
“நித்தியானந்தா மதுரைக்கு வந்து என்னுடன் இணைந்து கொள்வார்” என்று கூறியிருக்கிறார் மதுரை மூத்த ஆதீனம் அருணகிரிநாதர். “அவரை எனது வாரிசாக மட்டுமின்றி, பல விஷயங்களில் உற்ற நண்பராகவும் கருதுகிறேன்” என்றார் எமக்கு அளித்த பேட்டியில்.
இரு தினங்களுக்குமுன் (நித்தியானந்தா சரணடைந்தபோது) மதுரை ஆதீனத்தின் மனநிலைக்கும், தற்போதைய மனநிலைக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை காண முடிகிறது. நித்தி சுவாமிகள் சரணடைந்தபின் கருத்து தெரிவித்த பெரிய சாமியார், ஒருவித விரக்தி மனநிலையில் இருந்தார்.

“நித்தியானந்தா கைது செய்யப்பட்டிருக்கிறாரே?” என்று கேட்டபோது, “என்னத்தை சொல்ல..” என்றார். “நித்தி சுவாமிகள்  மதுரையின் இளைய ஆதீனம் பதவியில் இருந்து அகற்றப்படுவாரா?” என்று இரு தினங்களுக்குமுன் கேட்டபோது, அந்த சாத்தியத்தை அடியோடு மறுக்கவில்லை. “அதுபற்றி சிலருடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார்.
இன்று அவரிடம் பேட்டி எடுத்தபோது, நித்தியானந்தாவை மதுரை ஆதீனப் பதவியில் இருந்து அகற்றுவதில்லை என்று தீர்மானமாக முடிவு எடுத்திருக்கிறார் என்று தெரிகிறது.
அப்படியானால், யாருடனோ ஆலோசிக்கிறேன் என்றாரோ, அவர்கள் நித்திக்கு ஆதரவாக ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
சரி, யாருடன் ஆலோசித்தார்? “சிவனுடனும், பார்வதியுடனும் கன்சல்ட் செய்தேன்” என்று சாமியார் சொல்லி விடுவாரோ என்று திகிலாக உள்ளது. காரணம், “சிவனும், பார்வதியும் சொன்னதன் பேரில், நித்யானந்தாவை வாரிசாக நியமிக்கிறேன்” என்று ஏற்கனவே அறிவித்து அதிர வைத்தவர் அவர்.
கடந்த ஏப்ரலில், பெங்களூரு பிடதி ஆசிரமத்தில், நித்யானந்தாவை சந்திக்கச் சென்ற மதுரை ஆதீனம், சிவன் மற்றும் பார்வதியின் ரெக்கமன்டேஷனிலேயே நித்தியை தேர்ந்தெடுத்ததாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அதன்பின்னரே ‘பாத காணிக்கையாக’ ரூ 5 கோடி கைமாறியது. நித்தியும் தமது ஆட்களுடன் மதுரை மடத்துக்குள் வந்து குதித்திருந்தார்.
இன்று காலை மதுரை ஆதீனத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம். பேட்டி என்றபோது முதலில் மறுத்த அவர், “பேட்டி என்று வேண்டாம், உங்க கருத்துக்களை சொல்லுங்க சாமி.. அது போதும்” என்று சொன்னபோது இன்டைரக்டாக பேட்டி கொடுத்தார்.
விறுவிறுப்பு: “நித்தியானந்தா சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்கிறாரே.. அவரை மதுரை இளைய ஆதீன பதவியில் இருந்து நீக்கிவிட முடிவு செய்திருக்கிறீர்களா?”
மதுரை ஆதீனம்: ஆதீனப் பதவியில் இருந்து யாரையும் நீக்கும் வழக்கம் கிடையாது. அந்த கேள்விக்கே இடமில்லை”
விறுவிறுப்பு: ஏற்கனவே ஒருவரை இளைய ஆதீனமாக நியமித்துவிட்டு, பின்னர் நீக்கியிருக்கிறீர்களே?
மதுரை ஆதீனம்: அது வேறு சமாச்சாரம். அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அவர் துறவத்துக்கு தயாராக இல்லை. அவர் குடும்ப பந்தங்களில் இருந்து விடுபடவில்லை”
விறுவிறுப்பு: சரி சாமி. நித்தியானந்தாவுக்கு வேறு பந்தங்கள் இருப்பதாக சொல்கிறார்களே. அவரை எப்படி..
மதுரை ஆதீனம்: (இடைமறிக்கிறார்) அதெல்லாம் பத்திரிகைக்காரங்க கிளப்பிவிட்ட புரளி. எதுவும் உண்மை கிடையாது.
விறுவிறுப்பு: நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா சுவாமி…
மதுரை ஆதீனம்: (மீண்டும் இடைமறிக்கிறார்) ரஞ்சி (ரஞ்சிதாவை சுருக்கமாக சொல்கிறார்) ஒரு பக்தை. சிஷ்யை. அவருக்கு ஆன்மீக அறிவு ஜாஸ்தி. என்னிடமும் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார். இளைய சுவாமிகள் மதுரை ஆதீனத்துக்கு கொண்டுவந்த ஆன்மீகச் சொத்துக்களில் ரஞ்சியும் ஒருவர்.
விறுவிறுப்பு: சரி. ஆன்மீகச் சொத்தான ரஞ்சிதா மதுரை மடத்தில்தான் இப்போது உள்ளாரா?
மதுரை ஆதீனம்: இல்லை.. இல்லை.. (லேசாக தடுமாறுகிறார்) அவர் இங்கே கிடையாது. அவர் இங்கே இருப்பதில்லை. நீங்கள் தாராளமாக உள்ளே போய் பார்க்கலாம்.
விறுவிறுப்பு: இல்லை சுவாமி. அவரை தரிசிக்க வேண்டிய அவசியம் எமக்கு ஏதுமில்லை. சரி. நித்தியானந்தா மதுரை ஆதீன மடத்தில்தான் இனி தங்குவாரா?
மதுரை ஆதீனம்: அவர் இப்போது மதுரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். எம்முடன் இணைந்து கொள்வார்.
விறுவிறுப்பு: நித்தியானந்தா வந்து கொண்டிருக்கிறாரா? அவர் மைசூர் சிறையில் இருப்பதாக தகவல் உள்ளதே
மதுரை ஆதீனம்: இன்று விட்டுவிடுவார்கள். கூடு தேடி பறவை திரும்புவதுபோது இங்கே வருவார். தகவல் வந்திருக்கிறது. பொய் வழக்குகள் போட்டு, நீண்ட காலம் அவரை சிறையில் வைத்திருக்க முடியாது.
விறுவிறுப்பு: சரி. நீங்கள் நித்தியானந்தாவின் சொல்படி கேட்டு எல்லா காரியங்களும் செய்வதாக சொல்கிறார்களே.. உண்மையா சுவாமி?
மதுரை ஆதீனம்: அதிலென்ன தவறு? அவரை இளைய சுவாமிகளாக மாத்திரம் நான் பார்க்கவில்லை. ஒரு நண்பனாக.. வழிகாட்டியாக.. பார்க்கிறேன். அவர் சரியாகத்தான் சொல்கிறார். நான் அதைக் கேட்பதில் என்ன தவறு?
விறுவிறுப்பு: மதுரை இளைய ஆதீனம் கோர்ட் படி ஏறமாட்டார் என்று முன்பு சொன்னீர்களே.. இப்போது அவரே கோர்ட் படியேறி சரணடைந்துள்ளாரே..”
மதுரை ஆதீனம்: அது வேறு மாநிலம். தமிழ்நாட்டில் நீதிமன்றப் படி ஏறமாட்டார் என்றுதான் நான் சொன்னேன்.
விறுவிறுப்பு: அதுவும் அப்படியா.. மாநில அளவில் உள்ள கொள்கையா அது? சரி. நித்தியானந்தா இங்கே (மதுரை மடத்துக்கு) வந்தபின் வந்து சந்திக்க முடியுமா?
மதுரை ஆதீனம்: பேஷா சந்திக்கலாம். சந்தித்து ஆசீர்வாதம் வாங்கலாம்.
விறுவிறுப்பு: இல்லை சுவாமி.. ஆசீர்வாதம் வாங்கும் திட்டம் ஏதும் கிடையாது.. செய்தியாளராக சந்திக்கலாமா?
மதுரை ஆதீனம்: நீங்க நாஸ்திகரா?
விறுவிறுப்பு: இல்லை சுவாமி. நிஜமான ஆஸ்திகன். அதுதான் பிரச்னை. ஆசீர்வாதமெல்லாம் வேண்டாம்.. இங்கே வந்தபின் அவரை நாம் ஒரு செய்தியாளராக வந்து சந்திக்கலாமா?
மதுரை ஆதீனம்: எப்படி வந்தாலும் சந்திக்கலாம். இதிலென்ன சந்தேகம்?
விறுவிறுப்பு: இல்லை.. பெங்களூருவில் நித்தியானந்தாவின் சிஷ்யர்கள் செய்தியாளர்களை நையப் புடைத்ததாக சொல்கிறார்களே. அதுதான் கேட்டோம். நாம், தைரியமாக வந்து சந்திக்கலாமா?
மதுரை ஆதீனம்: (குரலில் கோபம் தெரிகிறது) வீண் பேச்சு வேண்டாம். அதெல்லாம்  பெங்களூரு ஆட்கள் கிளப்பிவிட்ட கதை. இதற்குமேல் சொல்ல ஏதுமில்லை. (கைகளை ஆட்டியபடி) நீங்க கிளம்புங்க.. கிளம்புங்க.. அவ்வளவுதான். ஓவர்”

-விறுவிறுப்பு.காமுக்காக ரிஷி.  பேட்டி உதவி அதிபன் தங்கராசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக