வியாழன், 28 ஜூன், 2012

சிரஞ்சீவியை நினைத்து காங்கிரசை இடித்த காங்கிரஸ்

 Chiru Become Andhra Cm சிரஞ்சீவியை ஆந்திர முதல்வராக்க காங்கிரஸ் திட்டம்!


டெல்லி: ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியை தூக்கி விட்டு நடிகர் சிரஞ்சீவியை முதல்வராக்கும் திட்டத்தில் காங்கிரஸ் மேலிடம் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் இந்தத் திட்டத்தை எப்படியாவது தடுக்கும் வகையில் காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் டெல்லிக்குப் படையெடுத்துள்ளனராம்.
ஆந்திர மாநில காங்கிரஸ் கலகலத்துப் போய்க் கிடக்கிறது. ஏற்கனவே தெலுங்கானா பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு டிஆர்எஸ் மூலம் சங்கு ஊதப்பட்டு விட்டது. இந்த நிலையில் ஆந்திராவின் இதரப் பகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டி மூலம் பெரும் ஆப்பு வைக்கப்பட்டு விட்டது.
சமீபத்தில் ஆந்திராவில் நடந்த 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மதம் பிடித்த யானை போல காங்கிரஸ் கட்சியை துவம்சம் செய்து விட்டது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். இதனால் காங்கிரஸ் கட்சி படுகாயமுற்று எப்படி மீள்வது என்று தெரியாமல் வீழ்ந்து கிடக்கிறது.

ஜெகன் மோகன் ரெட்டியின் இழப்பை நடிகர் சிரஞ்சீவியை வைத்து சமாளித்து விடலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தது காங்கிரஸ் மேலிடம். சிரஞ்சீவின் நடிப்புக் கவர்ச்சி மட்டுமே போதும் என்ற நினைப்பு அக்கட்சிக்கு. ஆனால் சிரஞ்சீவியால் ஒரு புண்ணியமும் இல்லாமல் போய் விட்டது காங்கிரஸுக்கு.
காரணம், தேர்தலில் திருப்பதி தொகுதியில்தான் காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவியது. இந்தத் தொகுதியில் முன்பு ஜெயித்திருந்தவர் சிரஞ்சீவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிரஞ்சீவி மீது கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு முக்கிய முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.அதாவது முதல்வர் கிரண் குமார் ரெட்டியை தூக்கி வி்ட்டு அவருக்குப் பதில் சிரஞ்சீவியை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் நினைப்பதாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
அதை உறுதிப்படுத்தும் வகையில் கட்சி ஏன் இடைத் தேர்தலில் தோற்றது, கட்சியில் யாரெல்லொம் ஜெகனுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்கள், யாரெல்லாம் கட்சிக்கு துரோகம் செய்தார்கள் என்ற பட்டியலுடன் சோனியா காந்தியை சிரஞ்சீவி சந்தித்துப் பேசியுள்ளார்.
தனது கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் காங்கிரஸில் முக்கியத்துவம் அளிக்கப்படாததே தங்களால் பெரும் வெற்றியைத் தேடித் தர முடியாமல் போனதற்குக் காறணம் என்று சிரஞ்சீவி கூறியதாக கூறப்படுகிறது.
சிரஞ்சீவிக்கு முதல்வர் பதவி கிடைத்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரும் டெல்லி விரைந்துள்ளனர். இதனால் ஆந்திர அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக