புதுடில்லி: ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் திடீர்
திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை
ஏற்க முலாயம் சிங் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்துல் கலாம், மன்மோகன் சிங், சோம்நாத்
சட்டர்ஜி ஆகியோரில் ஒருவரை ஆதரிக்க இருவரும் முடிவு செய்துள்ளதாக
கூறப்படுகிறது.
நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை
19ம் தேதி நடக்கிறது. இதற்காக வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் அரசியல்
கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் பணி என்றாலே எப்போதும் முன்னிலையில்
இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல் இதிலும் வேகம் காட்டினார்.
பிஜூ ஜனதாதளத்துடன் இணைந்து, லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மாவை
ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கப்போவதாக அவர் அறிவித்தார். மன்மோகன் சிங் முந்துகிறார் இந்நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் யாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து பல்வேறு யூகங்கள் உலா வரத்துவங்கின. இப்போட்டியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, லோக்சபா சபாநாயகர் மீரா குமார் உள்ளிட்டோர் இருந்தனர். பின்னர் இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணியும் சேர்ந்து கொண்டார். ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னையில் தி.மு.க., தலைவர் கருணாநிதியை, பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இதுகுறித்து கருத்து தெரிவித்த கருணாநிதி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை தங்கள் கட்சி ஆதரிக்கும் என தெரிவித்தார். சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஐ.மு.கூ., வேட்பாளரை ஆதரிக்கும் என அறிவித்தார்.
தொடர்ந்து கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி மற்றும் கூட்டணிக்கு வெளியில் உள்ள முலாயம் சிங் ஆகியோரின் ஆதரவை பெற காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரே, வேட்பாளரை ஆதரிப்பது குறித்து அறிவிக்கப்படும் என முலாயம் சிங் அறிவித்தார். தொடர்ந்து காட்சி மம்தா பானர்ஜியின் பக்கம் திரும்பியது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா மம்தாவை டெலிபோனில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசித்தார். பின்னர் அவர் அழைப்பின் பேரில் மம்தா பானர்ஜி, நேற்று டில்லி வந்தார். அதுவரை, பிரணாப் முகர்ஜியே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற நிலை காணப்பட்டது.
டில்லி வந்த மம்தா நேற்று மாலை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கை சந்தித்து பேசினார். தொடர்ந்து இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய மம்தா, காங்கிரஸ் கட்சி பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபால கிருஷ்ண காந்தியே தனது முதல் சாய்ஸ் என்று புது குண்டை வீசினார். அவர் நிராகரிக்கப்படும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதி கலாம் தனது இரண்டாவது விருப்பம் என்றும் மம்தா தெரிவித்தார். துணை ஜனாதிபதி பதவிக்கு லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியை நிறுத்தலாம் எனவும் அவர் பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்தார். எனினும் முலாயம் சிங்கை சந்தித்த பின் தனது முடிவை தெரிவிப்பதாக கூறி சென்று விட்டார்.
பின்னர் டில்லியில் முலாயமை மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களை சந்தித்து பேசினர். அப்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், அப்துல் கலாம் அல்லது பிரதமர் மன்மோகன் சிங் அல்லது சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரில் ஒருவரே தங்களது சாய்ஸ் என தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை தாங்கள் ஏற்கப்போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், தாங்கள் கூறிய வேட்பாளரை ஆதரிக்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக