வெள்ளி, 22 ஜூன், 2012

போதை டான்ஸ்' விவகாரம்: நித்தியானந்தா மீ நானே கேஸ் போடுவேன்... நீதிபதி ஆவேசம்!

 Madurai Hc Bench Orders Police File Case Against Nithi
மதுரை ஆதீன மட வளாகத்தில் புனித நீரைக் குடித்து விட்டு மதுரை ஆதீனம், நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்டோரும், ஆண்களும், பெண்களும் டான்ஸ் ஆடியது தொடர்பான புகாரில் முகாந்திரம் உள்ளது. 
எனவே இதுகுறித்து உடனே போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் நானே வழக்குப் பதிவு செய்வேன் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி செல்வம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்து மக்கள் கட்சி சார்பில் சோலைக்கண்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், மதுரை ஆதீனம் என்னை மடத்திற்கு அழைத்திருந்தார். பிறகு அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் என்னை கலந்து கொள்ளக் கூறினார்கள்.
அப்போது புனித நீர் என்ற பெயரில் போதை கலந்த பானத்தை அங்கிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள், எனக்கும் கொடுத்தார்கள். அடுத்து நித்தியானந்தாவும், ஆதீனமும் மூன்றுக்கும் மேற்பட்ட புலித்தோலை கீழே போட்டு அதில் அமர்ந்திருந்தனர். அங்கு யானைத் தந்தங்களும் இருந்தன.
அதன் பிறகு நித்தியானந்தா, மதுரை ஆதீனம், ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மற்றும் ஆண்களும், பெண்களும் போதையில் டான்ஸ் ஆடினர். கேட்டால் ஆனந்த நடனம் என்றனர்.

இந்த நடவடிக்கையால் மதுரை ஆதீனத்தின் புனிதம் கெட்டு விட்டது. ஆதீனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் எனது புகாரின் மீது அவர்கள் நடவடிக்கை எதையும் எடுக்காமல் உள்ளனர். புகாரைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் நித்தியானந்தா, மதுரை ஆதீனம், வைஷ்ணவி ஆகியோரைக் கைது செய்யவும் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், மதுரை ஆதீனம், நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்ட 6 பேர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஜூன் 22ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி செல்வம், புகாரில் முகாந்திரம் இருக்கிறது. எனவே உடனடியாக போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் அதைச் செய்ய மறுத்தால் நானே வழக்குப் பதிவு செய்ய வேண்டி வரும் என்று அதிரடியாக அறிவித்தார்.
முன்னதாக உயர்நீதிமன்றக்கிளை அனுப்பிய சம்மனை மதுரை ஆதீனம் பெற மறுத்து விட்டார். அதேசமயம், நித்தியானந்தாவும், வைஷ்ணவியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இருவரும் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜரவார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக