Viruvirupu,
முன்கதைச் சுருக்கம் என்னவென்றால், வீரபாண்டி ஆறுமுகத்தை விமர்சித்து ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. கடிதத்தை மேலோட்டமாக பார்த்தால், தி.மு.க.-வுக்கு உள்ளேயுள்ள யாரோ ஒரு நபர், சேலம் தி.மு.க.-வின் தற்போதைய நிலை கண்டு கொந்தளித்த மனநிலையில் எழுதியதுபோல உள்ளது.
வீரபாண்டியாரைவிட, அவரது மகன் ராஜாவைப் பற்றி அதிக கோபம் கொண்ட நபர் எழுதிய கடிதமாகவும் தெரிகிறது.
பிரபலமானவர்கள் பலருக்கு அவ்வப்போது மிரட்டல் கடிதம் வருவது சகஜம்தான். அதுவும் வீரபாண்டியார் மற்றும் அவரது மகன்போல ஊருக்குள் ‘அதிரடி’ அரசியல் செய்பவர்களுக்கு நிறையவே வரும். ஆனால் இந்தக் கடிதம், லேசாக மிரள வைத்திருப்பதற்கு காரணம் உண்டு.
முன்னாள் அமைச்சர் நேருவின் சமீபத்தில் கொல்லப்பட்ட தம்பி ராமஜெயம் பற்றியும் கடிதத்தில் பிரஸ்தாபம் உண்டு. “ராமஜெயத்துக்கு நடந்ததுபோல இவருக்கும் நடக்கும்” என்ற ஒரு வாசகம் கடிதத்தில் உண்டு. ராமஜெயம் கொல்லப்பட்டது எப்படி என்பதில் இன்னமும் குழப்பங்கள் உள்ளன.
ஆரம்பத்தில் கடிதம் பற்றி அலட்சியமாக இருந்த வீரபாண்டியார் தரப்புக்கு யார் என்ன அட்வைஸ் கூறினார்கள் தெரியவில்லை, தற்போது மிரட்சியில் உள்ளார்கள் என்கிறார்கள் சேலம் தி.மு.க. புள்ளிகள். வெளிப்படையாக பெரிதாக தெரியாவிட்டாலும், தந்தைக்கும், மகனுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போலீஸை நாடினால், வேறு கேள்விகள் வரும் என்பதால், இவர்களே ஆட்களை ஏற்பாடு செய்திருப்பதாக தெரியவருகிறது. இந்த மாதிரியான விவகாரங்களுக்கு தேவையான ஆட்கள் அவர்களிடம் தாராளமாகவே உள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வீரபாண்டியாரின் நெருங்கிய சகா ஒருவர் (நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர்), ‘மற்றொரு தரப்புடன்’ ஒரு ஃபிரன்ட்லி சந்திப்பை மேற்கொண்டார் என்கிறார்கள் சேலத்துக்காரர்கள். அந்தத் தரப்போ, கடிதத்துக்கும் தமக்கும் சம்மந்தமே கிடையாது என்று தலையில் அடித்து சத்தியம் செய்யாத குறை.
இருந்தாலும், அவர்கள் மீதுதான் இவர்களுக்கு சந்தேகம் என அடித்துச் சொல்கிறார் இவர்களது விவகாரம் பற்றி நன்கு தெரிந்தவர்.
கடிதத்தில், தி.மு.க.-வை கேவலப்படுத்தி தற்போதுள்ள நிலைக்கு கொண்டுவந்திருப்பது வீரபாண்டியார் அன்டு கோ என்ற ரீதியில் கோபம் தொனிக்கும் வார்த்தைகள் இருந்தாலும், கட்சிக்கு அப்பால் இதில் ஒரு ‘பெண் விவகாரமும்’ இருப்பதாக கூறப்படுகிறது. ராமஜெயம் கொலையிலும் பெண் விவகாரம் இருப்பதாக ஊரெல்லாம் பேச்சாக உள்ளது.
அதுவும், இவர்களை மிரள வைத்திருக்கலாம்.
இப்படியொரு கடித விவகாரம் இருப்பது தமிழக உளவுத்துறைக்கும் தெரிந்துள்ளது. ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து நோ ஆக்ஷன். காரணம், இந்த கடிதம் இன்னமும் வெளிப்படையான புகாராக மாறவில்லை. தங்களுக்கு உள்ளேயே வைத்து சால்வ் பண்ண முடியுமா என வீரபாண்டியார் தரப்பு ட்ரை பண்ணுகிறது. அதற்காக சேலத்துக்கு வெளியேயும் சில காரியங்கள் நடக்கின்றன.
முன்பு சேலம் பகுதியில் ‘டாப் போஸ்ட்டில்’ இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் இப்போது சென்னை போஸ்டிங்கில் உள்ளார். அவர் வீரபாண்டியாரால் அளவுக்கு அதிகமாக பலனடைந்தவர். சென்னை அடையாறில் உள்ள வீடு ஒன்றில் வைத்து அவருடன் ஆலோசனை செய்திருக்கிறார்கள். கடிதத்தைப் பார்த்து, அவர் சில ஊகங்களை சொல்லியிருக்கிறாராம். சில பரிகாரங்களையும் விளக்கியிருக்கிறாராம்.
தற்போது ஆட்சி அதிகாரம் கையில் இல்லாத நிலையில், சில ‘சி’க்கள் போனாலும் பரவாயில்லை என, ‘பரிகாரம்’ செய்ய ரெடி என்பதே நேற்றைய சந்திப்பின் பின் எட்டப்பட்ட முடிவு என்கிறார், இவர்களுக்கு நெருக்கமான ஒருவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக