சனி, 30 ஜூன், 2012

கோபமுள்ள இடத்தில்தான் குணம் இருக்குமாமே? விசயகாந்த் பஞ்சு டயலக்

தர்மபுரி: ""நான் கோபப்படுவதாக சொல்கின்றனர். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்,'' என, மேடையில் டென்ஷன் அடைந்த விஜயகாந்த் விளக்கம் அளித்தார்.
தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே, மாவட்ட, தே.மு.தி.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் டாக்டர் இளங்கோவன் தலைமை வகித்தார். விஜயகாந்த் பேச துவங்கியதும், மேடையின் முன் பகுதியில் இருந்த தொண்டர்கள் கூச்சல் போட்டனர். டென்ஷன் அடைந்த விஜயகாந்த், ""அமைதியாய் இருப்பா, அறிவு இல்லை,'' என்று சொன்ன போது, சில தொண்டர்கள் மேடை ஏற முயன்றனர். அவர்களை பார்த்து, ""ராஸ்கல் பல்லை கழட்டிபோடுவேன் இறங்கு,'' என, கோபத்தோடு கண்டித்தார். அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள் அமைதியாகினர்.

தொடர்ந்து விஜயகாந்த் பேசியதாவது: தர்மபுரி நகராட்சி பகுதியில் சாலைகள் அனைத்தும் போக்குவரத்துக்கு லாயக்கில்லாமல் உள்ளது. சாலையை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. நகராட்சி தலைவி கூட்டத்தை நடத்த முடியாமல், கவுன்சிலர்களுக்கு பணம் கொடுத்து கூட்டத்தை நடத்தும் நிலையில் உள்ளார். எம்.எல்.ஏ.,க்கு கூட அதிக அதிகாரம் இல்லை. நகராட்சி தலைவருக்கு அதிக அதிகாரம் இருந்த போதும், கூட்டத்தை நடத்த முடியாமல் திணறி வருகிறார். தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு, மின் நிறுத்தம் அதிகரித்து வருகிறது. ஆனால், எதை பற்றியும் கவலைப்படாமல், முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

கடந்த ஆட்சியில் தான், மணல் கொள்ளை நடந்ததாக கூறினர். தற்போது, அதை விட பல மடங்கு மணல் கொள்ளை நடந்து வருகிறது. கோவையை சேர்ந்த, சாமியான ஒருவர் தமிழகத்தில் உள்ள மணல் கான்டிராக்ட் எடுத்துள்ளார். "ஒரு அடி தான் மணல் அள்ள வேண்டும். இரண்டு பொக்லைன் தான் பயன்படுத்த வேண்டும்' என, கூறுகின்றனர். ஆனால், இப்போது எத்தனை பொக்லைன் வைத்து மணல் எடுக்கின்றனர் என்பதை யாராலும் சொல்ல முடியாது. "காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் தான் மணல் எடுக்க வேண்டும்' என, விதிமுறை உள்ளது. ஆனால், இந்த ஆட்சியில் விதிமுறை கடைப்பிடிப்பது இல்லை. மாலை 6 மணிக்கு மேல் தான் மணல் அள்ளப்படுகிறது. தமிழகத்தில் எல்லா விலையும் உயர்ந்து விட்டது. அரிசி விலை, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஊழல் செய்வதில் தான் உள்ளனர்.

நான் எதையும் எதிர்பார்க்காமல், மக்களை சந்தித்து வருகிறேன். நான் கோபப்படுவதாக கூறுகின்றனர். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும். நீங்கள் கூச்சல் போட்டால், நான் பேசுவதை கேட்க முடியாது. நான் கோபப்பட்டதால் தான் நீங்கள் இப்போது அமைதியாக இருக்கின்றீர்கள். என்னை கோபக்காரன் என, சொல்வதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். எல்லா பணிக்கு, 20 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டியது உள்ளதால் கான்டிராக்டர் யாரும் டெண்டர் எடுக்க வருவதில்லை. கமிஷன் கொடுத்து, சாலை பணிகள் நடந்தால், வாகனத்தோடு ரோடும் சேர்ந்து போய் விடும். தமிழகத்தை சுற்றியுள்ள மூன்று மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து வருகின்றனர். இதை தீர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் மட்டும், நாம் ஓட்டு போட வேண்டுமா? அதனால் தான் நாங்கள் புறக்கணித்தோம். மக்களுக்காக போராடும் என் பின்னாள், மக்கள் இருப்பார்கள். மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் யாரும் நுழைய முடியாத அளவுக்கு சுகாதாரம் இல்லை. டாக்டர்கள் இல்லை. இவர்கள் பணம் பார்க்கவே காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

தொண்டர்கள் ஆவேசம்: தர்மபுரி தொகுதியில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,பாஸ்கர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு பணிகளை துவக்க விஜயகாந்த் மாலையில் பயணம் செய்தார். தர்மபுரி அடுத்த ஜருகு பகுதியில் கட்சி தொண்டர்கள், விஜயகாந்த்துக்கு வரவேற்பு கொடுக்க காத்திருந்தனர். ஆனால், வாகனத்தை விஜயகாந்த் நிறுத்தவில்லை. ஆவேசம் அடைந்த சில தொண்டர்கள் பேனர்களை கிழித்து எறிந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக