புதன், 6 ஜூன், 2012

போலீசார் என்கவுண்டர் செய்யபோகிறார்கள் நடராஜன் பொங்குகிறார்

''சிங்கத்தைச் சீண்டிவிட்டது மாதிரி நடராஜன் சிலிர்த்து எழ ஆரம்பித்து இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிரான யுத்தத்தைத் தொடங்கி விட்டார் நடராஜன் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். போலீஸுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட நடராஜன், இப்போது மனித உரிமை கமிஷனின் கதவைத் தட்டிவிட்டார். 4-ம் தேதி, காவல்துறைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் நடராஜன் புகார் அளித்தார். புகார் கொடுத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், 'கடந்த பிப்ரவரி 18-ம் தேதி டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் வந்த 15-க்கும் மேற்பட்ட போலீஸார் என் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து உள்ளே நுழைந்து என்னைத் தாக்கினார்கள். ஏன், எதற்கு என்றுகூட எனக்குப் புரியவில்லை. அதன்பின், என்னை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றி, செங்கிப்பட்டி, வல்லம் கிராமங்களுக்கு இடையே உள்ள காட்டுப் பகுதிக்குக் கொண்டுசென்றனர். அங்கு என்கவுன்ட்டர் செய்து என்னைக் கொல்லப்போவதாகப் பேசிக்கொண்டனர். அதன் பிறகு, எங்கிருந்தோ வந்த உத்தரவை அடுத்து என்னை தஞ்சாவூர் கொண்டு சென்றனர்.
இது மனித உரிமை மீறல்’ என்று சொன்னார். டெல்லிக்குச் சென்று மத்திய மனித உரிமை ஆணையத்திலும் இதுபற்றி புகார் கொடுக்கப்போகிறாராம்.
'இப்போது, அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது. அதிலும் போலீஸ்காரர்களின் ஆட்டம் தாங்க முடியவில்லை. நில மோசடி என்று போலிப் புகாரில் என்னைக் கைது செய்த போலீஸ்காரர்களால் அதை நிரூபிக்க முடிந்ததா? என் வீட்டில் இருந்து எதையாவது இந்த போலீஸால் கைப்பற்ற முடிந்ததா? நான் இப்போது ஜாமீனில் இருக்கிறேன். ஆனால், இப்போதும் இந்தப் போலீஸ் தொல்லையைத் தாங்க முடியவில்லை. அதிகாலையில் வாக்கிங் போக முடியவில்லை. இருட்டில் மறைந்துகொண்டு ஒருவன் பின் தொடர்கிறான். கேட்டால், போலீஸ் என்கிறான். ஆனால், அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொன்னால், காட்டுவது இல்லை. அவன் போலீஸ்காரனா இல்லை... ராமஜெயம், தா.கிருஷ்ணனைக் கொலை செய்த கும்பலில் ஒருவனா என்பது எப்படித் தெரியும்?’ என்று பதற்றமாகச் சொல்லிக்கொண்டே இருந்தார் நடராஜன்.''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக