சனி, 23 ஜூன், 2012

சகுனி - ”கார்த்தியின் முதல் சறுக்கல்”

நடிகர் கார்த்தி ஆரம்பம் முதலே வெற்றிப் படங்களை கொடுத்து வந்ததால், ஷங்கர் தயாள் இயக்கத்தில் அரசியல் சார்ந்து எடுக்கப்பட்ட சகுனி படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் டிரெய்லர்களும், போஸ்டர்களும் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கின அஜித் நடித்த ’பில்லா-2’ படத்துடன் ’சகுனி’ போட்டி என்ற அளவிற்கு பேசப்பட்டு பின்பு தனியே களமிறங்கிய சகுனி திரையில் களமாடவில்லை
தனது பாரம்பரியமான பரம்பரை வீட்டை பாலம் அமைப்பதற்காக இடிக்காமல் இருக்க, தேர்தல் நேரத்தில் தனக்கு உறுதியளித்த அரசியல்வாதிகளை நம்பி சென்னை வரும் கார்த்தி சந்தானத்தை சந்திக்கிறார்.

கார்த்தி சந்தானத்தின் உரையாடல்களுக்கிடையே பிளாஷ்பாக்கை கூறியிருப்பது புதுவித உக்தி. சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கும் அனுஷ்காவும், ஆண்ட்ரியாவும் காரணமில்லாத கதாபாத்திரங்களாகவே வந்து சென்றுள்ளனர். கதாநாயகியாக வரும் ப்ரணிதா அழகான ஹீரோயினாக தோன்றினாலும், அவருக்கு அதிக காட்சிகள் இல்லாததால் ரசிக்க முடியவில்லை.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராதிகா கதாபாத்திரத்திற்கும் அளவுகோள் வைக்கப்பட்டுள்ளது. சகுனி படத்தில் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கூறும் முயற்சியில் இறங்கியிருக்கும் கார்த்தியின் கதாபாத்திரம் படத்தில் தனது பிரச்சினைக்காக மட்டும் பாடுபடாமல் மக்களின் பொதுப் பிரச்சினைக்காகவும் போராடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ரோஜா, ராதிகா, கோட்டா சீனிவாசராவ், கிரண் ஆகியோரின் கதாபாத்திரங்கள் முழுமையடையாமல் இருப்பது அனைவராலும் கவனிக்கப்படும் வகையில் இருக்கிறது. 
நாசர் கதபாத்திரத்திற்கு நல்ல அழுத்தம் இருந்தாலும், அந்த கதாபாத்திரத்தை உபயோகிக்க தவறிவிட்டார் இயக்குனர். பிரகாஷ்ராஜ் வழக்கம்போல் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நன்றாக நடித்துள்ளார். படத்தின் முடிவில் வரும் எதிர்பாராத சில காட்சிகள் ரசிகர்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கின்றன. 
சில காட்சிகளுக்கு அடுத்து வரும் காட்சிகளை ரசிகர்கள் முன்னரே கனித்து கைதட்டலகளை மறுத்துவிடுகின்றனர். கதைக்காக காத்திருந்த ரசிகர்கள் திரையரங்கின் விளக்குகள் எரிந்ததை பார்த்ததும் கடுப்பாகித் தான் போனார்கள் போல. 
எப்படியும் கிளைமேக்ஸில் ஹீரோயின் வருவார் என்பதை யூகித்து, சந்தானத்தின் காமெடியும் இருக்கும் என்பதை நம்பி தங்கள் இருக்கையிலேயே அமர்ந்திருந்த ரசிகர்களை ஷங்கர் தயாள் ஏமாற்றாததை பாராட்டியே ஆகவேண்டும். 
கார்த்தி நடித்த சகுனி - ”கார்த்தியின் முதல் சறுக்கல்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக