வியாழன், 28 ஜூன், 2012

ஜெகன் நினைத்தால் பிரணாப் முகர்ஜியின் வெற்றியைத் தடுக்கலாம்?

 Jagan Alone May Spoil Pranab Dream Become President
ஹைதராபாத்: ஆந்திராவின் புதிய அரசியல் தலைவராக உருவெடுத்திருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி கையில் பிரணாப் முகர்ஜியின் வெற்றிப் புன்னகை ஊசலாடி வருவதாக ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 
அதாவது ஜெகன் மோகன் ரெட்டி, பி.ஏ.சங்மாவை ஆதரிக்க முடிவு செய்தால், அவரது கட்சியின் 15 எம்.எல்.ஏக்கள், ஒரு எம்.பி மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும், ஜெகன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் பெருமளவில் சங்மாவுக்கு வாக்களிக்கும் அபாயம் எழுந்துள்ளதாம். இதனால் காங்கிரஸ் தரப்பு பெரும் கலக்கத்தில் உள்ளது.
எந்த ஆந்திர மாநிலத்தில் படு சந்தோஷமாக வெற்றிகளைப் பறித்ததோ, எந்த ஆந்திர மாநிலத்தில் படு சவுகரியமாக அரசியல் செய்து வந்ததோ, அதே ஆந்திரா மூலம் தற்போது பெரும் தலைவலியை சந்திக்க ஆரம்பித்துள்ளது காங்கிரஸ்.

முதலில் தெலுங்கானா பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. தற்போது ஜெகன் மோகன் ரெட்டியிடம் காங்கிரஸ் சிக்கித் தவிக்கிறது. சாதாரண முள்தானே, குத்தினால் வலிக்காது என்ற நினைத்த காங்கிரஸுக்கு பெரும் அடியைக் கொடுத்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் காங்கிரஸுக்கு ஜெகன் ரூபத்தில் மேலும் ஒரு பெரிய சவால் வந்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சமீபத்தில்நடந்த இடைத் தேர்தலில் 18 தொகுதிகளில் 16 தொகுதிகளை வென்றது. கூடவே கடப்பா எம்.பி. தொகுதியையும் தக்க வைத்துக் கொண்டது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் அடியை வாங்கியது.
தற்போது ஜெகன் மோகன் ரெட்டி வசம் 15 எம்.எல்.ஏக்கள், ஒரு எம்.பி உள்ளனர். இதை வைத்துக் கொண்டு காங்கிரஸுக்கு ஒரு சின்ன பிலிம் காட்ட ஜெகன் மோகன் ரெட்டி தயாராகி வருவதாக தெரிகிறது.
சமீபத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளரான பி.ஏ.சங்மா, அதிரடியாக ஹைதராபாத் வந்தார். ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கு வந்தார். அவரை எதிர்பாராத சிறை அதிகாரிகள், வெலவெலத்துப் போய் விட்டனர். இருப்பினும் சமாளித்துக் கொண்ட அவர்கள், பார்வையாளர் நேரத்தில் வருமாறு கூறி திருப்பி் அனுப்பினர்.
ஆனால் சற்றும் சளைக்காத சங்மா, அங்கிருந்து நேராக ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டுக்கு ஓடினார்.அங்கு ஜெகனின் தாயார் விஜயம்மாவை சந்தித்து தடாலடியாக ஆதரவு கேட்டார்.
இதை காங்கிரஸ் தலைமை எதிர்பார்க்கவில்லை. இதுவரைக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் நிலைப்பாடு குறித்துத் தெரியவில்லை. ஆனால் அவர் சங்மாவை ஆதரிக்க தீர்மானிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸுக்கு அடிமேல் அடி கொடுத்தால்தான் அது இறங்கி வந்து தன்னிடம் பணியும் என்று ஜெகன் மோகன் ரெட்டி தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது. எனவே குடியரசுத் தலைவர் தேர்தலை வைத்து மேலும் ஒரு விளையாட்டு காட்ட ஜெகன் மோகன் ரெட்டி தயங்க மாட்டார் என்றும் கருதப்படுகிறது.
ஒட்டுமொத்த மக்களும் தன் பக்கம் இருப்பதை ஜெகன் மோகன் ரெட்டி தற்போது உணர்ந்துள்ளதால் அடுத்தடுத்து இனி அதிரடியாக செயல்படுவார் என்று கூறுகிறார்கள். ஒருவேளை அவர் சங்மாவை ஆதரிக்க தீர்மானித்தால் அவருடைய கட்சியோடு அந்த முடிவு நின்று விடாது. மாறாக, காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்களும் சங்மாவை ஆதரித்து மாற்றி வாக்களிக்கும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.
அப்படி நடந்தால் மிகப் பெரிய அளவில் பிரணாப் முகர்ஜிக்கு ஆந்திராவில் வாக்குகள் பறிபோகும் அபாயம் உள்ளது. ஒரு வேளை அது அவரது வெற்றியைத் தடுக்கக் கூடிய அளவிலும் கூட இருக்கலாம் என்கிறார்கள். இதனால்தான் ஜெகன் மோகன் ரெட்டி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற பெரும் பதைபதைப்பில் உள்ளனர் ஆந்திர காங்கிரஸார்.
மொத்தத்தில் ஜெகன் மோகன் கையில் பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பு ஊசலாடுகிறது என்று கூட கூறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக