திங்கள், 11 ஜூன், 2012

மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்: ஆ.இராசா

கோவை, ஜூன் 11- மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆ.இராசா கைது செய்யப்பட்டார். 15 மாதம் சிறையில் இருந்த அவர், கடந்த மாதம் 15- ஆம் தேதி ஜாமீனில் விடுதலையானார். டில்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு சென்றுவர அவருக்கு விதிக்கப்பட்டு இருந்த நிபந்தனை ஜாமீனும் தளர்த்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆ.இராசா சென்னை வந்து தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்தார். தன்னை எம்.பி.யாக. தேர்ந்தெடுத்த நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 9.40 மணிக்கு கோவை வந்தார்.

கோவை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க.வினர் திரளான அளவில் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மக்களை சந்திப்பதற்காக புறப்பட்டார். அப்போது ஆ.இராசா செய்தியாளர்களிடம் கூறும்போது,

`கொங்கு மண்டல மக்களையும், என்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்த நீலகிரி தொகுதி மக்களையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீலகிரி தொகுதி மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணியை மீண்டும் தொடருவேன்' என்று கூறினார். பின்னர் தொகுதி மக்களை சந்திப்பதற்காக ஆ.இராசா காரில் புறப்பட்டு சென்றார்.

கோவை அருகே உள்ள காளப்பட்டி, சரவணம்பட்டி, குரும்பபாளையம், கோவில்பாளையம் பகுதிகளில் அளிக்கப்பட்ட வரவேற்பை தொடர்ந்து அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்திற்கு சென்றார்.

அங்கு அவர் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

ஊட்டியில் தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்ட ஆ.இராசா, பின்னர் சேரிங்காராஸ் பகுதியில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

நான் மத்திய அமைச்சராக இருந்தபோது சி.பி.சி. அமைப்பு என் மீது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தது. மத்திய தணிக்கை துறை என் மீது ரூபாய் ஒரு லட்சத்து 29 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக தெரிவித்தது. ஆனால் சி.பி.அய். ரூ.33 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்படுத்தியாக என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ஆனால் எதிர்க்கட்சிகள் நான் ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்து விட்டதாக தெரிவித்து அவதூறு பரப்பினார்கள். இந்த வழக்கின்போது நானே நீதிமன்றத்தில் வாதாடி இருக்கிறேன். அடிப்படை ஆதாரம் இல்லாமல் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தேன். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் இது பற்றி நான் அதிகம் பேசக்கூடாது.

நான் மத்திய அமைச்சராக பதவி ஏற்றபோது இந்தியாவில் 30 கோடி பேர் செல்போன் வைத்திருந்தனர். நான் பதவி விலகியபோது 80 கோடி இணைப்பாக இருந்தது. மேலும் நிமிடத்திற்கு ரூபாய் ஒன்று என்று இருந்த செல்போன் கட்டணத்தை நான் 10 காசாக குறைத்தேன்.

என்மீது போடப்பட்டு உள்ள வழக்கை தி.மு.க. தலைவர் கலைஞர் துணையுடனும், மக்கள் சக்தியுடனும், எனது சட்ட அறிவுடனும் எதிர்கொண்டு வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக