மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த டி.ஆர். மகாலிங்கம் ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும், பாடவும் செய்தார். அவர் ஒரு நாடகத்தில் நடித்தபோது அவரின் பாட்டில் மெய்சிலிர்த்துப் போன ஏ. வி. மெய்யப்ப செட்டியார் தனது படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். 1937ல் ஏ.வி.எம்.-ன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்பு பிரகலாதா, சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார். திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இரண்டாம் உலகப் போரின் போது எடுக்கப்பட்ட ஸ்ரீவள்ளி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு இப்படம் பெரிதும் காரணமாய் அமைந்தது. இவ்வாறு பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான டி.ஆர்.மகாலிங்கத்தின் பூர்வீக வீடு சோழவந்தான் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ளது.
அவர் 1978 ல் இறந்ததை தொடர்ந்து அவரது மகன் சுகுமாறனின் பராமரிப்பில் இந்த வீடு இருந்து வந்துள்ளது. பின்பு இந்த வீட்டை சுகுமாறன் மின்வாரியத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளார். சுகுமாறனையடுத்து அவரது மகன் ராஜேஷ் மகாலிங்கம் இந்த வீட்டை பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வீட்டை மின்வாரியத்துறையினர் காலி செய்துவிட்டனர். இதை அறிந்த சிலர் இந்த வீட்டை ஆக்கிரமிக்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து ராஜேஷ் மகாலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வீட்டை மீட்டுக் கொடுத்துள்ளனர்.
கடந்த 1972ம் ஆண்டு சோழவந்தானில் 'பட்டிகாடா பட்டணமா' படப்பிடிப்பு நடைபெற்ற போது, இந்த வீட்டில் தான் முதல்வர் ஜெயலலிதா 45 நாட்கள் தங்கி ஷூட்டிங் சென்று வந்ததாகக் கூறப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக