சனி, 2 ஜூன், 2012

ஜாமீனுக்கு கோடி கோடியாக வாங்கிய நீதிபதி... மாட்டும் மற்றொரு நீதிபதி

 Pattabhi Fixed Bail Deal Rs 15 Crore
ஹைதராபாத்: சுரங்க முறைகேட்டு ஊழல் வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கொடுத்த விவகாரத்தில் சிபிஐ நீதிபதி மட்டுமல்ல. பல பெருந்தலைகளின் பெயர்களும் வரிசையாக அடிபட்டு வருகின்றன. ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்க சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சிபிஐ நீதிபதி பட்டாபி ரூ15 கோடி பேரம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுரங்க முறைகேட்டு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஜாமீன் மறுத்த சிபிஐ நீதிபதி பட்டாபிராமராவ், முதன்மை குற்றவாளி ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் உடனடியாக வழங்கினார். ஆனால் ஜாமீன் காப்பியை சிபிஐக்கோ ஜனார்த்தன ரெட்டிக்கோ தராமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்தார் நீதிபதி பட்டாபி. இதைத் தொடர்ந்து சிபிஐக்கு கிடைத்த சில ரகசிய தகவல்களின் அடிப்படையில் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்துக்கு பட்டாபி தொடர்பான சில தகவல்களை சிபிஐ தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து பட்டாபியின் மகனுக்கு சொந்தமான இரண்டு வங்கி லாக்கர்களை சோதனையிட்ட சிபிஐ ரூ2 கோடி ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தது. இதைத் தொடர்ந்தே பட்டாபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் அந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலைமை இருக்கிறது.

பணம் கைமாறிய கதை

ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் தர ரூ15 கோடி வேண்டும் என்று நீதிபதி பட்டாபி பேரம் பேசுகிறார். இவருக்கும் ஜனார்த்தன ரெட்டி குரூப்புக்கும் இடையே பேரம் பேசுபவர் யாருமல்ல.. குண்டூர் மாவட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர்தான். இதையடுத்து முதல் கட்டமாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து எம்.எல்.ஏ. சுரேஷ் பாபு மற்றும் ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் சோமசேகர ரெட்டி ஆகியோர் மூலம் ஹைதராபாத்துக்கு பணம் வந்து சேருகிறது. இந்த பணம் ஹவாலா மூலமாக கொண்டுவரப்பட்டதா? அல்லது சாலைவழியாக வாகனத்தில் எடுத்து வரப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து இந்தப் பணம் கைமாற்றப்பட்டுள்ளது. பணத்தை நீதிபதி பட்டாபியின் மகன் நேரடியாகப் பெற்றிருக்கிறார். இதனால் பஞ்சாரா ஹில்ஸ் ஹோட்டலின் சிசிடிவி காமிராக்களை ஆராயவும் சிபிஐ முடிவு செய்துள்ளது.
Read: In English
மேலும் இந்த விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைப்பதா? அல்லது சுரங்க முறைகேட்டை விசாரித்து வரும் சிபிஐயிடமே தனியாக ஒரு எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடுவதா? என்பது குறித்து ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் ஆலோசித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் ஆந்திர அமைச்சர்கள், 2 எம்.எல்.ஏக்கள், கர்நாடக எம்.எல்.ஏக்கள், ஓய்வுபெற்ற நீதிபதி என பெரும் புள்ளிகளுக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதால் இன்னும் சில வாரங்களுக்கு ஜாமீனுக்கு ரேட் பிக்ஸ் பண்ணிய ஜட்ஜ் எபிசோடு நீடிக்கவே செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக