செவ்வாய், 26 ஜூன், 2012

ஜெய்ராம் ரமேஷ் நிதியமைச்சரானால்...!

-ஏ.கே.கான்
Come Let Us Speculate On Next Finance Minister மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.
சர்வதேச பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நிலவும் நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமை சரிந்து வரும் நிலையில் நிதியமைச்சகத்தை வழிநடத்த மிகத் திறமையான ஒருவர் தேவைப்படுகிறார்.
இந்தப் பதவியைப் பிடிக்க மத்திய அமைச்சர்களில் மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகளிடையே கூட பெரும் போட்டி நடந்து வருகிறது.

நிதித்துறையில் பெரும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முடுக்கி விடுவதோடு, அன்னிய முதலீட்டை இழுத்து வரும் திறமும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதோடு ரூபாயின் மதிப்பு சரிவதைக் கட்டுப்படுத்தும் திறமையும் கொண்ட ஒருவர் தான் இப்போதைய தேவை. அதே நேரத்தில் நிதித்துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் காங்கிரசின் ஓட்டு வங்கியும் பாதிக்கப்படாத வகையில் நேக்கு போக்காக அரசியலையும் நிதி விவகாரங்களையும் கவனமாகக் கையாளும் திறன் கொண்ட ஒருவர் தேவைப்படுகிறார்.
அதில் முதல் சாய்ஸ் பிரதமர் மன்மோகன் சிங் தான்.
ஆனால், பிரதமர் பதவியோடு நிதியமைச்சர் பொறுப்பையும் வகிக்க முடியாத அளவுக்கு அவருக்கு ஏராளமான பணி நெருக்கடி. இதனால், வேறு ஒருவரை நிதியமைச்சராக்கியே ஆக வேண்டிய நிலை உள்ளது.
ப.சிதம்பரம்:
அடுத்த சாய்ஸாக இருப்பவர் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். அடிப்படையில் வழக்கறிஞரான சிதம்பரத்துக்கு நிதி நிர்வாகம் அத்துப்படியான விஷயம். 2004-2008ம் ஆண்டில் இவர் நிதியமைச்சராக இருந்கபோது தான் நாடு 9 சதவீத வளர்ச்சியைக் கண்டது.
சர்வதேச பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டபோதும், நிலைமை சமாளித்து நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்து காட்டினார்.
ஆனால், அதே காலகட்டத்தில் இந்தியாவில் நடந்த வெடிகுண்டு சம்பவங்கள், தீவிரவாத தாக்குதல்களால் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் மீது கடும் கோபம் கொண்ட சோனியா அவரை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.
உள்துறையை கொஞ்சமாவது செயல்படும் துறையாக மாற்ற ப.சிதம்பரமே சரி என்று மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முடிவு செய்து அவரை உள்துறை அமைச்சராக்கினர்.
உள்துறை அமைச்சராக ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாகவே உள்ளன. கிட்டத்தட்ட ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ. மாதிரி தான் உள்துறையை கையாண்டு வருகிறார் சிதம்பரம். தினமும் ஐ.பி உள்ளிட்ட உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை, வாரந்தோறும் உள்துறை-உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் கூட்டாக ஆலோசனை, கிடைக்கும் ரகசிய தகவல்கள் வெளியே லீக் ஆகிவிடாமல் கட்டிக் காத்து உடனடி நடவடிக்கைகள் எடுத்து உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிதம்பரத்தின் பங்கு மிகச் சிறப்பாகவே உள்ளது.
இதற்கு முன் இந்தத் துறையை கையாண்ட சிவராஜ் பாட்டீல் அந்தத் துறையை சீரழித்து வைத்த நிலையில், அதை சரி செய்யவே சிதம்பரத்துக்கு நெடு நாட்கள் பிடித்தன. இப்போது அந்தத் துறையிலிருந்து சிதம்பரத்தை மாற்ற சோனியாவுக்கும் ராகுல் காந்திக்கும் விருப்பமில்லை என்கிறார்கள்.
இதனால், சிதம்பரம் நிதியமைச்சராகவது சாத்தியமில்லை.
ஆனந்த் சர்மா:
வர்த்தகத்துறை அமைச்சரான ஆனந்த் சர்மாவை 3வது சாய்ஸாக பார்க்கிறார்கள். மிகச் சிறந்த அமைச்சர்களில் ஒருவரான சர்மாவுக்கு பிடித்த துறை வெளியுறவுத்துறை தான். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக வர்த்தகத்துறைக்கு அமைச்சராக்கினர் சோனியாவும் மன்மோகன் சிங்கும்.
அவரும் அந்தத் துறையை நன்றாகவே நிர்வகித்து வருகிறார். தீவிரமான பொருளாதார சீர்திருத்த ஆதரவாளரான சர்மா சர்வதேச அளவில் நிதி நிலைமை சரியில்லாதபோதும் இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படாமல் இருக்க ஏராளமான முயற்சிகளை எடுத்து வருபவர்.
சர்வதேச அரசியல், பொருளாதார விவகாரங்களில் அதீத ஆர்வம் கொண்ட இவர் கடுமையான உழைப்பாளி. ஆனால், நிதித்துறையை நிர்வகிக்கும் அளவுக்கு இவரிடம் திறமை உள்ளதா என்பதில் சந்தேகங்கள் உள்ளன.
சி.ரங்கராஜன்:
முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான சி.ரங்கராஜனுக்கு உடம்பெல்லாம் பொருளாதார மூளை தான். இப்போதும் காலையில் தினமும் பிரதமர் நாட்டின் நிதி விஷயங்களை விவாதிக்கும் முக்கிய நபர் ரங்கராஜன் தான்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ள இவர் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது தான் இந்திய நிதி நிலைமை நல்ல நிலைக்கு வந்தது. நாட்டின் பொருளாதாரத்தை காவு கொடுத்துத் தான் பணவீக்கம், பெட்ரோல்-டீசல் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், அது தவறு என்று சொல்பவர். மானியங்களுக்கு எதிரானவர்.
தீவிரமான பொருளாதார சீர்திருத்த ஆதரவாளர். ஆனால், அரசியல் பின்புலம் இல்லாதவர். அரசியல்ரீதியாக நிதி விவகாரங்களை பார்க்க மறுப்பவர். ஓட்டு அரசியல் இவருக்குத் தேவையில்லை. ஆனால், காங்கிரசுக்குத் தேவையாச்சே!.
மான்டேக் சிங் அலுவாலியா:
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங்கை நிதியமைச்சராகவும், ப.சிதம்பரத்தை வர்த்தகத்துறை அமைச்சராகவும் வைத்துக் கொண்டு தான் பல மாயாஜாலங்களைச் செய்தார். இந்த டீமுக்கு முதுகெலும்பாக இருந்தவர் மான்டேக் சிங் அலுவாலியா.
பிரதமர் மன்மோகன் சிங்கின் வலது கரமான இவர் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக உள்ளார். இவரும் சி.ரங்கராஜன் மாதிரியே முழு பொருளாதார வல்லுனர் தான். அரசியல்வாதி இல்லை.
இதனால் நாட்டுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை பட்டவர்த்தனமாக சொல்லிவிடும் இயல்புடையவர். மானியங்களை கட்டுப்படுத்தி அரசின் செலவைக் குறைத்து, அந்தப் பணத்தை நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பயன்படுத்தச் சொல்பவர். பெட்ரோல், டீசலை விலையை மானியத்தைக் கொடுத்து குறைக்க வேண்டியதில்லை என்பவர்.
இவர் சொன்னதில் பல விஷயங்களை மன்மோகன் சிங்கால் கேட்க முடியவில்லை. காரணம், அரசியல். இவர் சொன்ன பேச்சைக் கேட்டிருந்தால் இப்போது நாடு சந்திக்கும் பல பொருளாதார நெருக்கடிகள் வந்தே இருக்காது.
இவர் நிதியமைச்சரானால் பங்குச் சந்தைகளில் பணம் புரண்டோடும் என்கிறார்கள். அந்த அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக இருப்பார். ஆனால், காங்கிரசுக்கு ஓட்டுக்கள் அல்லவா புரண்டு ஓட வேண்டும்...
ஜெய்ராம் ரமேஷ்:
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் எல்லோருக்குமே நண்பர். முதலீட்டாளர்களுக்கு ஆதரவான, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவான நபர் தான் என்றாலும் பக்கா அரசியல்வாதி.
கடந்த 2 முறையும் மத்தியில் காங்கிரஸ் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர். சோனியாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். பாஜக ஆட்சியின் கடைசி ஆண்டில், தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தபோது, 'இந்தியா ஒளிர்கிறது' என்று ஒரு போலி பிரச்சாரம் முன் வைக்கப்பட்டு கோடிக்கணக்கான பணம் செலவில் டிவி, பத்திரிக்கைகளில் விளம்பரம் வந்தபோது அதை சமாளிக்க சோனியாவால் உத்தரவிடப்பட்ட நபர் ஜெய்ராம்.
''காங்கிரஸ் கா ஹாத்.. ஆம் ஆத்மி கே சாத்'' (காங்கிரசின் கை எப்போதும் சாதாரண மக்களுடனே கைகோர்த்து நிற்கும்.. இது எனக்குத் தெரிந்த இந்தி translation) என்ற பதிலடி விளம்பரத்தை ஜெய்ராம் ரமேஷ் தான் முன் வைத்தார்.
பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையால் கடுப்பில் இருந்த மக்களுக்கு பாஜகவின் India is shining, Feel good factor (Feel good ஹோரகா ஹை.. ஹம் feel great factor லாங்கே...) என்று பிரமோத் மகாஜனும், வெங்கய்யா நாயுடுவும் டிவியில் மாறி மாறி பேசி வெறுப்பேற்றி வந்த நிலையில், மிக அமைதியாக முன் வைக்கப்பட்ட ''காங்கிரஸ் கா ஹாத்.. ஆம் ஆத்மி கே சாத்'' கோஷம் ஏழைகளை காங்கிரஸ் பக்கமாகத் திருப்பியது.
இதையடுத்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் காங்கிரஸ் பிரச்சாரத்துக்குத் தலைமை தாங்கினார் ரமேஷ். இதற்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார்.
கையை மடித்துவிட்ட வெள்ளை ஜுப்பா, நுனி நாக்கு ஆங்கிலம், அலைபாயும் வெள்ளை முடி, லேட்டஸ்ட் டெக்னாலஜியை பயன்படுத்துவதில் முன்னோடி, பஞ்சாயத்து ராஜ் விவகாரங்களிலும் சர்வதேச பொருளாதார விவகாரங்களிலும் அலாதி ஆர்வம், சர்வதேச சுற்றுச்சூழல் சட்டங்களில் தீவிர ஞானம், சுற்றுச்சூழல் விவகாரங்களில் எந்த நாடுடனும் மோதும் திறன் என எல்லாம் தெரிந்த, எல்லாம் கலந்த மேதாவி தான் ஜெய்ராம் ரமேஷ்.
அரசியலும் தெரியும், டெக்னாலஜியும் தெரியும், நிதி விவகாரங்களும் அத்துப்படி.
ஆனால், ஓவராக ரூல் பேசுவார். சட்டப்படி தான் எல்லாம் என்பார். தவறு செய்தால் சொந்தக் கட்சி முதல்வரையே விமர்சிப்பார், நல்லது செய்யும் எதிர்க் கட்சி முதல்வரை வெளிப்படையாகவே பாராட்டுவார்.
இந்தியாவில் ரூ 60,000 கோடியை நிலக்கரித்துறையில் முதலீடு செய்ய வந்த வேதாந்தா நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் விதிகளைக் காட்டி ஏராளமான தடைகளைப் போட்டார் ரமேஷ். இதனால் இவர் மீது முதலீட்டாளர்களுக்கு கோபம் உண்டு.
இவரது செயல்களால் கடுப்பான பிரதமர் இவரை ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றினார். ஆனால், அதிலும் தன்னால் முடிந்த அளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வந்தவர்.
கார்களுக்கான டீசல் விலையைக் குறைக்கக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளவர். இவர் நிதியமைச்சரானால் ஒன்று டீசல் மீதான வரி உயரும் அல்லது டீசல் கார்கள் மீதான வரி உயரும் அல்லது இரண்டுமே நடக்கும்!.
கார் நிறுவனங்கள் இவரை நிதியமைச்சராக்க விட்டுவிடுவார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக