வியாழன், 21 ஜூன், 2012

தொடரப் போகுது "குண்டாஸ்'வீரபாண்டியோடு விடப்போவதில்லை

சேலம்: குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, சேலத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. "பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, சேலம் போலீஸ் கமிஷனர் மாஹாலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ஜூன் 18ம் தேதி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


பஸ் மீது கல் வீச்சு: நகரில் 17 பஸ் மீது கல் வீசி தாக்கியதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாநகரில், வன்முறையை அறவே தடுக்க, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை உட்பட 220 போலீசார், 24 மணி நேர பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் மாஹாலி கூறியதாவது: சேலம் மாநகரில், சட்டம்-ஒழுங்கு பாதுகாக்க, தமிழ்நாடு, ஏழாவது சிறப்பு பட்டாலியனைச் சேர்ந்த, "சி' மற்றும் "இ' கம்பெனியைச் சேர்ந்த 110 பேர், மாநகர ஆயுதப்படை மற்றும் போலீசார் என, மொத்தம், 220 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாகன ரோந்து: மாநகருக்குள் வரும் பிரதான நுழைவு வாயில் மற்றும் புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் உட்பட, 50 இடங்களில், தற்காலிகமாக, போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, 30 இடங்களை மையமாகக் கொண்டு போலீஸ் வாகன ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறது. சிறப்பு போலீஸ் படை, மாநகர போலீசார், ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள் கூட்டாக சேர்ந்து பாதுகாப்பு பணியில், 24 மணி நேரமும் ஈடுபடுவர். இந்த பாதுகாப்பு பணி, ஒரு வார காலத்துக்கு தொடரும். தேவைப்படும் பட்சத்தில், மேலும் நீட்டிக்கப்படும்.

கடும் நடவடிக்கை: இரு துணை கமிஷனர்கள், 15 உதவி கமிஷனர்கள் மேற்பார்வையில், பாதுகாப்பு பணி தீவிரமாக கண்காணிக்கப்படும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு சம்பத்தில், தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வது, குண்டர் சட்டத்தில் அடைப்பது போன்ற நடவடிக்கைகள் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், அது பற்றி, தற்போது வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு கமிஷனர் மாஹாலி கூறினார். முன்னதாக, கமிஷனர் மாஹாலி தலைமையில் போலீசாரின் அடையாள அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. துணை கமிஷனர்கள் பாபு, ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோபத்தை தணிக்க அழகிரி சந்திப்பு? வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வீரபாண்டி ஆறுமுகம், கட்சித் தலைமை மீது கோபமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், நேற்று முன்தினம் அவரை சந்திக்கச் சென்ற ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதியை சந்திக்காமல் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது இதற்கிடையில், வேலூர் சிறையில் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து, அவரது உடல் நலத்தை விசாரிக்கவும், அவரது கோபத்தை தணிக்கவும், வழக்குகளை சட்டப்படி சந்திப்பது குறித்த ஆலோசனை வழங்கவும் மத்திய அமைச்சர் அழகிரி திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

தூக்கம் போச்சு! வேலூர் சிறையில் உள்ள வீரபாண்டி ஆறுமுகம் தூக்கம் இல்லாமல் தவிப்பதாக, சிறைத்துறையினர் கூறினர். நேற்று, வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய சென்ற சிறை மருத்துவர்கள், அவர் கண் சிவந்திருந்ததை பார்த்து விவரம் கேட்டனர். "சரியான நேரத்துக்கு தூங்க வேண்டும். இரவு நேரத்தில் நீண்ட நேரம் கண் விழித்திருக்கக் கூடாது' என, மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். தன்னைச் சந்திக்க நிர்வாகிகள், தொண்டர்கள் சேலத்தில் இருந்து வந்தால் அனுமதிக்க வேண்டாம் என்றும், முக்கிய வி.வி.ஐ.பி.,க்கள், வழக்கறிஞர்களை மட்டும் அனுமதிக்கும்படியும், சிறை அதிகாரிகளிடம் வீரபாண்டி ஆறுமுகம் கேட்டுக் கொண்டதாக, சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக