செவ்வாய், 5 ஜூன், 2012

Andhra மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்

ஆந்திராவில் காளான்கள் போல பெருகி விட்ட பொறியியல் கல்லூரிகளால், மாணவர்கள் மத்தியில் மவுசு குறைந்து விட்டது. இதனால், பல கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கையின்றி, மூடப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன், ஆந்திராவில், தலைநகர் ஐதராபாத் மற்றும் இதர சில நகரங்களில் மட்டுமே, பொறியியல் மற்றும் தொழில்கல்வி கல்லூரிகள் இருந்தன. இதனால், ஏராளமான மாணவர்கள் பொறியியல், மருத்துவம், பார்மசி மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில், இளங்கலை பட்டப்படிப்புகளை படிக்க, இங்கு அதிக அளவில் வந்தனர்.ஆனால், அதன்பின் நிலைமை மாறி விட்டது.
தற்போது மாநிலம் முழுவதும் காளான்கள் போல, பொறியியல் கல்லூரிகள் பெருகி விட்டன. இப்படி பொறியியல் கல்லூரிகளும், தொழில்கல்வி கல்லூரிகளும் பெருகியதால், மாணவர்கள் மத்தியில் அவற்றுக்கான வரவேற்பும் குறைந்து விட்டது. பல கல்லூரிகளை மாணவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்பதாலும், அங்கு சேர்க்கை மிக மிக குறைவாக இருப்பதாலும், அவை மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இடங்கள் காலி:ஆந்திராவில் இப்போதைக்கு 700க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் மூன்று லட்சத்திற்கு மேலாக இடங்கள் உள்ளன. கடந்த 2011-12ம் கல்வியாண்டில், ஒரு லட்சத்திற்கும் மேலான இடங்கள் இவற்றில் காலியாகவே இருந்தன. பல கல்லூரிகளில் 100க்கும் குறைவான மாணவர்களே சேர்ந்தனர். தனியார்கள் பலர், பொறியியல் மற்றும் தொழில்கல்வி கல்லூரிகளை துவக்கியது, பல கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, போதிய ஆசிரியர்கள் இல்லாதது, ஆய்வகங்கள் மற்றும் இதர வசதிகள் இல்லாதது, போன்றவையே இங்கு மாணவர்கள் சேராததற்கு காரணம்.

தெலுங்கானாவும் காரணம்:அதுமட்டுமின்றி, தெலுங்கானா தனி மாநில கோரிக்கை தொடர்பான போராட்டங்கள் மற்றும் பிரச்னைகளால், மாநிலத்தில் அமைதியின்மை நிலவியதும் மற்றொரு காரணம். இந்தப் பிரச்னையால், தங்கள் மாநில கல்லூரிகளில் படிக்க விரும்பாத மாணவர்கள், அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு சென்று விட்டனர். அத்துடன் வசதிகள் இல்லாத கல்லூரிகள், தரமான ஆசிரியர்கள் இல்லாத கல்லூரிகளில் படித்தால், இங்கிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. இதுவும் பொறியியல் கல்லூரிகள் பல மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம்.

ஆந்திரா முதலிடம்:அகில இந்திய தொழில் கல்வி நிறுவனத்தில், 14 மாநிலங்களைச் சேர்ந்த 143 தொழில்கல்வி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை மூட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. அவற்றில் 56 கல்வி நிறுவனங்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவை. இந்த 56 பொறியியல் கல்லூரிகளில் 44 கல்லூரிகளில், கடந்த ஆண்டு 10க்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி, 96 கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். இதுதவிர 116 கல்லூரிகளில் நூற்றுக்கும் குறைவான மாணவர்களே கடந்த ஆண்டில் சேர்ந்துள்ளனர் என, ஆந்திர மாநில உயர் கல்வி கவுன்சில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எட்டு சதவீதம் பேர்:மோசமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஆந்திராவில் பல பொறியியல் மற்றும் தொழில் கல்வி கல்லூரிகள் செயல்படுவதால், ஆந்திராவில் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 8 சதவீத அளவுக்கு மட்டுமே, வேலைக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளிவருவதாக, நாஸ்காம் அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரி அளவான 25 சதவீதத்தை விட குறைவாகும்.

ஆந்திர உயர் கல்வித்துறை அதிகாரிகள்:ஆந்திராவில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளில், முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. போதிய மற்றும் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. ஆனாலும், சிறப்பான வகையில் கட்டடங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தக் கல்லூரிகளை எல்லாம் மூட வேண்டும்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக